![]() |
மேஷ லக்னத்திற்கு சனி தசை |
சனியின் பொதுவான தகவல்
மேஷ லக்னத்திற்கு சனி தசை பற்றி பார்க்கலாம். பொதுவாக சனி தசை 19 வருடங்கள் நடக்கும். சுக்கிரனுக்கு அடுத்த படியாக அதிக வருடங்களை கொண்டது சனி தசை தான்.
சனி ஆட்சி உச்சம் பெற்று வலுத்து இருந்தால் சனியின் தன்மைகளான வறுமை, உடல் உழைப்பு, சோம்பேறி தனம், எதையும் மெதுவாக செய்தல் போன்றவை உருவாகும்.
எனவே ஆட்சி உச்சம் என்றால் நன்மை செய்வார்கள் என்று எடுத்துக் கொள்ள கூடாது. எனவே ஆட்சி உச்சம் பெற்று வலிமையான சனி அதன் வீட்டின் ஆதிபத்திய விசயங்களை செய்தாலும் சனியின் காரகத்துவத்தை கெடுப்பார்.
என்றுமே கெடுதல்களை செய்ய கூடியவர் சனி, அவர் அங்கு சுபத்துவம் பெற்று இருந்தால் தன்னுடைய காரகத்துவத்தின் வழியே நல்ல பலன்களை தருவார்.
எனவே சனி நேரிடையாக ஆட்சி உச்சம் பெற்று வலு பெறுவது நல்லதல்ல.
சனி மறைமுகமாக சுபத்துவம், திக் பலம், கேதுவுடன் இணைதல் போன்ற அமைப்பை பெறும்போது சனி சூட்சம வலு பெற்று நல்ல பலன்களை செய்கிறார்.
சனி என்பவர் சுக்கிர அணி லக்னங்களுக்கு நல்ல பலனை செய்வார். இவர்களுக்கு ஆதிபத்தியம் காரகத்துவம் இரண்டையும் செய்வார்.
மேஷ லக்னத்திற்கு சனி தசை
சனி மேஷத்திற்கு 10, 11ம் அதிபதியாக வருகிறார். மேஷ லக்னத்தின் அதிபதி செவ்வாய்க்கு சனி பகை கிரகம் என்பதால் பெரிய யோகங்களை கண்டிப்பாக கொடுக்க மாட்டார்.
நல்ல நிலையில் இருந்தாலும் கூட ஒரு சில இடங்களில் இருக்கும் போது மட்டுமே ஓரளவு நல்ல பலனை மட்டுமே தருவார்.
சனி 10ம் அதிபதி ஆவதால் சனி நல்ல நிலையில் இருந்தால் நல்ல தொழில், வேலை கிடைக்க செய்வார்.
இந்த சனி தசையில் வேலை தொழிலில் நல்ல இடமாற்றம் பணிமாற்றம், பிரமோஷன் கிடைத்தல் போன்றவை உண்டாகும்.
11ம் அதிபதி ஆவதால் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி உண்டாகும். சனி வலுவாக சுபத்துவம் பெற்று ஜாதகத்தில் இருக்க வேண்டும்.
அவரவர் வயதை பொறுத்து கல்வியில் வெற்றி, வேலையில் வெற்றி, திருமணத்தில் வெற்றி போன்ற அமைப்பு உருவாகும்.
11ம் இடம் லாபஸ்தானம் என்பதால் எடுத்த காரியத்தில் நல்ல லாபம் கிடைக்கும். லாபம் என்றால் பணம் மட்டும் கிடையாது, மற்ற வகையிலும் நல்ல லாபம், பொருள் லாபம் கிடைக்கும்.
பிரிந்து வாழும் தம்பதியினருக்கு இரண்டாம் திருமண அமைப்பை ஏற்படுத்தி கொடுப்பார்.
ஏனெனில் 11ம் இடம் இரண்டாம் திருமண ஸ்தானம். மக்கள் சம்மந்தப்பட்ட வேலைகள் மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு போன்றவை அமையும்.
சனி ஆயுள் காரகன் என்பதால் சனி தசையில் நல்ல ஆயுளுடன் வாழ்வார்கள். சனி குருவுடன் இணைந்தால் ஆன்மீக எண்ணங்களை கொடுப்பார்.
என்ன தான் லக்னாதிபதிக்கு பகைவராக இருந்தாலும் 10,11ம் இடத்தின் தொழில், வெற்றி, லாபம் போன்றவற்றை கண்டிப்பாக கொடுப்பார். அதற்கு அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
சனியின் காரகம் என்பது மந்த நிலை, வறுமை, நிதானம், பொறாமை, நய வஞ்சக எண்ணம் போன்றவையும் தருவார்.
சனி நன்மை தீமை இரண்டுமே செய்து தான் ஆகும். ஆதிபத்தியம் காரகத்துவம் ஒன்று நன்றாக இருந்தால் ஒன்று கெடுதலாக இருக்கும்.
உடலை விற்று பிழைக்கும் தன்மை, உடலை வருத்தி பிழைக்கும் தன்மை அனைத்தும் சனி தருபவை தான். எனவே சனி நேர் வலு இழந்து சுபத்துவம் பெறுவது நல்லது.
சரி இப்பொழுது 12 இடங்களிலும் சனி இருக்க மேஷ லக்னத்திற்கு சனி தசை என்ன மாதிரியான பலன்களை தருவார் என்று பார்க்கலாம்.
![]() |
12 வீடுகளிலும் சனி இருக்க சனி தசை |
மேஷ லக்னத்திற்கு சனி தசை (லக்னத்தில் சனி)
மேஷ லக்னத்தில் சனி இருந்தால் இங்கு சனி நீசம் அடைவார். சனி நீசம் அடைவது நல்லது. அதன் காரகத்துவம் அடிபடும்.
ஆனால் நீசம் பெற்று வக்கிரம் அடைய கூடாது. அப்படி அடைந்தால் சனி உச்சம் பெற்ற தன்மையை செய்து விடும்.
அதே போல, நீசம் அடைந்தாலும் லக்னத்தில் சனி இருப்பது ஜாதகருக்கு சனியின் குணம் அப்படியே வந்து விடும்.
மேஷ லக்னம் என்பது வேகமான வீரமான இளமை துடிப்புள்ள கிரகம், இங்கே சனி இருப்பது அந்த வேகத்தை நிறுத்தி விடும். சனி மெதுவான சோம்பேறி தனமான கிரகம்.
எனவே இங்கு சனி நீசம் அடைந்து சுக்கிரன் குருவின் பார்வை பெற்றால் நல்ல பலன் கிடைக்கும்.
அதே நேரத்தில் உச்ச சூரியனுடன் சேர்ந்து இந்த இடத்தில் இருந்தால் கடுமையான கெடு பலன்கள் நடக்கும். இங்கு நீச பங்கம் அடைந்தாலும் கெட்ட பலன்கள் தான் நடக்கும்.
சனிக்கு பகை தன்மையுள்ள சூரியன், சந்திரன் தொடர்பு பெற்றால் தீய பலன்கள் தான் நடக்கும். சுப கிரகங்களின் சேர்க்கை பார்வை இதனை மாற்றும்.
பொதுவாக மேஷ லக்னத்தில் சனி இருப்பது அவ்வுளவு நல்லதல்ல. இருந்தாலும் சுபத்துவம் பெறும்போது ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்கும். நீச பங்கம், வக்கிரம் அடைய கூடாது.
மேஷ லக்னத்திற்கு சனி தசை (2ம் வீட்டில் சனி)
மேஷ லக்னத்திற்கு 2ம் வீடு சுக்கிரனின் வீடு. இங்கு சனி அவருக்கு பிடித்த நண்பரின் சுபத்துவ வீட்டில் இருக்கிறார்.
எப்பவுமே நட்பு வீட்டில் இருக்கும் ஒரு கிரகம் பெரிய அளவில் தீமைகளை செய்து விடாது. இருந்தாலும் சனி இருக்கும் இடத்தை கெடுக்க தான் செய்வார்.
இங்கு குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் பார்வையில் இருப்பது அந்த 2ம் வீடான குடும்ப ஸ்தானத்தை கெடுக்காது.
அதுவே பாவத்துவம் பெற்று இருந்தால் பெரிய கெடுதல் உருவாகும். 10ம் அதிபதி 2இல் இருப்பதால் பேசி பேசியே பிழைத்துக் கொள்வார்.
மார்கெட்டிங் போன்ற அமைப்பு உருவாகும். அதுவே சனி பாவத்துவம் பெற்று இருந்தால் பொய் பேசி அடுத்தவர்களை ஏமாற்றி பிழைப்பார்.
அதுவே சுபத்துவம் என்றால் அடுத்தவரின் நன்மைக்காக பொய் சொல்லும் அமைப்பு அதாவது வக்கீல் போன்ற அமைப்பை உருவாக்கும்.
மேஷ லக்னத்திற்கு சனி தசை (3ம் வீட்டில் சனி)
மேஷ லக்னத்திற்கு 3ம் வீட்டில் இருப்பது நல்ல யோகமான அமைப்பு. இது புதனின் வீடு.
அதாவது அவயோக கிரகங்கள் 3,6,10,11ம் இடத்தில் நட்பு நிலையில் இருந்தால் நல்ல பலன்களை தரும் என்பதன் அடிப்படையில் நல்ல பலன்களை தரும்.
இங்கு 10ம் அதிபதி 9ம் வீட்டை பார்ப்பதால் தர்ம கார்மாதிபதி யோகம் செயல்பட வாய்ப்புள்ளது.
மேஷ லக்னத்திற்கு சனி தசை (4ம் வீட்டில் சனி)
மேஷ லக்னத்திற்கு 4ம் வீடு சனிக்கு ஆகாத சந்திரன் வீடு. 4ம் இடம் என்பது வீடு, வாகனம், அம்மா போன்ற அமைப்பை குறிக்கும்.
இங்கு சனி இருப்பது அம்மாவை கெடுக்கும் நிலை உருவாகும். இருந்தாலும் கேந்திர ஸ்தானத்தில் இருந்து தனது மகர வீட்டை பார்க்கிறார். ஆதிபத்திய கெடுதல்கள் இருக்கும்.
எனவே 4ம் இடத்தில் இருப்பது நல்லதல்ல. மனம் கெடும், தாயை கெடுக்கும். ஆனால் சுபத்துவம் அடைந்தால் தீய பலன் குறையும்.
மேஷ லக்னத்திற்கு சனி தசை (5ம் வீட்டில் சனி)
மேஷ லக்னத்திற்கு 5ம் வீடு சூரியனின் வீடு. சனிக்கு மிக பெரிய பகைவரின் வீடு. இங்கு சனி இருக்கும் போது குழந்தைகளை கெடுப்பார். தந்தையையும் கெடுப்பார்.
வெறும் பெண் குழந்தையாக கொடுப்பார். சூரியன் குருவின் நிலையும் பார்க்க வேண்டும். பாவ கிரகங்கள் திரிகொணத்தில் இருப்பது நல்லதல்ல.
கேந்திரத்தில் இருப்பது நல்லது. எனவே சிம்ம வீட்டில் சனி இருப்பது நல்லதல்ல. சுபத்துவம் பெற்றால் பெரிய தீமைகள் நடக்காது.
6ம் வீட்டில் சனி
மேஷ லக்னத்திற்கு 6ம் வீடு சனியின் நட்பு வீடு கன்னி. உபஜெய ஸ்தானத்தில் பாவ கிரகம் நட்பு நிலையில் இருப்பது நல்லது.
இங்கு சனி இருக்கும்போது எந்த தீமையும் செய்ய மாட்டார். சனி நன்மை செய்யா விட்டாலும் தீமை செய்யாமல் இருந்தாலே போதும். பாதக ஸ்தானம் 11ம் வீட்டிற்கு 8இல் மறைவதால் எந்த பாதகத்தையும் சனி செய்ய போவதில்லை.
இருந்தாலும் 11ம் இடம் மூத்த சகோதரர் என்பதால் சகோதரனால் நன்மை இருக்காது. ஜீவன ஸ்தானம் 10ம் இடத்திற்கு 9இல் இருப்பதால் நல்ல ஜீவனத்தை தருவார்.
எனவே இந்த இடத்தில் சனி இருப்பது நல்ல பலன்களை தரும். ஆனால் இங்கு இருக்கும் சனி 12ம் இடத்தை பார்ப்பதால் 12ம் இடம் பாவத்துவம் ஆகி வெளிநாடு போக விடாமல் செய்வார்.
7ம் வீட்டில் சனி
7ம் வீடு சுக்கிரனின் துலாம் வீடு. இங்கு சனி உச்சம் அடைவார். உச்ச சனி இங்கிருந்து லக்னத்தை பார்ப்பது நல்லதல்ல.
உச்ச சனி, திக் பலமும் அடைவார். இங்கு சனி நேரிடையாக அதிக வலுவை பெறுவது நல்லதல்ல.
இங்கு 7ம் இடத்தில் சனி இருந்தாலே திருமண வாழ்க்கையில் ஒரு அதிருப்தி உருவாகி விடும்.
அந்நிய மனைவி, தாமத திருமணம், திருமணத்தில் தடை, கணவன் மனைவி கருத்து வேறுபாடு போன்றவை உண்டாகும்.
அதுவும் பாவத்துவம் ஆகி சுக்கிரனும் கெட்டு இருந்தால் மண வாழ்க்கையை முற்றிலும் கெடுத்து விடும். 10ம் அதிபதி உச்சம் என்பதால் சனியின் தொழில்கள் செய்ய வாய்ப்பு உருவாகும்.
8ம் வீட்டில் சனி
இங்கு லக்னத்திற்கு 8ம் வீடும் செவ்வாய் வீடு தான். லக்னத்திற்கு 8இல் சனி மறையும் போது வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் கெடுப்பார்.
ஆனால் நல்ல ஆயுள் கிடைக்கும். நல்ல ஆயுளை மட்டும் கொடுத்து வாழவே பிடிக்காத கஷ்டங்களை கொடுப்பார்.
8இல் இருக்கும் சனி 2ம் இடமாகிய தனம்,குடும்பம், வாக்கு ஸ்தானத்தை முற்றிலும் கெடுப்பார். சனி தசையில் குடும்பத்தை கெடுக்கும் அமைப்பு உருவாகும்.
8ம் இடம் பாவத்துவம் அடைவதால் வெளிநாடு போக விட மாட்டார். சனி சுபத்துவம் அடைந்தால் தீமைகள் குறையும்.
9ம் வீட்டில் சனி
மேஷ லக்னத்திற்கு 9ம் வீடு குருவின் தனுசு வீடு. சனி இங்கு இருக்கும்போது தனது 10ம் வீட்டிற்கு 12இல் மறைகிறார். இருந்தாலும் அது குருவின் சுபர் வீடு.
இங்கு சுபத்துவம் பெற்ற சாந்தமான சனியாக இருப்பார். இருந்தாலும் 9ம் இடம் என்பதால் தந்தையை கெடுத்து பூர்வீகத்தை கெடுத்து சில நன்மைகளை செய்யும் அமைப்பு.
10ம் வீட்டில் சனி
10ம் வீடு என்பது சனியின் சொந்த மகர வீடு. இங்கு சனி இருக்கும்போது சொந்த வீடாக இருந்தாலும் 10ம் இடம் என்பதால் தொழிலை கெடுப்பார்.
இங்கு இவர் நேர் வலு பெற்று ஆட்சியாக இருக்கிறது. எனவே சனி சுபத்துவம் பெற வேண்டும். அப்போது ஓரளவு நல்ல பலனை தரும். பாவத்துவம் அடைந்தால் தீமைகள் நடக்கும்.
11ம் வீட்டில் சனி
மேஷ லக்னத்திற்கு 11ம் வீடு சனியின் கும்ப வீடு. இங்கேயும் சனி ஆட்சி பெறுவார். 11ம் இடத்தில் இருந்தால் இங்கு பாதகாதிபதி வேலையை செய்வார்.
இவர் பாவர் என்பதால் பெரிய பாதகங்களை செய்யாது. பாதக ஸ்தானத்தை கெடுத்து பெரிய பாதகம் உருவாகாது.
இங்கு சனி வக்கிரம் அடைந்தால் நல்லது. பாதகம் செய்யாத நிலைக்கு மாறி விடுவார். ஆனால் செவ்வாய், ராகுவோடு இணையாமல் இருக்க வேண்டும்.
எந்த ஒரு நிலையிலும் சூரியனுடனும் சேர கூடாது. தந்தையையும் சேர்த்து கெடுத்து விடுவார்.
12ம் வீட்டில் சனி
மேஷ லக்னத்திற்கு 12ம் வீடு கடைசி வீடான குருவின் மீனம் வீடு. இங்கு 12இல் சனி மறைவது நல்லது.
10ம் அதிபதி 12இல் இருப்பதால் சில மறைவான தொழில் அமைப்புகளை கொடுப்பார். 12இல் இருக்கும் சனி 6ம் இடத்தை பார்த்து அந்த இடத்தை கெடுப்பார்.
6ம் இடம் என்பது கடன், நோய், எதிரி போன்றவற்றை கெடுப்பார். அது நமக்கு நல்லது தானே.
சனி சுபத்துவம் பெற்று இருந்தால் கடன், நோய் எதிரி இல்லாத நிலை அல்லது கடன் கொடுத்தவன் ஓடி போகும் நிலை உருவாகி நல்லது நடக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்த ஜோதிட கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அல்லது கணிப்புகளின் நம்பகத் தன்மைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இங்கே உள்ள தகவல்கள் அனைத்தும் பல தரப் பட்ட ஊடகங்கள்/சொற்பொழிவுகள்/ஜோதிடர்கள்/செய்திகள் மற்றும் நாங்கள் கற்று தெரிந்த சில ஜோதிட அறிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து இங்கே வழங்கப் பட்டுள்ளன. எங்களின் நோக்கம் ஜோதிட தகவல்களை வழங்குவது மட்டும் தான். எனவே பயனாளர்கள் இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி கொள்வது முழுக்க முழுக்க பயனாளர்களின் பொறுப்பாகும்.
0 Comments