![]() |
ஏழரை சனி கோச்சார நிலை |
ஏழரை சனி என்றால் என்ன? அது எப்போது வேலை செய்யும்
நீங்கள் எந்த ராசியாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் ஜாதகத்தில் சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடம் உங்களின் ராசி ஆகும். அந்த ராசி இருக்கும் இடத்திற்கு 12,1,2ம் இடத்திற்கு கோச்சார சனி வரும்போது அது ஏழரை சனி என்று கூறப்படுகிறது.
சனியின் பாதிப்புகள் என்று பார்க்கும்போது கோச்சார நிலையாகிய தற்போதைய கிரகங்களின் நிலையை வைத்து கணக்கிட வேண்டும். எனவே நீங்கள் என்ன ராசி என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
தற்பொழுது சனி நமது ராசியில் இருந்து எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்பதை பொறுத்து அந்த சனி நம் வாழ்வில் என்ன செய்ய போகிறார் என்பதை நிர்ணயிக்கலாம்.
லக்னம் எல்லாம் கோச்சார சனிக்கு பார்க்க வேண்டியது இல்லை. சனியின் பாதிப்புகள் ராசியின் அடிப்படையில் நடப்பது. லக்னத்தை பார்த்து குழம்ப வேண்டாம்.
சனி கிரகம் தான் கடைசியாக தூரத்தில் இருக்கும் கிரகம். எனவே சனி ஒரு முறை சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகிறது. அதாவது மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு வீட்டிலும் இரண்டரை வருடங்கள் பயணம் செய்யும்.
ஆக மொத்தம் 12 வீட்டிலும் பயணம் செய்ய 30 வருடங்கள் ஆகிறது. அப்படி ஒவ்வொரு வீட்டிலும் இரண்டரை வருடங்கள் இருக்கும் பொழுது அந்த சனி நமது ராசியில் இருந்து எத்தனையாவது வீட்டில் இருக்கிறார் என்று பார்த்து எந்த வகையான சனி என்று நிர்ணயிக்க வேண்டும்.
எல்லா வகை சனியுமே நம்மை கெடுத்து விடாது. நமக்கு நல்ல பலன்களை அள்ளி கொடுக்கக் கூடிய சனி வகைகளும் உண்டு.
அதே நேரத்தில் நமக்கு யோகமான தசை புக்தி நடப்பில் இருக்கும்போது இந்த ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி எல்லாம் வந்தால் நமக்கு எந்த தீமையும் செய்வதில்லை.
ஏழரை சனி வந்ததே தெரியாமல் போய் விடும். தீங்கு செய்யும் தசை புக்தி நடப்பில் இருந்தால் சனி வாழ்க்கையை சுழற்றி போட்டு விடும். எனவே எல்லாரும் இந்த சனிக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
அதே நேரத்தில் சந்திர அதியோகம் என்ற அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருந்தால் அதாவது ஒளி பொருந்திய பௌர்ணமி சந்திரன் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் இந்த சனி அவ்வுளவு பாதிப்புகள் தருவதில்லை.
ஏனெனில் சந்திர அதியோகம் இருந்தால் சந்திரன் ஒளி பொருந்திய நிலையிலும் சுப கிரங்களின் பார்வையிலும் சந்திரன் இருக்கும். எனவே இந்த சந்திரனை கோச்சார சனி கடக்கும் போது பெரிய பாதிப்புகள் நடப்பதில்லை.
சந்திர அதியோகம் இல்லாமல் இருந்து தீய தசை புக்தி நடப்பில் உள்ளவர்கள் மட்டுமே இந்த சனியின் பாதிப்புகளை நினைத்து அஞ்ச வேண்டும். சரி இப்பொழுது சனியின் 12 வகைகளையும் பாதிப்புகளையும் பற்றி பார்க்கலாம்.
சனியின் வகைகள் மற்றும் பாதிப்புகள்
சனியின் வகைகள்
இதில் ஏழரை சனி என்று குறிப்பிடப் படுவது நமது ராசிக்கு 12,1,2ம் இடங்களில் சனி இருக்கும்போது உள்ள ஏழரை வருடங்கள் ஆகும்.
அதாவது விரைய சனி, ஜென்ம சனி, பாத சனி மூன்றையும் சேர்த்து தான் ஏழரை சனி என்று குறிப்பிடுகிறோம்.
ராசிக்கு 12,1,2ம் வீடுகளை கடக்க ஒரு வீட்டுக்கு இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை வருடங்கள் இந்த ஏழரை சனி பாடாய் படுத்தி விடும்.
ஆக இப்படி உங்கள் ராசிக்கு எந்த இடத்தில் தற்பொழுது சனி பயணம் செய்கிறார் என்பதை அறிந்து எந்த மாதிரியான பலன் அமையும் என்று தெரிந்து கொள்ளலாம்.
முதலில் ஏழரை சனியை பற்றி பார்த்து விடலாம். ஏழரை சனியின் ஆரம்பம் விரைய சனி. அதாவது ராசிக்கு 12ம் இடத்தில் சனி வரும்பொழுது விரைய சனி நடக்கிறது.
ராசிக்கு 12ம் இடம் - ஏழரை சனி (விரைய சனி)
ராசிக்கு 12ம் இடம் என்பது அயன சயன போக ஸ்தானம். இது ஏழரை சனியின் ஆரம்ப பகுதி. இந்த விரைய ஸ்தானத்தில் சனி வரும் போது தேவை இல்லாத வீண் செலவுகளை ஏற்படுத்தும்.
உங்கள் ஜாதகத்தில் எந்த அளவுக்கு கர்மா உள்ளதோ அந்த அளவுக்கு வீண் விரையங்களை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் அசுப விரையங்களை சுப விரையமாக மாற்றி கொள்வது சிறந்தது.
இல்லையேல் தேவையில்லாத வருமானத்திற்கு மீறிய செலவுகள் தானாக வரும். சில பிரச்சினைகளை ஏற்படுத்தி விரையங்களை உருவாக்கும்.
இதன் மூலம் கடனும் உருவாகி விடும். ஆரோக்கியம் மற்றும் தொழிலில் பாதிப்புகள் உருவாகும்.
பொதுவாக சனி நீங்கள் வைத்திருக்கும் வாகனங்கள் பழுதடைதல், விபத்துக்கள் ஏற்படுத்தி மருத்துவ செலவுகள், வம்பு வழக்கு உருவாக்கி வக்கீல் செலவு போன்ற தேவையே இல்லாத செலவுகளை தான் கொடுப்பார்.
உங்களுக்கு வரும் வருமானத்தை குறைத்து அல்லது வருமானம் இல்லாத நிலையை உருவாக்கி செலவுகளை இழுத்து விட்டு உங்களை பலவித இன்னல்களுக்கு உட்படுத்துவார்.
அதே நேரத்தில் இந்த ஏழரை சனியில் திருமணம், வீடு மனை வாங்குதல் போன்ற அமைப்பையும் தந்து சுப செலவுகளையும் ஏற்படுத்துவார்.
ராசிக்கு 1ம் இடம் - ஏழரை சனி (ஜென்ம சனி)
1ம் இடம் ஜென்ம ஸ்தானம் எனப்படுகிறது. உங்கள் ராசியிலேயே சனி சஞ்சாரம் செய்யும் போது ஜென்ம சனி உருவாகிறது. இது ஏழரை சனியின் மத்திம பகுதி.
ஜென்ம சனி நடக்கும்போது எதை எடுத்தாலும் அதில் தடை உருவாகும். குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள், மன உளைச்சல், மன குழப்பம், தடுமாற்றம் போன்றவை உருவாகும்.
நீங்கள் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் சில அவமானங்களை ஏற்படுத்தி மன சஞ்சலம அடைய வைப்பார். இந்த நேரத்தில் பல்வேறு இழப்புகளை கொடுத்து துன்பத்துக்கு ஆளாக்குவார்.
இது போல நிறைய கஷ்டங்களை கொடுத்து உலக அனுபவங்களை புரிய வைப்பார். இந்த நேரத்தில் தான் நம் கூட இருப்பவர்கள் யார் என்பதை புரிய வைப்பார்.
யார் உண்மையானவர் யார் பொய்யாக நடிப்பவர்கள் என வாழ்க்கையில் எல்லாம் புரிந்து விடும். எப்பொழுதுமே நமக்கு பெரிய கஷ்டங்கள் நடக்கும்போது தான் யார் நமக்கு உதவுவார் என்பதே தெரியும்.
ராசிக்கு 2ம் இடம் - ஏழரை சனி (பாத சனி)
2ம் இடம் என்பது தன, வாக்கு குடும்ப ஸ்தானம் ஆகும். இது ஏழரை சனியின் கடைசி பகுதி. இதை பாத சனி என்று அழைக்கிறோம். 2ம் இடத்தில் சனி வரும் போது எதிலும் நிதானம் தேவை.
நம் வாழ்க்கை நல்ல திசையில் மாறக் கூடிய ஒரு நல்ல நிலையை இந்த பாத சனி உருவாக்கி கொடுக்கும்.
இந்த நேரத்தில் தான் நமக்கு பணத்தின் அருமை, நேரத்தின் அருமை, உண்மையான நண்பர்கள் யார், துரோகிகள் யார் என்று பாடம் புகட்டுவார். உறவினர்களின் தராதரத்தை புரிய வைப்பார்.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி கொடுப்பார். விரைய சனி, ஜென்ம சனியில் பட்ட கஷ்டங்களை போல இந்த பாத சனி கஷ்டங்கள் தருவதில்லை.
அந்த கஷ்டத்தின் பலனாக பல வித அனுபவங்களை நமக்கு கொடுப்பார். அந்த வாழ்க்கை அனுபவத்தை வைத்து நாம் முன்னேறி செல்ல வேண்டும். பெரிய முன்னேற்றத்திற்காக நாம் நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும்.
ராசிக்கு 3ம் இடம் - சகாய சனி
3ம் இடம் என்பது தைரிய ஸ்தானம் ஆகும். இங்கு சனி வரும் போது ஏழரை சனி முற்றிலுமாக முடிந்து விடும்.
மனதில் நல்ல தெளிவு இருக்கும். சண்டை சச்சரவு இருந்த குடும்ப வாழ்க்கை சீராகி விடும். நல்ல ஒற்றுமை பிறக்கும். நல்ல சந்தோசம் கிடைக்கும்.
பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட நிலை போய் நல்ல வருமானம் வந்து லாபம் மேல லாபம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை தரம் உயரும். இதுவரை செய்த முயற்சி வெற்றி அடையாமல் இருந்திருக்கும்.
அந்த முயற்சி எல்லாம் இப்போது எளிதாக நிறைவேறும். தாழ்வு மனப்பான்மை எல்லாம் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். இழந்த செல்வம் திரும்ப வரும்.
ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். எந்த பிரச்சினை இதுவரை இருந்ததோ அந்த பிரச்சினை எல்லாம் தீர்வு அடையும். நல்ல அந்தஸ்து கௌரவம் கிடைக்கும்.
ஆனால் இது போன்ற நிலைகளில் தான் நாம் அவசர படாமல் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். இது நல்ல காலம் என்றே கூறலாம்.
ராசிக்கு 4ம் இடம் - அர்தாஷ்டம சனி
4ம் இடம் என்பது அர்தாஷ்டம ஸ்தானம். இங்கு சனி வரும் போது பூர்வீக சொத்து பிரச்சினை வரலாம். உடல் நல பாதிப்புகள் உருவாகலாம்.
எதற்கெடுத்தாலும் வம்பு, தகராறு, கலகம் உருவாகி தனக்கு நடக்க இருக்கும் நல்ல விசயங்களை தானே கெடுத்துக் கொள்ளும் அமைப்பை உருவாக்குவார்.
புதிய முயற்சிகள் தடை பட்டு, முயற்சியை கை விடும் நிலைக்கு ஆளாக்குவார். உறவுகளால் வருத்தம், கல்வியில் மந்த நிலை போன்றவை உருவாகும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை.
ராசிக்கு 5ம் இடம் - பஞ்சம சனி
5ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். இப்பொழுது அர்தாஷ்டம சனி முடிவடைந்து விடுகிறது. தெளிவான சிந்தனைகள் இல்லாமல் எதிலும் நல்ல முடிவுகள் எடுக்க முடியாமல் மனதில் குழப்பம் ஏற்படும்.
வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். இருந்தாலும் அதிக தீமைகள் நடக்காது. ஓரளவு நல்ல பண வரவு இருக்கும். தடைகள் எல்லாம் நீங்கும் காலம் ஆகும்.
ராசிக்கு 6ம் இடம் - ரோக சனி
6ம் இடம் என்பது ருண ரோக சத்ரு ஸ்தானம். இந்த இடத்தில் சனி வரும் போது நமக்கு நடந்த பாதிப்புகள் குறையும். நமது எண்ணங்கள் அனைத்தும் நடக்கும்.
எதிரிகள் இருந்தால் அவர்கள் அழியும் நிலை உருவாகும். நோய் எல்லாம் சரி ஆகி உடல் மேம்படும். பயம் அனைத்தும் நீங்கும். இது ஒரு நல்ல காலம் என்றே கூறலாம். எல்லா ராசிக்கும் ஒரே மாதிரி பலன் ஏற்படுவதில்லை.
ராசிக்கு 7ம் இடம் - கண்டக சனி
7ம் இடம் என்பது சப்தம ஸ்தானம் ஆகும். இது 7ம் இடமாகிய களத்திற ஸ்தானம் என்பதால் கணவன் மனைவி கருத்து வேறுபாடு ஏற்படும்.
நண்பர்கள், கூட்டாளிகள் உடன் கருத்து வேறுபாடு ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை விலகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்காமல் போகும்.
பணியில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பிரச்சினை ஏற்படும். வேலை செய்வதற்கான நல்ல சூழல் அமையாது.
சிலருக்கு திருமண தடை ஏற்படும். எதிலும் தடை ஏற்படும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதையும் யோசித்து செயல்படுவது நல்லது.
ராசிக்கு 8ம் இடம் - அஷ்டம சனி
![]() |
அஷ்டம சனி கோச்சார நிலை |
8ம் இடம் என்பது அஷ்டம ஸ்தானம். இது ஒரு மறைவு ஸ்தானம். இங்கு சனி வரும் போது மிகவும் கவனம் தேவை.
திருமண தடை ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும். ஏழரை சனியில் ஏழரை வருடங்கள் நடக்கும் தீமைகள் இரண்டரை வருடங்களில் செய்து முடிக்கும் அதுதான் அஷ்டம சனி.
இந்த இடத்தில் தகுதிக்கு மீறிய கஷ்டங்களை கொடுத்து உலக அனுபவத்தை பெற வைப்பார். என்ன தான் கஷ்டம் கொடுத்தாலும் கடைசியில் நன்மை செய்து விட்டு போவது சனியின் இயல்பு.
சனியின் தீமைகள் ஒவ்வொரு ராசியையும் பொறுத்து மாறுபடும். சில ராசிகளுக்கு அவர் கெடுதல் செய்வதில்லை. சனியின் பகை ராசிகளுக்கு பெரிய தீமைகளை செய்வார்.
ராசிக்கு 9ம் இடம் - பாக்கிய சனி
9ம் இடம் பாக்கிய ஸ்தானம் ஆகும். அஷ்டம சனியில் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
தெய்வ வழிபாடு இருந்தால் நல்ல மேன்மையான பலன் கிடைக்கும். பணம், பொருளாதார நிலை மேம்படும்.
ராசிக்கு 10ம் இடம் - கர்ம சனி
10ம் இடம் ஜீவன ஸ்தானம். இங்கு சனி வரும்போது பெரிய பாதிப்புகள் இருக்காது. உங்கள் தொழில் வளர்ச்சி அடையும். தொழிலின் மூலம் நல்ல மேன்மை கிடைக்கும்.
ராசிக்கு 11ம் இடம் - லாப சனி
11ம் இடம் லாப ஸ்தானம் ஆகும். இங்கு சனி வந்தால் மிகவும் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். விவேகமாக செயல்பட்டால் நல்ல பலன்கள், நல்ல லாபங்கள் வரும்.
அது ஒவ்வொரு ராசிக்கும் மாறுபடும். சனியின் நட்பு ராசி என்றால் மிகவும் நல்ல பலன்கள் அமையும்.
சனி ஒவ்வொரு இடத்திற்கும் செல்லும்போதும் ஒரு சனி நடக்கிறது. ஆனால் ஏழரை சனியும் அஷ்டம சனியும் தான் பெரிதாக மக்களால் பார்க்க படுகிறது.
அந்த காலத்தில் தான் மக்கள் பெரிதும் பயப்படுகிறார்கள். எனவே அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்குமா என்று தேடுகிறார்கள்.
உண்மையை சொல்ல போனால் பரிகாரம் என்பது நமது மனம் திடமாக இருக்க நாமே செய்து கொள்வது. அதனால் எந்த பலனும் மாற போவதில்லை.
எனவே நாலு பேருக்கு நன்மை செய்து பொது நலமாக வாழும்போது சனி பெரிய தீமைகளை தர போவதில்லை. ஆனால் தீமைகள் தராமல் இருக்க மாட்டார்.
கெடுதல்கள் குறையலாம். எனவே சுய நலம் இல்லாமல் பெரியவர்களுக்கும் உடல் ஊனமுற்றோர்களுக்கும் உதவிகள் செய்வதே பெரிய பரிகாரம் ஆகும்.
0 Comments