மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் என்பவர் 2,7ம் அதிபதியாக வருவார். இப்போது மேஷ லக்னத்திற்கு சுக்கிர தசை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். ![]() |
மேஷ லக்னத்திற்கு சுக்கிர தசை |
மேஷ லக்னத்திற்கு சுக்கிர தசை
உங்கள் ஜாதகத்தில் லக்னம் என்பது மேஷம் ஆகி சுக்கிரன் லக்னத்தில் இருந்து எத்தனையாவது வீட்டில் இருக்கிறார் என்பதை பார்த்து கொள்ளுங்கள்.
சுக்கிரன் 2,7ம் அதிபதியாக வரும் வீடுகள் ரிஷபம் மற்றும் துலாம் வீடு ஆகும். இந்த சுக்கிரன் குருவுக்கு அடுத்து இரண்டாம் இயற்கை சுபர் ஆவார்.
இருந்தாலும் குருவை விட சொகுசு தன்மையை கொடுக்க கூடியவர் சுக்கிரன் தான். குரு இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்பவர்.
சுக்கிரன் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், சொகுசாக இருக்க வேண்டும் என்று சொல்பவர்.
சுக்கிரனும் குருவும் ஒரு ஜாதகத்தில் கெடாமல் இருந்தால் அந்த ஜாதகர் நல்ல பண வாழ்க்கை, சுக போக வாழ்க்கையை பெறுவார்.
அதுவே சுக்கிரன் பகை கிரகமாகி சுக்கிரன் கெட்டால் காரகத்துவம் மூலமாக கெட்ட பலன்களை தருவார்.
பெண்களின் மூலம் அவமானம், அசிங்கம், கலைகளின் மேல் ஆசை வர வைத்து அதன் மூலம் சில தீய பலன்களை கொடுப்பார். காதல் தோல்வி ஏற்படுத்துவார்.
இது போன்று நிறைய கெடுதல்களை செய்வார். சுக்கிரன் லக்ன யோகர் ஆகி வலுவாக இருந்தால் வீடு, வண்டி, வாகனம், மனைவி என்று சுக போக வாழ்க்கையை தருவார்.
இவர் காமத்தை தருபவர். ஆண் என்றால் பெண்ணையும் பெண் என்றால் ஆணையும் அறிமுக படுத்தி விடுபவர். அவர் நீசம் அடைந்தாலும் பரவாயில்லை.
முக்கியமாக சனி, செவ்வாய், ராகு உடன் சேர்ந்து பாவத்துவம் அடையாமல் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மேஷ லக்னத்தை பொறுத்த வரை சுக்கிரன் என்பவர் மாரகாதிபதியாக வருவார். மேஷம் லக்னத்தின் லக்னாதிபதி செவ்வாய்க்கு சுக்கிரன் எதிர் அணி கிரகம் ஆகும்.
மேஷ லக்னத்திற்கு மாரகம் அல்லது மாரகத்திற்கு நிகரான துன்பத்தை செய்யும் கிரகமாக சுக்கிரன் வருவார்.
எனவே சுக்கிரன் மேஷ லக்னத்திற்கு 3,6,10,11ல் மறைந்து இருந்தால் நல்ல பலன்கள் செய்வார்.
இப்போது சுக்கிரன் 12 வீடுகளிலும் இருக்க மேஷ லக்னத்திற்கு சுக்கிர தசை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
![]() |
12 வீடுகளிலும் சுக்கிரன் இருக்க சுக்கிர தசை |
மேஷ லக்னத்திற்கு சுக்கிர தசை (லக்னத்தில் சுக்கிரன்)
லக்னத்தில் குருவுக்கு அடுத்த நிலையான சுப கிரகம் சுக்கிரன் இருப்பது நல்லது. எல்லா லக்னத்திற்குமே லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் நல்ல பலன் அமையும்.
எந்த லக்னத்தை எடுத்து கொண்டாலும் சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் லக்னத்தில் இருப்பது நல்லதல்ல என்பது போல சுக்கிரன், குரு போன்றோர் லக்னத்தில் இருப்பது நல்லது.
இங்கு லக்னத்தில் சுக்கிரன் இருக்கும்போது உறுதியான உடல், உறுதியான மனம், எதையும் சமாளிக்கும் தன்மை, எதையும் எதிர்கொள்ளும் நேர்கொண்ட பார்வை பெற்ற அமைப்பு பெறும்.
சுக்கிரனுக்கு செவ்வாய் வீடு பகை வீடு என்றாலும் சுப கிரகம் லக்னத்தில் இருந்து நல்ல மேன்மையான பலனை தரும்.
லக்னத்தில் இருந்து தனது 7ம் வீட்டை பார்ப்பதால் நல்ல மனைவி, நல்ல நண்பர்கள், நல்ல சொகுசு நிலை போன்றவை சுக்கிர தசையில் அமையும்.
இந்த சுக்கிரன் சனி ராகு தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். செவ்வாயுடன் இணைத்து இருந்தால் ரொம்ப நல்ல பலன் அமையும்.
செவ்வாய் சுக்கிரனால் சுபத்துவம் பெறும். மேஷ லக்னத்திற்கு லக்னத்தில் செவ்வாய் இருக்க கூடாது என்று பார்த்தோம்.
இப்போது சுக்கிரன் சேர்க்கை பெற்று இருந்தால் செவ்வாயின் வீரம் விவேகம் ஆகி, கோவம் கட்டுபடுத்தப் பட்டு நல்ல பலன்கள் அமையும்.
மேஷ லக்னத்திற்கு சுக்கிர தசை (2ல் சுக்கிரன்)
2ம் வீடு சுக்கிரனின் வீடு. அங்கு சுக்கிரன் இருந்தால் ஆட்சி பலம் பெற்று 8ம் வீட்டைப் பார்ப்பார். அப்போது 8ம் வீடும் சுபத்துவ படும்.
இரண்டாம் இடம் தன ஸ்தானம் என்பதால் நல்ல தனம் கிடைக்கும். நல்ல குடும்பம் அமையும். இனிமையாக பேசுவார்கள். இரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருப்பது நல்ல மேன்மையான அமைப்பு.
மேஷ லக்னத்திற்கு சுக்கிர தசை (3ல் சுக்கிரன்)
மேஷ லக்னத்திற்கு 3ம் வீடு புதனின் மிதுன வீடு. இது சுக்கிரனின் நண்பனின் வீடு என்பதால் இங்கு சுக்கிரன் இருப்பது நல்ல பலனை தரும்.
எந்த இடத்திலும் சனி, ராகுவுடன் சேர கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அப்படி சேர்ந்தால் நல்ல பலன் அமையாது.
3ம் இடத்தில் சுக்கிரன் நட்பு வீட்டில் இருந்து 9ம் இடமாகிய பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பது நல்ல நிலை.
அதே நேரத்தில் 3ம் இடம் முயற்சி ஸ்தானத்தில் இருப்பது நல்ல பலன்.
மேஷ லக்னத்திற்கு சுக்கிர தசை (4ல் சுக்கிரன்)
மேஷ லக்னத்திற்கு 4ம் வீடு சந்திரனின் கடக வீடு. இங்கு சுக்கிரன் அவருக்கு ஆகாத பகை வீட்டில் இருப்பது நல்ல நிலை இல்லை.
இருந்தாலும் சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருக்கும் பட்சத்தில் சனி, ராகுவுடன் இணையாத பட்சத்தில் சுக்கிரன் திக் பலம் பெற்று நல்ல பலன்களை தருவார்.
சந்திரன் அமாவாசையாக அல்லது அமாவாசை பக்கத்தில் உள்ள சந்திரனாக இருக்க கூடாது.
மேஷ லக்னத்திற்கு சுக்கிர தசை (5ல் சுக்கிரன்)
இங்கு 5ம் வீடு சூரியனின் சிம்ம வீடு. இதுவும் சுக்கிரனுக்கு பகை வீடு என்றாலும் 5இல் சுப கிரகம் இருப்பது நல்லது.
எனவே பகை வீட்டில் இருந்து கொண்டு முனங்கி கொண்டே ஓரளவு நல்ல பலனை தருவார். ஆனால் பெரிய மேன்மையை தர மாட்டார்.
6ம் வீட்டில் சுக்கிரன்
இங்கு 6ம் வீடு கன்னி வீடு. இங்கு சுக்கிரன் நீசம். இங்கு சுக்கிரன் இருக்கவே கூடாது. பொதுவாகவே 6,8,12 மறைவு ஸ்தானங்கள்.
6ம் வீட்டில் செவ்வாயின் பகை கிரகமான சுக்கிரன் நீசம் பெற்று இருப்பது தீய பலன்களை தரும்.
அதுவும் சனி, ராகு போன்ற பாவ கிரக தொடர்பு பெற்று விட்டால் அவ்வளவு தான். மிகுந்த தீய பலன்கள் நடக்கும்.
ஒருவேளை சுக்கிரன் தனித்து இருந்து பௌர்ணமி சந்திரன் பார்வை பெற்று இருந்தால் நல்ல பலன்களை தருவார். அதே நேரத்தில் 7ம் அதிபதி நீசம் அடைய கூடாது.
7ம் வீட்டில் சுக்கிரன்
7ம் வீட்டில் சுக்கிரன் துலாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது ரொம்ப நல்ல பலனை தருவார்.
நல்ல மனைவியை தருவார். சுப கிரகம் 7ம் இடத்தில் இருந்து லக்னத்தை பார்ப்பது நல்ல அமைப்பு.
சுப கிரகம் லக்னம் அல்லது லக்னாதிபதியை தொடர்பு கொண்டு இருந்தால் அவன் ரொம்ப நல்லவனாக சாதிக்க பிறந்தவனாக இருப்பான்.
எனவே 7இல் தனி சுக்கிரன் அமர்ந்து பாவ தொடர்பு இல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது.
8ம் வீட்டில் சுக்கிரன்
8ம் வீடாகிய விருச்சிகத்தில் சுக்கிரன் மறையும் போது 8ம் வீட்டு ஆதிபத்தியமான நல்ல ஆயுள், திடீர் அதிர்ஷ்டம், வெளிநாட்டு தொடர்பு, பங்குசந்தை லாபம் போன்ற நிலையை சுக்கிர தசையில் தருவார்.
அதே நேரத்தில் மேஷ லக்னத்தின் 2ம் வீடாகிய தனது ரிஷப வீட்டை பார்ப்பது நல்ல அமைப்பு.
இருந்தாலும் சுக்கிரன் சனி, ராகு, அமாவாசை சந்திரன் போன்ற கிரகத்தோடு தொடர்பு பெற்று பாவத்துவம் அடையாமல் இருந்தால் நல்லது.
மறைந்து இருந்து 2ம் வீடு தன ஸ்தானத்தை பார்ப்பதால் லஞ்சம், நேர் வழியில் வராத பணம் போன்ற மறைவான தன லாபங்களை தருவார்.
9ம் வீட்டில் சுக்கிரன்
மேஷ லக்னத்திற்கு 9ம் வீடு குருவின் தனுசு வீடு ஆகும். இங்கு சுக்கிரன் என்ற சுப கிரகம் இன்னொரு சுப கிரக வீட்டில் இருக்கிறார்.
9ம் இடத்தை குறிக்கும் தந்தைக்கு மேன்மை, தந்தை வழி அமைப்புகள் அனைத்தும் நன்றாக இருக்கும்.
இங்கு சுக்கிரன் தனித்து இருப்பது நல்லது. மற்ற கிரகத்தோடு சேர்க்கை பெற்றால் கலப்பு பலன்களை எதிர்பார்க்கலாம்.
10ம் வீட்டில் சுக்கிரன்
10ம் வீடு என்பது சுக்கிரன் நண்பனின் சர வீடு. அதாவது சனியின் மகர வீடு.
இங்கு சுக்கிரன் தனித்து இருப்பது அல்லது சுபத்துவம் பெற்று இருப்பது மேஷ லக்ன காரர்களுக்கு மிகுந்த நல்ல பலன்களை தருவார்.
சுப கிரகம் கேந்திரத்தில் இருந்தால் கேந்திராதி பத்திய தோஷம் என்பார்கள். ஆனால் சுக்கிரனுக்கு கேந்திராதிபத்திய தோஷம் எல்லாம் அந்த அளவுக்கு வேலை செய்யாது.
புதன், குருவுக்கு மட்டுமே சில குறிப்பிட நிலையில் மட்டுமே வேலை செய்யும். எனவே 10இல் சுக்கிரன் இருப்பது மிகவும் நல்ல பலன்.
11ம் வீட்டில் சுக்கிரன்
இதுவும் சுக்கிரனின் நண்பனாகிய சனியின் கும்ப வீடு. மகரம், கும்பம் ஆகிய வீடுகளில் சுக்கிரன் இருக்கும் போது சுக்கிரன் உச்சம் அடையும் நிலைக்கு அருகில் இருப்பதால் ஒளி பொருந்திய நிலையில் இருப்பார்.
இங்கு சுக்கிரன் இருப்பது எல்லா வகையிலும் நல்ல பலனை பெறலாம். அதுவே இங்கு சுக்கிரன் பாவ தொடர்புகள் பெற்று இருந்தால் அந்த நல்ல பலன் குறையும்.
12ம் வீட்டில் சுக்கிரன்
இது குருவின் மீன வீடு. இங்கு சுக்கிரன் உச்சம் பெறுவார். எனவே கெடுதல்கள் இருக்கவே இருக்காது.
சுக்கிரனுக்கு 12ம் இடம் மறைவு ஸ்தானம் கிடையாது என்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
12ம் இடம் சுபத்துவம் பெறுவதால் வெளிநாட்டு தொடர்பு, வெளிநாட்டு வேலை, தூர இடங்களுக்கு நகர்த்தி மிகுந்த நல்ல பலன்களை தருவார்.
சுக்கிரன் உச்சம் பெறுவதால் சுக்கிரனின் காரகத்துவம் அனைத்தும் நிறைவாக கிடைக்கும்.
6ம் அதிபதி புதன் எப்படி இருக்கிறார் என்பதை பொறுத்து சுக்கிரன் 12ம் இடத்தில் என்ன செய்ய போகிறார் என்பதை கணக்கிடலாம்.
இருந்தாலும் அதிக கெடுதல்கள் நடக்காது. 8,12ம் இடங்கள் சுபத்துவம் பெற்றால் வெளிநாட்டு வாழ்க்கை, பங்கு சந்தையில் நல்ல லாபம் போன்றவை அமையும். எனவே இங்கு சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பு.
பொறுப்புத் துறப்பு:
இந்த ஜோதிட கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அல்லது கணிப்புகளின் நம்பகத் தன்மைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இங்கே உள்ள தகவல்கள் அனைத்தும் பல தரப் பட்ட ஊடகங்கள்/சொற்பொழிவுகள்/ஜோதிடர்கள்/செய்திகள் மற்றும் நாங்கள் கற்று தெரிந்த சில ஜோதிட அறிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து இங்கே வழங்கப் பட்டுள்ளன. எங்களின் நோக்கம் ஜோதிட தகவல்களை வழங்குவது மட்டும் தான். எனவே பயனாளர்கள் இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி கொள்வது முழுக்க முழுக்க பயனாளர்களின் பொறுப்பாகும்.
0 Comments