ஜோதிடத்தில் நிறைய புரியாத வார்த்தைகள் ஜோதிடர்கள் பயன் படுத்துவார்கள். அந்த புரியாத ஜோதிட வார்த்தைகளின் விளக்கங்கள் பற்றிய முழு தொகுப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
சரம் ஸ்தரம் உபயம் - ஜோதிட வார்த்தைகளின் விளக்கங்கள்
![]() |
சரம் ஸ்தரம் உபயம் பற்றிய விளக்கம் |
ஜாதகத்தில் மொத்தம் 12 ராசிகளை சரம், ஸ்தரம், உபயம் என்று மூன்று வகையாக பிரிக்கப் படுகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மை இருக்கிறது.
அதாவது சரம் என்பது ஒரு இடத்தில் நிலையாக நிற்காமல் மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது. ஸ்திரம் என்பது ஒரு இடத்தில் நிலையாக நிற்க கூடிய தன்மை. உபயம் என்பது இரண்டும் கலந்த தன்மை.
காலப் புருஷ தத்துவத்தின் படி உள்ள 12 ராசிகளில் முதல் ராசி சரம், இரண்டாம் ராசி ஸ்திரம், மூன்றாம் ராசி உபயம் ஆகும். திரும்ப நான்காம் ராசி சரம், 5ம் ராசி ஸ்திரம், 6ம் ராசி உபயம்.
அதாவது மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசி. ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசி. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசி ஆகும்.
சரம் ஸ்திரம் உபயம் போன்ற மூன்று வகையான ராசிகளுக்கும் பாதகாதிபதி என்பவர் வேறு வேறு இடங்களுக்கு உரியவராக இருப்பார்கள்.
கேந்திரம்
![]() |
கேந்திரம் பற்றிய விளக்கங்கள் |
ஜோதிட வார்த்தைகளின் விளக்கங்கள் பற்றிய தொகுப்பில் கேந்திரம் என்பது லக்னத்தை வைத்து கணக்கிடப் படுகிறது. லக்னத்தில் இருந்து எண்ணி வர 1,4,7,10ம் இடம் போன்ற நான்கு இடங்களை குறிக்கும்.
இந்த 1,4,7,10ம் இடங்களை இணைத்தால் சதுர வடிவம் உருவாகும். இந்த நான்கு இடங்கள் தான் கேந்திர ஸ்தானம் என்று அழைக்கப் படுகிறது.
இந்த கேந்திர வீடுகளில் பாவ கிரகங்கள் இருந்தால் நல்லது என்ற ஒரு விதி உள்ளது.
திரிகோணம்
இதுவும் லக்னத்தை வைத்து தான் கனக்கிடப் படுகிறது. லக்னத்தில் இருந்து எண்ணி வர 1,5,9ம் இடம் போன்ற மூன்று இடங்களை குறிக்கும்.
இந்த 1,5,9ம் இடங்களை இணைத்தால் முக்கோண வடிவம் உருவாகும். இந்த மூன்று இடங்கள் தான் திரி கோண ஸ்தானம் என்று அழைக்கப் படுகிறது.
இந்த திரி கோண வீடுகளில் சுப கிரகங்கள் இருப்பது நல்லது என்ற ஒரு விதி உள்ளது.
மறைவு ஸ்தானம்
ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் என்று அழைக்கப் படுவது லக்னத்தில் இருந்து 3,6,8,12ம் இடங்கள் ஆகும்.
இதில் 3,12ம் இடங்கள் முழுமையான மறைவு கிடையாது. பாதி மட்டுமே மறைவு. 6,8ம் இடங்கள் முழு மறைவு இடங்கள்.
எனவே இந்த இடங்களின் ஆதிபத்தியங்கள் மனிதனுக்கு தேவையில்லாத விஷயங்களாக பெரும்பாலும் இருக்கும்.
6,8ம் அதிபதி தசைகள் தான் நமக்கு நிறைய கஷ்டங்களை உருவாக்குகிறது. அந்த இடங்களை தான் மறைவு ஸ்தானம் என்று குறிப்பிடப் படுகிறது.
உபஜெய ஸ்தானம்
நமது ராசிக் கட்டத்தில் உபஜெய ஸ்தானம் என்பது லக்னத்தில் இருந்து 3,6,10,11 ஆகிய இடங்கள் ஆகும். 3ம் இடம் முயற்சி தைரியம், 6ம் இடம் எதிரி, 10ம் இடம் தொழில், 11ம் இடத்தில் அதன் மூலம் வெற்றி.
எனவே ஒரு செயலில் அல்லது தொழிலில் முயற்சி செய்து எதிரிகளை வீழ்த்தி நாம் வெற்றி அடைவது என்பது உப ஜெய ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களை பொறுத்து தான் அமையும். எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற இந்த ஸ்தானம் ரொம்ப முக்கியம்.
அஸ்டமாதிபதி
ஜோதிடத்தில் அஸ்தமாதிபதி என்பது 8ம் அதிபதியை குறிப்பிடுவார்கள். லக்னத்தில் இருந்து எண்ணி வர 8ம் வீட்டு அதிபதி நமக்கு பெரிய கெடுதல்களை உருவாக்கும்.
அதாவது மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய்யே அஸ்டமாதிபதி ஸ்தானத்தில் வருவார். ரிஷப லக்னத்திற்கு குரு அஸ்டமாதிபதி ஆவார்.
மிதுன லக்னத்திற்கு சனி அஸ்டமாதிபதி ஆவார். கடக லக்னத்திற்கும் சனி தான் அஸ்டமாதிபதி ஆவார். சிம்ம லக்னத்திற்கு குரு அஸ்டமாதிபதி ஆவார்.
கன்னி லக்னத்திற்கு செவ்வாய் அஸ்டமாதிபதி ஆவார். துலாம் லக்னத்திற்கு லக்னாதிபதி சுக்கிரனே அஸ்டமாதிபதி ஆவார். விருச்சிக லக்னத்திற்கு புதன் அஸ்டமாதிபதி ஆவார்.
தனுசு லக்னத்திற்கு சந்திரன் அஸ்டமாதிபதி ஆவார். மகர லக்னத்திற்கு சூரியன் அஸ்டமாதிபதி ஆவார். கும்ப லக்னத்திற்கு புதன் அஸ்டமாதிபதி ஆவார். மீன லக்னத்திற்கு சுக்கிரன் அஸ்டமாதிபதி ஆவார்.
பாதகாதிபதி
ஒவ்வோரு லக்னத்திற்கும் பாதகாதிபதி என்பவர் ஒருவருடைய வாழ்க்கையில் பெரிய பாதகத்தை உருவாக்கும் தன்மை கொண்டவர். இது முழுவதும் பாதகத்தை உருவாக்காது. சில நேரங்களில் யோகத்தையும் செய்யும்.
சர ராசியை லக்னமாக கொண்ட ஜாதகருக்கு 11ம் அதிபதி பாதகாதிபதியாக வருவார்.
ஸ்திர ராசியை லக்னமாக கொண்ட ஜாதகருக்கு 9ம் அதிபதி பாதகாதிபதியாக வருவார்.
உபய ராசியை லக்னமாக கொண்ட ஜாதகருக்கு 7ம் அதிபதி பாதகாதிபதியாக வருவார்.
12 லக்னத்தின் பாதகாதிபதி
மேஷ லக்னத்தின் பாதகாதிபதி சனி.
ரிஷப லக்னத்தின் பாதகாதிபதி சனி.
மிதுன லக்னத்தின் பாதகாதிபதி குரு.
கடக லக்னத்தின் பாதகாதிபதி சுக்கிரன்.
சிம்ம லக்னத்தின் பாதகாதிபதி செவ்வாய்.
கன்னி லக்னத்தின் பாதகாதிபதி குரு.
துலாம் லக்னத்தின் பாதகாதிபதி சூரியன்.
விருச்சிக லக்னத்தின் பாதகாதிபதி சந்திரன்.
தனுசு லக்னத்தின் பாதகாதிபதி புதன்.
மகர லக்னத்தின் பாதகாதிபதி செவ்வாய்.
கும்ப லக்னத்தின் பாதகாதிபதி சுக்கிரன்.
மீன லக்னத்தின் பாதகாதிபதி புதன்.
மாரகாதிபதி
மாரகாதிபதி என்பவர் மாரகத்தை நமக்கு கொடுக்க கூடியவர். அதற்காக மாரகத்தை கண்டிப்பாக கொடுத்து விடுவார் என பயப்பட வேண்டாம்.
நல்ல ஆயுள் இருந்தால் மாரகாதிபதி கெடுதல்கள் மட்டுமே செய்வார். ஆயுள் முடியும் நேரத்தில் இந்த மாரகாதிபதி தசையோ புக்தியோ வந்தால் மாரகம் ஏற்படலாம்.
சர ராசியை லக்னமாக கொண்ட ஜாதகருக்கு 2,7ம் அதிபதி மாரகாதிபதியாக வருவார்.
ஸ்திர ராசியை லக்னமாக கொண்ட ஜாதகருக்கு 3,8ம் அதிபதி மாரகாதிபதியாக வருவார்.
உபய ராசியை லக்னமாக கொண்ட ஜாதகருக்கு 7,11ம் அதிபதி மாரகாதிபதியாக வருவார்.
12 லக்னத்தின் மாரகாதிபதி
மேஷ லக்னத்தின் மாரகாதிபதி சுக்கிரன்.
ரிஷப லக்னத்தின் மாரகாதிபதி சந்திரன், குரு.
மிதுன லக்னத்தின் மாரகாதிபதி குரு, செவ்வாய்.
கடக லக்னத்தின் மாரகாதிபதி சூரியன், சனி.
சிம்ம லக்னத்தின் மாரகாதிபதி சுக்கிரன், குரு.
கன்னி லக்னத்தின் மாரகாதிபதி குரு, சந்திரன்.
துலாம் லக்னத்தின் மாரகாதிபதி செவ்வாய்.
விருச்சிக லக்னத்தின் மாரகாதிபதி சனி, புதன்.
தனுசு லக்னத்தின் மாரகாதிபதி புதன், சுக்கிரன்.
மகர லக்னத்தின் மாரகாதிபதி சனி, சந்திரன்.
கும்ப லக்னத்தின் மாரகாதிபதி செவ்வாய், புதன்.
மீன லக்னத்தின் மாரகாதிபதி புதன், சனி.
பரிவர்த்தனை
அதாவது மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் தனுசு ராசியிலும் தனுசு ராசியின் அதிபதி குரு மேஷ ராசியிலும் மாறி மாறி அமர்ந்து இருந்தால் அதுவே கிரகங்களின் பரிவர்த்தனை ஆகும்.
இது ஒரு நல்ல யோகமான நிலை ஆகும். இந்த பரிவர்த்தனை அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் அந்தந்த தசை நடக்கும் போது மிக உன்னதமான பலன்கள் கிடைக்கும்.
இதில் முயற்சி பரிவர்த்தனை, யோக பரிவர்த்தனை, மறைவு பரிவர்த்தனை என்ற வகைகள் உள்ளன.
முயற்சி ஸ்தான அதிபதிகள் தங்களது வீட்டில் மாறி மாறி அமர்ந்து கொள்வது முயற்சி பரிவர்த்தனை. திரிகோண அதிபதிகள் தங்களது வீட்டில் மாறி மாறி அமர்ந்து கொள்வது யோக பரிவர்த்தனை.
மறைவு ஸ்தான அதிபதிகள் தங்களது வீட்டில் மாறி மாறி அமர்ந்து கொள்வது மறைவு பரிவர்த்தனை ஆகும்.
பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் ஆட்சி பலத்தை பெற்று வலுவாக இருக்கும். ஆனால் அது எந்த பாவகத்தில் இருக்கிறது என்பதை வைத்து தான் அது நன்மையா தீமையா என்று பலன் சொல்ல முடியும்.
திக் பலம்
ஜோதிட வார்த்தைகளின் விளக்கங்கள் பற்றிய தொகுப்பில் திக் பலம் என்பது ராகு கேதுவை தவிர மற்ற 7 கிரகங்கள் லக்னத்தில் இருந்து இந்த இந்த பாவகங்களில் இருக்கும் போது அந்த கிரகங்கள் ஆட்சி பலம் பெற்று திக் பலம் அடைகிறது.
அப்படி ஒரு கிரகம் லக்னத்தில் இருந்து அந்த குறிப்பிட்ட வீட்டில் இருக்கும் போது ஆட்சி பலம் பெற்று நல்ல பலன்களை அளிக்கிறது.
அதாவது லக்னத்தில் இருந்து ஒன்றாம் வீடு அதாவது லக்னத்தில் குரு அல்லது புதன் இருக்கும்போது திக் பலம் பெறுகிறது.
லக்னத்தில் இருந்து நான்காம் வீட்டில் சுக்கிரன் அல்லது சந்திரன் இருக்கும்போது அந்த கிரகம் திக் பலம் பெறுகிறது. அதே போல லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் சனி இருந்தால் திக் பலம் பெறுகிறது.
அதே போல லக்னத்தில் இருந்து பத்தாம் வீட்டில் சூரியன் அல்லது செவ்வாய் இருந்தால் அந்த கிரகம் திக் பலம் பெற்று ஆட்சி பலத்தை அடைகிறது.
விரிவாக கூற வேண்டும் என்றால் ஒவ்வொரு கிரகமும் ஒரு திசையை நோக்கி இருக்கும் போது அது பலம் அடைகிறது.
நாம் பிறக்கும் லக்கினம் கிழக்கு திசையை குறிக்கும். ஆக கிழக்கு திசையை நோக்கி லக்கினத்தில் குருவும் புதனும் இருக்கும் போது அந்த கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது.
அதே போல நான்காம் வீடு தெற்கு திசையையும் ஏழாம் வீடு மேற்கு திசையையும் பத்தாம் வீடு வடக்கு திசையையும் குறிக்கும்.
மேலே கூறிய இடங்களில் அந்த கிரகம் இருந்தால் அந்த கிரகம் நீசம், பகை போன்ற ஸ்தான பலத்தை இழந்தாலும் திக் பலம் பெற்று ஆட்சி பலத்தை பெறுகிறது. எனவே அந்த தசா காலங்களில் நல்ல பலன்களை தரும்.
வக்கிரம்
ஜோதிட வார்த்தைகளின் விளக்கங்கள் பற்றிய தொகுப்பில் வக்கிரம் என்பது ஒரு கிரகம் இயல்புக்கு மாறான நிலையில் செயல்படுவது.
அதாவது ஒரு கிரகம் வக்கிரம் பெற்று ஜாதகத்தில் இருந்தால் அது செய்ய இருக்கும் பலனின் எதிரான பலனை செய்யும்.
நல்ல பலன்களை தர வேண்டிய இடத்தில் கிரகம் இருந்தால் வக்கிரம் பெற்று இருக்கும் போது அது நல்ல பலன்களை செய்யாமல் தீய பலன்களை செய்கிறது.
அதுவே தீய பலன்கள் செய்ய வேண்டிய கிரகம் வக்கிரம் பெற்றால் மிகவும் நல்ல பலன்களை வாரி வழங்கும். எனவே கிரகம் வக்கிரம் பெற்று விட்டாலே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
அது உங்கள் லக்னத்திற்கு நட்பு கிரகமா பகை கிரகமா என்றும் பார்க்க வேண்டும், அது எந்த இடத்தில் அமர்ந்து உள்ளது என்பதையும் பார்த்து தான் வக்கிரம் பெற்ற கிரகத்தை கணக்கிட வேண்டும்.
ஒரு கிரகம் எதனால் வக்கிரம் பெற்று உள்ளது, அதாவது ஒரு கிரகம் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி செல்வது போன்ற தோற்றம் எதனால் ஏற்படுகிறது என்று பார்க்கலாம்.
குரு, சனி, செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் சூரியனை நெருங்கும்போது அதனுடைய வேகம் குறைவதால் அந்த கிரகம் பின்னோக்கி செல்வது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்.
இதுவே கிரகம் வக்கிரம் பெற்றுள்ளது என்று கூறப் படுகிறது. எளிமையாக கூற வேண்டும் எனில் ஜாதக கட்டத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து எண்ணி வந்தால் 5,6,7,8ம் இடத்தில் உள்ள கிரகம் வக்கிர நிலையை அடையும்.
உச்சம் பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் முதலில் உச்ச பலனை கொடுத்து பின்பு இயல்புக்கு மாறான நீச்ச பலனை கொடுக்கும்.
அதுவே நீச்ச கிரகம் வக்கிரம் பெறும் போது முதலில் நீச்ச பலனை கொடுத்து பின்பு நல்ல பலன்களை தரும் என்று கூறப் படுகிறது.
அதுவே ஒரு கிரகம் ஆட்சி வக்கிரம் பெற்றால் மிக வலிமையாக செயல்படும் என்று கூறப் படுகிறது.
அஸ்தங்கம்
ஒரு கிரகம் அஸ்தங்கம் அடைந்துள்ளது என்றால் அந்த கிரகம் ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் சூரியனுடன் மிக நெருங்கிய நிலையில் உள்ளது என பொருள்படும்.
அப்போது அஸ்தங்கம் ஆன கிரகம் வலிமை இழப்பதால் அதன் பலன்கள் முழுமையாக கிடைக்காது. அதன் காரகத் தன்மைகளை இழக்கும்.
சுக்கிரன், சூரியனிடம் இருந்து முன் பின் 10 பாகை இடைவெளிக்குள் அமைந்தால் சுக்கிரன் அஸ்தங்கம் அடைகிறது.
அதே போல சூரியனிடம் இருந்து குரு 11 பாகை, புதன் 14 பாகை, செவ்வாய் 17 பாகை, சனி 15 பாகைக்குள் இருந்தால் அந்த கிரகம் அஸ்தங்கம் அடைகிறது.
குரு, புதன், சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் மட்டுமே அஸ்தங்கம் அடையும். சந்திரன், ராகு, கேது அஸ்தங்கம் அடைவதில்லை.
புதன் எப்பொழுதும் சூரியன் பக்கத்திலேயே இருப்பதால் அது நெறைய நேரத்தில் அஸ்தங்கம் என்ற அமைப்பில் தான் இருக்கும் என்பதால் புதனுக்கு அஸ்தங்கம் என்பது கிடையாது என்ற ஒரு கூற்றும் உள்ளது.
அதே போல சூரியனிடம் அஸ்தங்கம் அடைந்த கிரகத்தின் பலனை சூரியன் அதன் தசா காலங்களில் எடுத்து செய்யும்.
சூரியன் லக்ன பாவியாக இல்லாமல் லக்ன சுபராக இருந்தால் நல்ல பலன்கள் எதிர்பார்க்கலாம்.
கிரக யுத்தம்
கிரக யுத்தம் என்பது இரண்டு கிரகங்கள் மிக நெருங்கிய நிலையில் 5 பாகை இடைவெளிக்குள் இருக்கும் போது இரண்டு கிரகங்கள் யுத்தம் செய்கின்றன.
அதுவே கிரக யுத்தம். வானியல் ரீதியாக கூற வேண்டும் என்றால் இரண்டு கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஈர்ப்பு விசை காரணமாக சில அதிர்வுகள் ஏற்படும்.
அப்போது கிரகங்கள் யுத்தம் செய்வது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அதுவே கிரக யுத்தம் ஆகும்.
இந்த கிரக யுத்தத்தில் முன்னால் உள்ள கிரகம் அதாவது அதிக பாகை கொண்ட கிரகம் வெற்றி பெறும்.
அதாவது வடக்கில் இருக்கும் கிரகம் வெற்றி பெறும். தெற்கில் பின்னால் இருக்கும் கிரகம் தோல்வி பெறும்.
தோல்வி பெறும் கிரகத்தின் பலன்கள் தீமையாக நடைபெறும். அந்த கிரகம் நல்ல அமைப்பில் இருந்தாலும் அதன் நல்ல பலன்களை தர இயலாத நிலைக்கு தள்ளப்படும்.
குரு சுக்கிரன் போன்ற எதிரெதிர் கிரகங்கள் கிரக யுத்தத்தில் ஈடுபட்டால் யுத்தம் கடுமையாக இருக்கும்.
தோல்வி பெறும் கிரகத்தின் நன்மைகள் கிடைக்காது. மாறாக தீய பலன்களாக நடைபெறும். அந்த யுத்தம் நடைபெற்ற பாவகம் செயலற்று போகும்.
தோல்வி அடைந்த கிரகம் பார்க்கும் இடமும் கெட்டுப் போகும். அதுவே நட்பு கிரகங்கள் குரு செவ்வாய் போன்ற கிரகங்கள் கிரக யுத்தத்தில் நெருங்கி இருந்தால் இந்த யுத்தத்தின் மூலம் எந்த பாதிப்பும் நடைபெறுவதில்லை.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரக யுத்தம் கிடையாது. அதாவது சூரியன் அல்லது சந்திரனுடன் மற்ற கிரகங்கள் ஒரே பாதையில் இருந்தால் அது கிரக யுத்தம் என்று எடுத்துக் கொள்ள கூடாது.
இந்த கிரக யுத்தத்தில் குரு, செவ்வாய், சனி, சுக்கிரன் மட்டுமே ஈடுபடுகிறது.
இரு பகை கிரகங்கள் 5 பாகைக்குள் கிரக யுத்தத்தில் இருந்தாலும் இரு கிரகங்களும் வேறு வேறு நட்சத்திரத்தில் அதாவது நட்சத்திர சந்தியில் இருக்கும் போது பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
அதுவே ஒரே நட்சத்திரத்தில் இரு பகை கிரகங்கள் 5 பாகைக்குள் இருந்தால் கிரக யுத்தம் நடந்து தோல்வி பெற்ற கிரகத்தின் தீய பலன்கள் நடக்கும்.
இரு பகை கிரகங்கள் 3 பாகைக்குள் இன்னும் நெருங்கிய இருந்தால் இரண்டு கிரகங்களும் பலம் இழக்கின்றன.
அப்போது இரு கிரகங்களும் அதன் பலன்களை தர இயலாத நிலைக்கு தள்ளப்படும். அப்போது இரு கிரகங்களும் பாவத்துவம் அடைந்து அவர்கள் இணைந்து இருக்கும் பாவகம், அவர்கள் பார்க்கும் பாவகம் அனைத்தும் கெடும்.
அதுவே இரு பகை கிரகங்கள் ஒரே பாகையில் இருக்கும் போது மிக கொடுமையான முறையில் கிரக யுத்தம் நடந்து அதன் பாவகம், பார்க்கும் பாவகம் அனைத்தும் மோசமாக கெடும்.
நட்பு கிரகங்கள் 5 பாகைக்குள் இருந்தால் அங்கு கிரக யுத்தம் நடை பெறாது. நண்பர்கள் யுத்தத்தில் ஈடு பட மாட்டார்கள்.
அது நல்ல நிலையாக பார்க்கப் படுகிறது. விரோதிகள் ஆகிய சுக்கிரன்-குரு, சனி-செவ்வாய் கிரகங்கள் ஒரே பாகையில் இணைவு பெற்றால் மட்டுமே கிரக யுத்தம் நடைபெறுகிறது.
நட்சத்திர சாரம் - ஜோதிட வார்த்தைகளின் விளக்கங்கள்
![]() |
நட்சத்திர சாரம் பற்றிய விளக்கங்கள் |
ஜாதக கட்டத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒரு வீட்டில் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் 3 நட்சத்திர பாதங்கள் இருக்கும்.
அந்த வீட்டில் உள்ள கிரகம் எந்த நட்சத்திரத்தில் உள்ளது என்பதை அந்த கிரகத்தின் நட்சத்திர சாரம் என்று அழைக்கிறோம்.
கிரகங்கள் ஒவ்வொரு நட்சத்திர பாதத்தின் வழியாக தான் ஒவ்வொரு ராசியையும் கடந்து பயணம் செய்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு கிரகமும் அதன் பலன்களை அது இருக்கும் நட்சத்திர சார அடிப்படையிலும் ஓரளவு வழங்கும்.
இப்போது ஒவ்வொரு ராசியிலும் எந்த நட்சத்திரம் உள்ளது என்பதை இந்த வரைபடத்தில் காணலாம்.
நட்சத்திர சார அதிபதிகள் என்பது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிபதி நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
நட்சத்திரங்களின் ராசி அதிபதி
1. கேது - அசுவினி, மகம், மூலம்
2. சுக்கிரன் - பரணி, பூரம், பூராடம்
3. சூரியன் - கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
4. சந்திரன் - ரோகிணி, அஸ்தம், திருவோணம்
5. செவ்வாய் - மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
6. ராகு - திருவாதிரை, சுவாதி, சதயம்
7. குரு - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
8. சனி - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
9. புதன் - ஆயில்யம், கேட்டை, ரேவதி
கோச்சாரம்
ஜோதிட வார்த்தைகளின் விளக்கங்கள் பற்றிய தொகுப்பில் இப்போது கோச்சாரம் என்பதை பற்றி பார்க்கலாம்.
கோச்சாரம் என்பது தற்போது நிகழ் காலத்தில் இந்த நேரத்தில் எந்த கிரகம் எந்த ராசியில் இருக்கிறது என்பதை பற்றி கூறுவது ஆகும்.
கோச்சார பலன் அதை வைத்து தான் கூறப் படும். ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களின் பலனையும் தற்போது இருக்கும் கிரகங்களின் கோச்சார பலன்களையும் சேர்த்து ஒப்பிட்டு தான் பலன் கூறுவார்கள்.
சஷ்டாஷ்டகம்
![]() |
சஷ்டாஷ்டகம் பற்றிய விளக்கங்கள் |
ஒரு ராசி கட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் கிரகங்கள் எண்ணி வந்தால் 6-க்கு 8-ஆக இருக்கும் பட்சத்தில் அந்த கிரகங்கள் சஷ்டாஷ்டக நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது மீனத்தில் புதன் கிரகம், துலாத்தில் செவ்வாய் கிரகம் இருக்கிறது என்று எடுத்துக் கொண்டால் அந்த இரு கிரகங்களும் சஷ்டாஷ்டக நிலையில் உள்ளது.
மீனத்தில் இருந்து எண்ணி வந்தால் 8ம் இடம் துலாம், அதே போல துலாத்தில் இருந்து எண்ணி வந்தால் 6ம் இடம் மீனம்.
இந்த இரு இடங்களில் இருக்கும் கிரகங்கள் சஷ்டாஷ்டக நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. சஷ்டாஷ்டக நிலையில் உள்ள தசா மற்றும் புத்திகள் நல்ல பலனை தருவதில்லை என்றும் கூறப் படுகிறது.
அதாவது புதன் செவ்வாய் சஷ்டாஷ்டக நிலையில் இருந்தால், புதன் தசை செவ்வாய் புத்தி அல்லது செவ்வாய் தசை புதன் புத்தி நன்றாக அமையாது என்றும் ஒரு கூற்றும் உள்ளது.
வர்கோத்தமம்
ஜோதிட வார்த்தைகளின் விளக்கங்கள் பற்றிய தொகுப்பில் இப்போது வர்கோத்தமம் பற்றி பார்க்கலாம். ஜாதக கட்டத்தில் ராசி கட்டம் நவாம்ச கட்டம் என்று இரண்டு கட்டங்கள் இருக்கும்.
வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசி கட்டத்திலும் நவாம்ச கட்டத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் அது வர்கோத்தமம் என்று அழைக்கப் படுகிறது.
அதாவது ராசி கட்டத்தில் துலாம் வீட்டில் செவ்வாய் உள்ளது, அதே போல நவாம்ச கட்டத்தில் துலாம் வீட்டில் செவ்வாய் உள்ளதாக இருந்தால் அது வர்கோத்தமம் பெற்ற கிரகம் ஆகும்.
அப்போது செவ்வாய் கிரகம் பலம் குறைவாக இருந்தாலும் மறைமுகமாக ஆட்சி பலம் பெறுகிறது.
புஷ்கராம்சம்
சில கிரகங்கள் பலவீனம் அடைந்து இருந்தாலும் வாழ்க்கையில் படிப்படியாக உயர்வை தந்து விடும்.
அதற்கு காரணம் இந்த புஷ்கராம்சம் அமைப்பு தான். அதாவது சில குறிப்பிட்ட நட்சத்திர சார பாதத்தில் கிரகங்கள் அமரும் போது இந்த புஷ்கராம்சம் அமைப்பு உருவாகிறது.
கேது, புதன், செவ்வாய் கிரகங்களின் நட்சத்திர பாதங்கள் இந்த புஷ்கராம்சம் அமைப்பில் வராது.
கீழே கொடுக்கப் பட்டுள்ள நட்சத்திர பாதத்தில் கிரகங்கள் அமரும்போது அது மறைமுகமாக யோக அமைப்பை தருகிறது.
கிரகங்கள் அமரும் நட்சத்திர பாதம்
1. சூரியன் 1ம் பாதம், 4ம் பாதம் (கார்த்திகை, உத்திரம், உத்திராடம்)
2. சந்திரன் 2ம் பாதம் (ரோகிணி, அஸ்தம், திருவோணம்)
3. குரு 2ம் பாதம், 4ம் பாதம் (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி)
4. சுக்கிரன் 3ம் பாதம் (பரணி, பூரம், பூராடம்)
5. சனி 2ம் பாதம் (பூசம், அனுஷம், உத்திரட்டாதி)
6. ராகு 4ம் பாதம் (திருவாதிரை, சுவாதி, சதயம்)
பொறுப்புத் துறப்பு:
இந்த ஜோதிட கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அல்லது கணிப்புகளின் நம்பகத் தன்மைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இங்கே உள்ள தகவல்கள் அனைத்தும் பல தரப் பட்ட ஊடகங்கள்/சொற்பொழிவுகள்/ஜோதிடர்கள்/செய்திகள் மற்றும் நாங்கள் கற்று தெரிந்த சில ஜோதிட அறிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து இங்கே வழங்கப் பட்டுள்ளன. எங்களின் நோக்கம் ஜோதிட தகவல்களை வழங்குவது மட்டும் தான். எனவே பயனாளர்கள் இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி கொள்வது முழுக்க முழுக்க பயனாளர்களின் பொறுப்பாகும்.
0 Comments