![]() |
ஒன்பது கிரகத்தின் காரகத்துவம் |
கிரகத்தின் காரகத்துவம்
ஜோதிடத்தை பொறுத்த வரை மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன. அந்த 9 கிரகத்தின் காரகத்துவம் என்ன என்பதை பொதுவாக காணலாம்.
ஒன்பது கிரகங்கள் என்பவை சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், சுக்கிரன், புதன், சனி, ராகு, கேது ஆகும்.
ராகு, கேது நிழல் கிரகங்கள். அதற்கென்று தனியாக வீடு கிடையாது. அது எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டின் அதிபதி போன்று செயல்படும்.
போன பதிவில் ஒவ்வொரு வீடுகளின் ஆதிபத்தியம் பற்றி விரிவாக பார்த்தோம். இந்த பதிவில் ஒவ்வொரு கிரகத்தின் காரகத்துவம் பற்றி பார்க்க இருக்கிறோம்.
ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் அந்த கிரகத்தின் காரகத்துவம் அனைத்தும் நமக்கு கிடைக்கும்.
அதுவே ஆட்சி உச்சம் பெற்று மறைவு ஸ்தானத்தில் அமர்ந்தால் கிரகத்தின் காரகத்துவம் கிடைத்தாலும் அந்த வீட்டின் ஆதிபத்தியங்களும் நடக்கும்.
அப்போது மறைவு ஸ்தானத்தில் தீய பலன்கள் அதிகமாக உள்ளதால் அந்த தீய பலன்கள் அனைத்தும் நடக்கும்.
எனவே ஆட்சி உச்சம் என்று சந்தோச படாமல் அந்த கிரகம் இருக்கும் இடத்தை பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு லக்னத்தின் பகை கிரகங்களான அதாவது அஸ்டமாதிபதி, மாரகாதிபதி, பாதகாதிபதி மறைவு ஸ்தானத்தில் இருப்பது நல்லது. அந்த வீட்டின் ஆதிபத்தியங்களை கெடுக்கும்.
அப்போது மறைவு ஸ்தானத்தில் உள்ள தீய பலன்கள் நமக்கு கிடைக்காது. மறைவு ஸ்தானம் என்பது 6,8,12ம் இடம் ஆகும்.
சரி இந்த பதிவில் ஒவ்வொரு கிரகங்களின் பொதுவான காரகத்துவம் என்ன என்பதை விரிவாக காணலாம்.
![]() |
ஒன்பது கிரகத்தின் வீடுகள் |
சூரியன் கிரகத்தின் காரகத்துவம்
சூரியன் ஒரு அரை பாவர் ஆகும். சூரியன் சிம்மம் லக்னத்திற்கு அதிபதியாக வருகிறார். சூரியன் கிரகம் இது தான் தலைமை கிரகம் ஆகும்.
ஒளி பொருந்திய கிரகம். அரசாங்க கிரகம். தலைமை பதவி மற்றும் அப்பாவை குறிக்கும் கிரகம். அப்பா என்றால் தலைமை. குடும்பத்தை நிர்வாகம் பார்ப்பவரை குறிக்கும்.
சூரியனை பிதுர் காரகன் என்றும் அழைப்பர். பிதுர் என்றால் அப்பா மற்றும் முன்னோர்களை குறிக்கும். தந்தை வழி உறவுகள், தந்தையின் சொத்துக்களையும் குறிக்கும்.
இது அரசன், ராஜ்ய பதவிகளை குறிக்கும். அரசாங்க தொடர்பு, நிர்வாகம் செய்யும் திறமை, அரசாங்கத்திற்கு செய்யும் சேவை, அதிகாரம் போன்றவைகளையும் குறிக்கும்.
சூரியன் வலுவாக உள்ளவர்கள் தூய்மை, வலிமை, தெய்வ பக்தியுடன் இருப்பார்கள். புகழ், மதிப்பு, மரியாதை கிடைக்கும்.
தன்னம்பிக்கை, வைராக்கியம், மனித நேயம், தியாக மனபான்மை, கருணை, துணிச்சல், பிடிவாதம் போன்றவை இருக்கும்.
நல்ல பேச்சாற்றல் இருக்கும். வெளிச்சம், விளக்கு, காய்ச்சல், விபூதி, மந்திரம், கற்பூரம் போன்ற பொருட்களை குறிக்கும்.
ஒரு ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம் பெற்று வலுவாக இருந்தால் சூரியனின் காரகத்துவம் அனைத்தும் கிடைக்கும்.
சூரியன் குறிக்கும் உடல் பாகங்கள் மற்றும் சூரியன் சம்மந்தப்பட்ட வேலை/தொழில் என்ன என்பதையும் பார்க்கலாம்.
உடல் பாகங்கள்
தலை, வலது கண், முதுகெலும்பு, தண்டு வடம், இதயம், வயிறு.
சூரியன் தொழில்கள்
IAS, IFS, காவல் துறை, ராணுவம், அரசு வேலை, மருந்துப் பொருட்கள், வணிகம், சொந்த தொழில், பரம்பரை தொழில், செய்யும் வேலையில் தலைமை, தலைமை அரசு பதவிகள், அதிகார வேலை, அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர், மருந்து தயாரிப்பு, நீதிபதி, வழக்கறிஞர், தங்க நகை செய்பவர், கட்டுமான வேலை.
சந்திரன் கிரகத்தின் காரகத்துவம்
சந்திரன் இருக்கும் வீடு தான் நமது ராசி. சந்திரன் கடகம் லக்னத்திற்கு அதிபதியாக வருகிறார். சந்திரன் தான் நமது மனதை குறிக்கும்.
இவர் கெட்டால் மனம் கெடும். சந்திரன் தாயை குறிக்கும். ஒருவருக்கு தாய் மிக முக்கியம். அப்பொழுது சந்திரன் எந்த அளவுக்கு முக்கியம் என்று பாருங்கள்.
சந்திரன் மனோகாரகன், தாய் காரகன். மனம் நன்றாக இருந்தால் மட்டுமே அனைத்தும் கிடைக்கும். மனம் குழம்பி போனால் மனநோயாளியாக மாறி வாழ்க்கையே போய் விடும்.
மற்ற கிரகங்கள் அனைத்தும் வலுவாக இருந்தும் சந்திரன் கெட்டு விட்டால் அனைத்தும் வீணாகி விடும்.
எனவே மற்ற கிரகங்கள் வலு இல்லாமல் இருந்தாலும் சந்திரன் வலுவாக அமைவது ரொம்ப முக்கியம்.
சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருந்தால் பாவ கிரகமாக செயல்படும். வளர்பிறை ஒளி பொருந்திய சந்திரனாக இருந்தால் சுப கிரகமாக செயல்படும்.
எனவே சந்திரன் ஒளி பொருந்திய நிலையில் ஜாதகத்தில் இருப்பது முக்கியம்.
சந்திரன் என்பது தாய், தாய் வழி உறவுகள், மாமியார், அன்பு, பாசம், கருணை, அமைதி, சாந்தம், மனம், மகிழ்ச்சி, மன சஞ்சலம், உறுதியின்மை, அழகு, வசீகரம், அழகு பொருட்கள், வாசனை பொருட்கள், ஆடைகள், படுக்கை, தலையணை, பெண்கள், பெண்கள் வழியில் மேன்மை போன்றவை குறிக்கும்.
மேலும் பால், தயிர், மோர், வெண்ணெய் போன்ற திரவ பொருட்கள் நீர் தொடர்பான பொருட்கள் அனைத்தையும் குறிக்கும்.
இரத்தத்தில் உள்ள வெள்ளை அணு, நீராவி இயந்திரங்கள், அரிசி, தானியம், ஆறு, குளம், ஏரி, கடல் அனைத்தையும் குறிக்கும்.
நீரில் இருந்து கிடைக்கும் மீன், இறால், நண்டு, சங்கு, முத்து, உப்பு, சுண்ணாம்பு போன்றவைகளை குறிக்கும்.
நீரில் இருக்கும் படகு, கப்பல், மழை, மேகம் போன்றவைகளை குறிக்கும். வெள்ளை நிற பொருட்களை சந்திரன் குறிக்கும்.
சுற்றுலா செல்லுதல், பயணங்கள், இடம் மாற்றம் போன்றவைகளை குறிக்கும்.
கலை உணர்வு, கற்பனை, எழுத்தாற்றல், நடிப்பு, இசை, ஜோதிடம் போன்றவைகளையும் குறிக்கும். ஆலோசனை வழங்குதல், புகழ், செல்வம் ஆகியன அடங்கும்.
சந்திரன் கெட்டால் திருட்டு தனம், கள்ள காதல், ஒழுக்கம் அற்றவர், அவமானம் போன்றவை அடங்கும்.
உணவு பொருள், குங்குமம், குளிர் சம்மந்த நோய்கள் போன்றவைகளையும் குறிக்கும்.
உடல் பாகங்கள்
இடது கண், புருவம், முக அழகு, மார்பகம், சிறு நீரகம்.
சந்திரன் தொழில்கள்
திரவ பொருட்கள் சம்மந்தப்பட்ட தொழில், பால் வியாபாரம், பயிர் விவசாயம், நீர் பாசன துறை, உணவு பொருள் விற்பனை, சமையல் காரர், மளிகை கடை, மருந்து கடை, பெண் மருத்துவர், செவிலியர், சலவை காரர், நிதி நிறுவனம், விபச்சாரம்.
குரு கிரகத்தின் காரகத்துவம்
குரு இயற்கை சுப கிரகம். குரு பார்த்தால் அந்த இடம் சுபம் பெறும். ஆனால் குரு சில பகை கிரகங்களின் லக்னங்களுக்கு கெடுதல்களும் செய்யும்.
இவர் தனுசு மற்றும் மீனம் லக்னங்களுக்கு அதிபதியாக வருகிறார். குரு லக்னத்தை பார்த்தால் அவர் எந்த தீய எண்ணங்களும் வராத ரொம்ப நல்லவராக இருப்பார்.
குருவை தன காரகன், புத்திர காரகன் என்றும் அழைப்பர். செல்வத்தையும், புத்திர பாக்கியத்தையும் தரக் கூடியவர்.
வேதம், சாஸ்திரம், முனிவர், ஞானிகள், குழந்தைகள், தெய்வ பக்தி, யாத்திரை செல்லுதல், கோயில், பள்ளி, பசு மாடு, ஆன்மீகம், சமஸ்கிருத மொழி, பணம், தானம், தர்மம், தங்கம், ராஜ தந்திரம், பதவி போன்றவைகளை குறிக்கும்.
மேலும் பொறுமை, உத்தம குணம், மரியாதை, அந்தஸ்து, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நேர்மை, உண்மை, பொறுப்பு, மனித நேயம், ஒழுக்கம், பண்பாடு, ஆலோசனை, தத்துவம், யோகா பயிற்சி ஆகியன அடங்கும்.
நெய், தேங்காய், வெற்றிலை பாக்கு, தேன், கடலை, சீரகம், மஞ்சள், வெள்ளம், இனிப்பு சுவை, சந்தனம் போன்றவைகளும் குருவின் காரகத்துவத்தில் அடங்கும்.
உடலின் பாகங்கள்
மூளை, தசை, மூக்கு, வயிறு, தொப்பை.
குருவின் தொழில்கள்
குருக்கள், ஆசிரியர், ஆன்மீக பணிகள், தங்க நகை வியாபாரம், மேலாளர், வங்கி துறை, நீதி துறை, நிதி துறை, பணம் புழங்கக் கூடிய தொழில், வழக்கறிஞர், கல்வி அமைச்சர், பொருளாதார துறை, சமூகத்தில் அந்தஸ்து உள்ள வேலை, கல்வி துறை, நிர்வாகம் செய்தல், அலுவலகங்கள், பல்கலைக் கழகம், அறக் கட்டளைகள்.
செவ்வாய் காரகத்துவம்
இவர் முக்கால் பாவ கிரகம் ஆகும். இவர் மேஷம், விருச்சிகம் லக்னத்திற்கு அதிபதியாக வருகிறார். செவ்வாயை பூமி காரகன், சகோதர காரகன் என்றும் அழைப்பர்.
செவ்வாய் சுபத்துவமாக இருந்தால் சகோதரன் வழியில் ஆதரவு, ஆதாயம் கிடைக்கும். நிலம், பூமி வாங்கும் யோகம் அமையும்.
இந்த கிரகத்தின் காரகத்துவம் என்று பார்த்தால் நிலம், பூமி, மண் சம்மந்தப்பட்ட பொருள்கள், வறட்சி, நெருப்பு, அடுப்பு, வீண் சண்டை, கோபம், வெட்டு காயம், இரத்தம், இரத்த அழுத்தம், விபத்துகள், அறுவை சிகிச்சை, ஆயுதங்கள், துப்பாக்கி குண்டு, வீர தீர செயல், படை தலைமை, அதிகாரம், பகை உணர்வு, விரோதிகள், துணிச்சல், உற்சாகம், வீரியம், அதீத காமம், நடத்தை தவறுதல், விதவை பெண், விதவை பெண்ணுடன் உறவு, அடங்காத தன்மை போன்றவை ஆகும். மேலும் சகோதரன், மின்சார வாரியம், கராத்தே, சிலம்பு, குத்து சண்டை, பேராசை, கடன், திருட்டு, கருச்சிதைவு, தூண், மலை, கற்கள், சுரங்கம், பட்டறைகள் போன்றவைகளை குறிக்கும்.
செவ்வாயின் தொழில்கள் கீழே உள்ளன. செவ்வாய் சுபத்துவம் மற்றும் வலுவை பொறுத்து செவ்வாயின் நல்ல தொழிலா இல்லை கஷ்ட படும் தொழிலா என்பது அமையும்.
நமது உடல் பாகங்கள்
பற்கள், எலும்பு மஜ்ஜை, கருப்பை.
செவ்வாயின் தொழில்கள்
குயவர், செங்கல் சூளை வைத்திருப்பவர், விவசாயம், வீடு மனை விற்பனை செய்தல், நெருப்பு சம்மந்தப்பட்ட தொழில், தீயணைப்பு துறை, சமையல் காரர், உணவு விடுதிகள், அறுவை சிகிச்சை மருத்துவர், பல் மருத்துவர், கறி கடை, காவல் துறை, ராணுவம், ஆயுதங்கள் செய்யும் தொழில், மின்சார வாரியத்தில் வேலை, பொறியாளர், அரசு வேலை, சிற்பிகள், கல் உடைத்தல், மெக்கானிக், பவழ வியாபாரம்.
சுக்கிரன் காரகத்துவம்
இவர் குருவுக்கு அடுத்து உள்ள ஒரு இயற்கை சுப கிரகம் ஆகும். இவர் ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்திற்கு அதிபதியாக வருகிறார்.
சுக்கிரன் லக்னம் என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கும் நபராக இருப்பார். எதையும் என்ஜாய் பண்ணி சுற்றி திரியும் நபராக இருப்பார்.
இவரை களத்திர காரகன், வாகன காரகன் என்றும் அழைப்பர். களத்திரம் என்றால் மனைவி/கணவனை குறிக்கும். வாகனம் வாங்குவதற்கும், நல்ல மனைவி அமைவதற்கும் சுக்கிரன் நன்றாக இருக்க வேண்டும்.
சுக்கிரனின் காரகத்துவம் என்று பார்த்தால் மனைவி, மனைவியின் சகோதரி, மகள், கட்டில் மெத்தை, வீடு, வாகனங்கள், ஆடை, ஆபரணம், அலங்கார பொருட்கள், பூ, வாசனை பொருட்கள், ஆடம்பர பிரியர், கலைகளில் ஆர்வம், கதை, கவிதை, நடிப்பு, இசை, நடனம், பாடல், சிற்பம், காதல், காமம், கவர்ச்சி, கேளிக்கை விடுதிகள், உணவு, மது, மாது, சூது, இன்பம், போதை பொருள், உணர்ச்சி வச படுதல், விந்து, உடலுறவு, பாலியல் நோய், ரகசிய வாழ்க்கை, தாசிகள் தொடர்பு, நிறைய பெண்களுடன் உறவு போன்றவை அடங்கும்.
மேலும் அரச போக வாழ்க்கை, நவீன வசதிகள், புதுமை, கண்ணாடி, ஆடம்பர பொருள்கள், திரையரங்கம், ஒப்பனை செய்தல், அழகு நிலையம், வைரம், வெள்ளை நிறம், இனிப்பு ஆகியவைகளை குறிக்கும்.
உடல் பாகங்கள்
கன்னம், கருப்பை.
சுக்கிரன் தொழில்கள்
கலைஞர்கள், நடிகர்கள், பெண்களுக்காக செய்யப்படும் தொழில்கள், பெண்களை கொண்டு செய்யப்படும் தொழில்கள், வாகனங்கள் கொண்டு செய்யும் தொழில், பழரசம் விற்பனை, பாடகர், இசையமைப்பாளர், துணி வியாபாரம், வட்டி தொழில், வங்கி பணி, நகை/வெள்ளி/நவரத்தின கற்கள் வியாபாரம், மது வியாபாரம், விபச்சாரம்.
புதன் காரகத்துவம்
புதன் தனித்து இருந்தால் மட்டுமே இயற்கை சுப கிரகம் ஆகும். பாவ கிரகத்தோடு சேர்ந்தால் பாவத் தன்மை ஆகி விடும்.
இவர் மிதுனம், கன்னி லக்னத்திற்கு அதிபதியாக வருகிறார். புதன் என்றாலே புத்தி காரகன், கல்வி காரகன் என்று பொருள்.
புதன் வலுவாக இருந்தால் நல்ல கல்வியும் கூர்மையான புத்தியும் அமையும்.
இந்த கிரகத்தின் காரகத்துவம் என்று பார்த்தால் குடும்பம், தாய் மாமன், மைத்துனர், தங்கை, அத்தை, வசீகர தன்மை, காதல், காதலி, மொழி, கல்வி, புத்தகம், கணிதம், அறிவு, ராஜ தந்திரம், எழுத்தாற்றல், வித்தை, கதை, கவிதை, நடிப்பு, நாடகம், நடனம், சிற்பம், ஓவியம், சட்டம், நகைச்சுவை பேச்சு, பேச்சாற்றல், இடம் அறிந்து நடத்தல், தொலைபேசி, தந்தி, தூது செல்லுதல், நண்பர்கள், தபால், கடிதம், இளமை, கலகலப்பு, மென்மையான பொருட்கள், கோழைத் தனம், சாதுர்யம், சூது, சுய நலம், வாத நோய், பசுமை, இலை, தோட்டம், பச்சை நிறம், வெந்தயம், பெண்மை கலந்த சாயல் போன்றவை அடங்கும்.
உடல் பாகங்கள்
நெற்றி, தோள், நாக்கு, தொண்டை, கழுத்து, சருமம், கைகள், நரம்பு.
புதனின் தொழில்கள்
காது மூக்கு தொண்டை மருத்துவர், புத்தக பிரிண்டர், புத்தகம் விற்பனை செய்தல், ஆசிரியர், ஜோதிடர், ஆடிட்டர், கணக்கர், எழுத்தாளர், நடிகர், ஓவியர், வழக்கறிஞர், நகைச்சுவை நடிகர், தொலைத் தொடர்பு துறை, பத்திரிகை துறை, செய்தி நிறுவனங்கள், ஊடகத்தில் வேலை, தரகர், புலனாய்வு துறை, காவல் ஆய்வாளர், கைத் தொழில்கள், வியாபாரம், வர்த்தகம், அஞ்சல் துறை, தபால் காரர்.
சனி காரகத்துவம்
இவர் ஒரு முழு பாவக் கிரகம் ஆகும். இவர் மகரம், கும்பம் லக்னத்திற்கு அதிபதியாக வருகிறார்.
சனியை ஆயுள் காரகன், கர்ம காரகன் என்றும் அழைப்பர். ஆயுளுக்கும் தொழிலுக்கும் உரியவனாக இருக்கிறார்.
இதன் காரகத்துவம் என்று பார்த்தால் ஆயுள், மூத்த சகோதரன், தொழில், அடிமை வாழ்வு, அடிமை தொழில், வேலையாட்கள், சிறை படுதல், அரச தண்டனை, கெட்ட பெயர், கள்ளத் தனம், களவு போதல், நியாபக மறதி, கிழிந்த ஆடை, ஊனம், தீயோர் சேர்க்கை, சூதாட்டம், மது குடித்தல், ஊனமுற்ற பெண்ணுடன் உறவு, போதை பொருட்களை உபயோகித்தல், கஞ்சத் தனம், ஊர் ஊராய் திரிதல், சோம்பல், சோம்பேறி தனம், பிடிவாதம், தூக்கம், துன்பங்கள், வீண் கவலை, வீண் விவாதம், பழி வாங்கும் குணம், மரணம், அந்நிய மொழி, அந்நிய சம்மந்தம், செருப்பு, ஊனம் அடைதல், நரம்பு தளர்ச்சி, கடுகு, எள்ளு, தேயிலை, இரும்பு, எருமை, கருப்பு நிறம், டீ காபி போன்றவை சனி கிரகம் குறிக்கும்.
சனி வலுவாக இருந்தால் இந்த துன்பத்தை எல்லாம் தருவார். அதே நேரத்தில் ஆயுளையும் தருவார்.
உடலின் பாகங்கள்
தாடை, மூட்டு, முழங்கால், பாதம்.
சனியின் தொழில்கள்
கூலி தொழிலாளர்கள், குறைந்த ஊதிய வேலை, கல் மண் மணல் வியாபாரம், மர வியாபாரம், மர தொழிலாளி, செருப்பு தைப்பவர், செருப்பு வியாபாரம், துப்புரவு தொழிலாளி, முடிவெட்டும் தொழிலாளி, கட்டிட தொழிலாளி, சுரங்க தொழிலாளி, எண்ணெய் கடை, எண்ணெய் சுரங்கம், காவலாளி, ஆடு மாடு மேய்த்தல், பழைய இரும்பு வியாபாரம்.
ராகு காரகத்துவம்
ராகு பாவ கிரகம். இது இருக்கும் வீட்டின் அதிபதி போன்று செயல்படும். தனி வீடுகள் கிடையாது. ராகுவை போக காரகன், பாட்டன் காரகன் என்றும் அழைப்பர்.
இந்த கிரகத்தின் காரகத்துவம் என்று பார்த்தால் தந்தை வழி பாட்டன்/பாட்டி, உடல் ஆசை கொண்டவர், சோம்பல், அலட்சியம், தலை மறைவு வாழ்க்கை, நிழல், மாயாஜாலம், மாந்திரீகம், சூது, பொய், களவு, வஞ்சகம், ஒருவரை ஏமாற்றுதல், பேய் பிசாசு, பில்லி சூனியம், அடுத்தவரை கெடுத்தல், அரசாங்கத்திற்கு எதிரான செயல், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை, சிறை படல், வழக்கு, குடும்பத்தை விட்டு பிரிதல், மதம் மாற்றம், பைத்தியம், மயக்கம், விஷத்தால் மரணம், துஷ்ட பிராணிகளால் தொந்தரவு, பெண் மோகம், போதை, புகைப்படம், விபத்து, லஞ்சம், ஊழல், விதவை பெண், விதவையுடன் உறவு, விளையாட்டு மைதானம், அந்நிய மதம், வெளிநாட்டு பயணம், வறுமை, திடீர் அதிர்ஷ்டம், எதிர் பாராத நிகழ்வு, பித்த நோய், குஷ்ட நோய், வலிப்பு நோய், காச நோய் போன்றவைகளை குறிக்கும்.
எனவே ராகு வலுத்து லக்ன பகைவர் வீடுகளில் இருப்பது நல்லது அல்ல. யோகாதிபதி வீடுகளில் அமர்ந்தால் யோகத்தை அள்ளி கொடுப்பார். ராகு அமரும் இடத்தை பொறுத்து பலன் அமையும்.
உடலின் பாகங்கள்
வாய், உதடு, காது, குடல்.
ராகுவின் தொழில்கள்
கடத்தல், கீழ் தரமான தொழில், பாம்பாட்டி, பாம்பு பண்ணை, புகைப்பட கலைஞர், போதை மருந்து விற்பனை, விஷ மருந்து விற்பனை, வெடிமருந்து செய்தல், புலனாய்வு துறை, கூலி வேலை, சுமை தூக்கும் வேலை, கல் உடைத்தல், ஏமாற்றி பிழைத்தல், வெளிநாட்டு வர்த்தகம், விஞ்ஞானிகள்.
கேது காரகத்துவம்
கேது ஒரு பாவ கிரகம் என்றாலும் கெடுதல் செய்து ஞானத்தை கொடுத்து பின்பு நன்மை செய்யும் ஒரு கிரகம் ஆகும்.
ராகு போல் கொடுப்பார் இல்லை, கேது போல் கெடுப்பார் இல்லை என்பார்கள். ஆனால் அது இருக்கும் இடத்தை பொறுத்து தான் பலன் செய்யும்.
கேதுவுக்கும் தனி வீடுகள் கிடையாது. கேதுவை ஞான காரகன் என்றும் அழைப்பர். கஷ்டத்தை கொடுத்து ஞானம் பெற வைப்பார்.
கேது கிரகத்தின் காரகத்துவம் என்று பார்த்தால் தாய் வழி பாட்டன்/பாட்டி, மெளனம், தியானம், நிதானம், தவம், கோயில், காவி உடை, ஆன்மீகம், சந்நியாசம், துறவறம், புனித யாத்திரை, ஜோதிடம், தரிசனம், மோட்சம், எதிலும் பிடிப்பற்ற தன்மை, மன வெறுப்பு, விரக்தி அடைதல், பற்று பாசங்களை துறத்தல், மனம் பலவீனம், பழி வாங்கும் தன்மை, பாவ காரியங்கள், கொலை செய்யும் சிந்தனை, தற்கொலை, பைத்தியம், ஆணவம், ஏமாற்று வேலை, சிறை, வயிற்று வலி, உடல் பலவீனம், புத்திர குறைவு, மரம், செடி, மரங்களின் வேர், மூலிகை, சட்டம், வழக்கு, தடைகள், தாமதம், ரகசிய நடவடிக்கை, பசி, பட்டினி, அந்நிய மொழி, குஷ்டம் போன்றவைகள் ஆகும்.
உடல் பாகங்கள்
பிறப்புறுப்பு, ஆசன வாய், முடி, தாடி, நரம்பு.
கேதுவின் தொழில்கள்
விபச்சாரம், இயற்கை மூலிகை வியாபாரம், வைத்திய சாலை, மந்திர சக்தி மூலம் சிகிச்சை செய்பவர், குயவர், நூல் கயிறு திரித்தல், தையல்காரர், நெசவாளர், முனிவர்கள், ஞானிகள், யோகிகள், பிச்சைக் காரர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்த ஜோதிட கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அல்லது கணிப்புகளின் நம்பகத் தன்மைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இங்கே உள்ள தகவல்கள் அனைத்தும் பல தரப் பட்ட ஊடகங்கள்/சொற்பொழிவுகள்/ஜோதிடர்கள்/செய்திகள் மற்றும் நாங்கள் கற்று தெரிந்த சில ஜோதிட அறிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து இங்கே வழங்கப் பட்டுள்ளன. எங்களின் நோக்கம் ஜோதிட தகவல்களை வழங்குவது மட்டும் தான். எனவே பயனாளர்கள் இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி கொள்வது முழுக்க முழுக்க பயனாளர்களின் பொறுப்பாகும்.
0 Comments