![]() |
ஜோதிட யோகமும் பலன்களும் |
ஜோதிடத்தில் உள்ள யோகமும் பலன்களும் பற்றிய தொகுப்பை இப்போது காணலாம். ஜோதிடத்தில் 'யோகம்' என்பது இணைவு என்று பொருள் படும்.
ஆனால் எல்லாரும் யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். தோஷம் என்றால் ஏதோ ஒரு குறை உள்ளது என்று நினைத்து கொள்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை.
யோகம் என்பது இரண்டு கிரகங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதக கட்டத்தில் இணைந்து இருந்தால் அது யோகம் என்று பொதுவாக கூறப் படுகிறது.
ஜோதிடத்தில் பல்வேறு யோகங்கள் அதாவது கிரகங்களின் இணைவுகள் இருக்கும். அந்த இணைவுகள் ஜாதகருக்கு எந்த மாதிரியான பலன்கள் தரும் என்பதை விரிவாக காணலாம்.
குரு மங்கள யோகமும் பலன்களும்
![]() |
குரு மங்கள யோகம் - கிரக நிலை |
செவ்வாய்க்கு மங்களன் என்ற பெயரும் உண்டு. குருவும் செவ்வாயும் சேர்ந்து ஒரு ராசியில் இருந்தாலோ அல்லது குரு செவ்வாயை 5,7,9ம் பார்வையாய் பார்த்தாலோ அது குரு மங்கள யோகம் எனப்படுகிறது.
குரு பார்ப்பதை விட குரு செவ்வாயுடன் சேர்ந்து கேந்திரத்தில் இருப்பது நல்ல பலன்களை தரும்.
இதன் பலன்கள் நல்ல குழந்தைகள், ஆண் வாரிசுகள், குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நல்ல தன லாபம், பூமி லாபம், சகோதரர் சகோதரிகளால் நல்ல அரவணைப்பு கிடைக்கும்.
ஏனெனில் செவ்வாய் சகோதர காரகன். அதே போல, இந்த பலன்கள் எல்லாம் அந்த அந்த தசைகள் நடப்பில் வந்தால் தான் அமையும்.
அதாவது குரு அல்லது செவ்வாயின் தசை வந்தால் நடக்கும். குரு மங்கள யோகம் உள்ளவர்கள் தைரிய சாலியாக வேகத்துடன் விவேகமும் சேர்ந்த மனிதர்களாக இருப்பார்கள்.
சந்திர மங்கள யோகம்
சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தால் சந்திர மங்கள யோகம் உண்டாகிறது.
அந்த சந்திரன் ஒளி பொருந்திய பௌர்ணமிக்கு அருகில் உள்ள சந்திரனாக இருக்க வேண்டும். ஏனெனில் தேய்பிறை சந்திரன் அசுப கிரகமாக செயல்படும்.
வளர்பிறை சந்திரன் தான் சுப கிரகம். சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து நல்ல இடங்களில் இருக்கும்போது புகழ், செல்வம், உயர் பதவி, ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில்கள் சம்மந்தப்பட்ட வேலை அமையும். தோப்பு, வீட்டு மனைகள் வைத்து இருப்பார்கள்.
சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து நெருப்பு ராசியில் இருந்தால் பதவியையும், நிலம் ராசியில் இருந்தால் பொருளாதாரமும், நீர் ராசியில் இருந்தால் வெளிநாடு செல்லும் அமைப்பையும் காற்று ராசியில் இருந்தால் பயணம் மூலம் ஆதாயத்தையும் தரும்.
குரு சந்திர யோகம் (அ) கஜ கேசரி யோகம்
குருவும் சந்திரனும் சேர்ந்து இருப்பது அல்லது சந்திரனை குரு 5,7,9ம் பார்வையாய் பார்த்து அமைய பெறுவது குருசந்திர யோகம் ஆகும். இதை கஜகேசரி யோகம் என்றும் அழைக்கப்படுவர்.
இந்த யோகம் அமைய பெற்றவர்களுக்கு கண்டிப்பாக இடம் மாற்றம் ஏற்படும். அந்த இடம் மாற்றம் வளர்ச்சியை தரும். மனம் சஞ்சலம் அடிக்கடி ஏற்படும்.
தர்ம குணம் உள்ளவராக இருப்பார். சந்திரன் என்பது தாயை குறிக்கும். நல்ல குணம் உடைய, தெய்வ பக்தி உடைய நல்ல தாய் அமையும். நல்ல எண்ணம், கருணை உள்ளம், புகழ், செல்வாக்கு உடையவராக இருப்பார்.
தர்ம கர்மாதிபதி யோகமும் பலன்களும்
தர்ம ஸ்தானம் என்பது 9ம் இடம். கர்ம ஸ்தானம் என்பது 10ம் இடம். இந்த 9ம் இட அதிபதியும் 10ம் இட அதிபதியும் சேர்ந்து இருந்தாலோ, அல்லது பரிவர்த்தனை பெற்றாலோ இந்த யோகம் உண்டாகிறது.
9,10ம் அதிபதிகள் ஒருவருக்கொருவர் பார்த்தாலும் இந்த யோகம் கொஞ்சம் குறைவாக வேலை செய்யும்.
ஆனால் பரிவர்த்தனை பெற்றால், அதாவது 9ம் அதிபதி 10ம் இடத்திலும், 10ம் அதிபதி 9ம் இடத்திலும் இருக்க பெற்றால் மிகவும் நல்ல பலன்களை தரும்.
எடுத்துக் காட்டாக மீனம் லக்னம் என்றால் லக்னத்தில் இருந்து எண்ணி பார்த்தால் விருச்சிகம் 9ம் இடம், தனுசு 10ம் இடம். விருச்சிக ராசியில் அதிபதி செவ்வாய்.
தனுசு ராசியின் அதிபதி குரு. எனவே குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றால் அல்லது இருவரும் சேர்ந்து ஒரே ராசியில் இருந்தால் இந்த யோகம் வேலை செய்கிறது.
அதற்கு அந்த செவ்வாய் அல்லது குரு தசை நடப்பில் வர வேண்டும். மேலும் இவர்கள் சுபத்துவம் பெற்று லக்னத்தை பார்த்து விட்டால் இன்னும் சிறப்பு.
இந்த தசைகளில் ஜாதகருக்கு நல்ல ஒரு தொழில் அமைப்பை கொடுத்து அதன் மூலம் ஒரு நிலையான வருமானத்தையும் அவருக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுக்கும்.
அந்த செல்வத்தை வைத்து அடுத்தவருக்கு தர்மம் செய்யக்கூடிய அளவிற்கு வளர்ந்து தர்மத்தை செய்வார். அடுத்தவருக்கு நிறைய உதவிகளை செய்து கௌரவம் பெறுவார்.
சிவராஜ யோகம்
சூரியன் என்றால் தலைவன். சிவன் என்றும் குறிப்பிடலாம். எனவே இந்த சிவ ராஜ யோகம் என்பது சூரியனும் குருவும் சேர்ந்து இருந்தால் அல்லது சூரியனை குரு பார்த்தால் கிடைக்க பெறுவது.
இது அரசனுக்கு நிகரான யோகம் என்று குறிப்பிடப் படுகிறது. இது ஒரு ராஜ யோகம் ஆகும். சூரியன் சுபத்துவம் அடைவதால் அதிகார பதவி, அரசு பதவி தேடி வரும்.
ஜாதகர் எங்கு இருந்தாலும் அங்கு தலைமை பொறுப்பில் இருப்பார். பெரிய பெரிய அமைச்சர்கள், பிரதமர் போன்ற ஜாதக அமைப்பில் இந்த யோகம் இருக்க பெறலாம்.
பிருகு மங்கள யோகம்
பிருகு மங்கள யோகம் என்பது சுக்கிரனும் மங்களன் என்று குறிப்பிடக் கூடிய செவ்வாயும் இணைந்து செயல்படுவது ஆகும்.
சுக்கிரன் செவ்வாய் இணைவு கேந்திர ஸ்தானங்களாகிய 1,4,7,10இல் இருந்தால் அருமையான முறையில் நல்ல யோகத்தை தரும்.
இந்த யோகம் இருக்கப் பெற்றவர்கள் பெண்கள் அல்லது மனைவி மூலம் அதிகமாக சொத்து சேர்க்கும் நிலை உருவாகும்.
இவர்களுக்கு நல்ல வாழ்க்கை, நல்ல நட்பு, உறவினர்கள், வாழ்க்கையில் சந்தோசம் அனைத்தும் கிடைக்கும்.
கேள யோகமும் பலன்களும்
இது கேதுவும் குருவும் இணைவது அல்லது கேதுவை குரு பார்ப்பது ஆகும். குருவும் கேதுவும் நண்பர்கள், ஆனால் குருவும் ராகுவும் நண்பர்கள் கிடையாது.
இந்த யோகம் உள்ளவர்களுக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். வெளிநாடு சென்று சம்பாதிக்கும் அமைப்பு உருவாக்க வாய்ப்புள்ளது.
ஆனால் கேது ஞான காரகன் என்பதால் முதலில் கஷ்டத்தை கொடுத்து ஞானத்தை பெற்று பின்பு செல்வம் சேர்க்கும் அமைப்பை கொடுக்கும்.
குரு உச்சமாக கடக ராசியில் இருந்து கூடவே கேதுவும் இருந்தால் அந்த தசைகளில் கோடீஸ்வர யோகம் உருவாகும்.
குரு ஆட்சி நட்பு நிலைமையில் இருக்க வேண்டும். இது குறிப்பிட்ட லக்னங்களுக்கு மட்டுமே வேலை செய்யும். அதாவது குரு அணி லக்னங்களுக்கு நல்ல பலனை தரும்.
சந்திர அதியோகமும் பலன்களும்
![]() |
சந்திர அதியோகம் - கிரக நிலை |
பௌர்ணமி சந்திரன் அல்லது பௌர்ணமிக்கு அருகில் உள்ள சந்திரனுக்கு 6,7,8ம் இடத்தில் சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் அமைய பெறுவது சந்திர அதியோகம் ஆகும்.
பௌர்ணமி சந்திரனின் ஒளி நேர் எதிராக உள்ள 6,7,8ம் இடங்களின் மேல் விழும். இந்த சுப ஒளி எதிரில் உள்ள கிரகங்களை சுபத்துவ படுத்தும் என்பதால் மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும்.
கோடீஸ்வரன் ஆகுவதற்கு இந்த யோகம் இருக்க வேண்டும். அந்தந்த தசை நடப்பில் வந்தால் வாழும்போதே சொர்க்கத்தை அனுபவிக்கலாம். அந்த அளவுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
பௌர்ணமி சந்திரனுக்கு கேந்திரத்தில் எந்த கிரகங்கள் இருந்தாலும் சந்திர ஒளி பட்டு அந்த கிரகம் நல்ல பலனை தரும். சூரியனும் சந்திரனும் நேருக்கு நேராக 7இல் இருந்தால் அது பௌர்ணமி சந்திரன் ஆகும்.
மகா தன யோகம்
நமது ஜாதகத்தில் 2,9,11ம் இடத்தின் கிரகங்கள் சேர்ந்து இருந்தாலோ அல்லது ஒன்றுடன் ஒன்று தொடர்பு பெற்று இருந்தாலோ இந்த யோகம் உண்டாகிறது.
அதாவது லக்னத்தில் இருந்து 2ம் இடம் என்பது தன ஸ்தானம். 9ம் இடம் பாக்கிய ஸ்தானம். 11ம் இடம் லாப ஸ்தானம்.
இந்த மூன்று ஸ்தானத்தின் அதிபதிகள் இணைந்து இந்த மூன்று வீட்டில் ஏதாவது ஒரு வீட்டில் இருந்தாலோ அல்லது சுபத்துவம் பெற்று நல்ல இடங்களில் இருந்தாலோ மிகவும் நல்ல பலன்களே நடக்கும்.
முக்கியமாக இவர்களின் தசா புத்திகள் நடப்பில் வர வேண்டும், அதுமட்டுமில்லாமல் தீய கிரகங்கள் சேர்க்கை இல்லாமல் இருப்பது நல்லது.
இது அனைத்து லக்னங்களுக்கும் பொருந்தாது. ஏனெனில் 2,9,11ம் இடங்களின் கிரகங்களில் சில பகை கிரகங்கள் வந்து அதோடு சேர்க்கை பெற்று அமர்ந்தால் தீய பலன்கள் நடக்க வாய்ப்புள்ளது.
பரிவர்த்தனை யோகமும் பலன்களும்
இரண்டு கிரகங்கள் அவர்களுக்கு உரிய வீட்டில் மாறி மாறி இருந்து கொண்டால் அது பரிவர்த்தனை யோகம் ஆகும்.
எடுத்துக் காட்டாக 2ம் அதிபதி 4ம் இடத்திலும், 4ம் அதிபதி 2ம் இடத்திலும் அமர்வது. அப்படி அமரும்போது அந்த இடத்தின் ஆதிபத்தியம் வழியாக நல்ல பலன்களை செய்யும்.
அதுவே 6,8,12ம் இடங்களில் இந்த பரிவர்த்தனை நடந்தால் அந்த அந்த கெட்ட ஆதிபத்தியம் வழியாக நல்ல பலன்கள் நடக்கும்.
மகா சக்கரவர்த்தி யோகம்
இந்த யோகத்தில் கிரகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்தோமேயானால் முதலில் லக்னாதிபதி உச்சமாக இருக்க வேண்டும்.
பின்னர் 2,9ம் அதிபதிகள் அந்த உச்சம் பெற்ற லக்னாதிபதியுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அடுத்து 10ம் அதிபதி வலுவாக ஆட்சி அல்லது திக்பலம் பெற்று இருக்க வேண்டும்.
இந்த யோகம் உங்களை அதிகாரமிக்க ஒரு உயரத்தை எட்ட வைக்கும். அதை அனுபவிக்க தீர்காயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் நல்ல உடல் அமைப்பையும் கொடுக்கும்.
சமுதாயத்தில் அந்தஸ்து, வெற்றி, செல்வாக்கு, முன்னேற்றம் அனைத்தையும் கொடுக்கும்.
சகட யோகமும் பலன்களும்
சகட யோகமும் பலன்களும் பற்றி பார்ப்போம். குரு இருக்கும் இடத்திலிருந்து எண்ணி வந்தால் 6,8ம் இடத்தில் சந்திரன் இருந்தால் அது சகட யோகம் என்று அழைக்கப் படுகிறது.
சகட யோகம் இருக்கப் பெற்றவர்களின் வாழ்க்கை ராட்டினம் போல மேலேயும் கீழேயும் மாறி மாறி சுழலும். இது காலம் முழுதும் அமையும்.
அதாவது சில காலம் பண புழக்கத்துடன் இருப்பார்கள், சில காலம் பணம் இல்லாமல் அவதி படுவார்கள். குடும்பம், நட்பு, வேலை இப்படி எதை எடுத்து கொண்டாலும் அதில் நிலையான தன்மை இருக்காது.
வாழ்க்கை ஏற்ற தாழ்வுடன் அமையும். போராட்டம் மிகுந்த வாழ்க்கையாக இருக்கும். ஏனெனில் குருவுக்கு சந்திரன் 6,8இல் மறையும் போது குருவின் பார்வை சந்திரன் மீது விழாமல் இந்த மாதிரியான நிலையை உருவாக்குகிறது.
குரு சண்டாள யோகம்
குருவும் சனியும் இணைவது அல்லது குருவும் ராகுவும் இணைவது ஆகும். இந்த பாவ கிரகங்கள் குருவுடன் இணைவது தான் இந்த யோகம்.
பாவ கிரகங்கள் இணைவதால் இந்த யோகம் கெடுதல்களை செய்யும் என்று அர்த்தம் கிடையாது. அவர்கள் இணைந்த இடத்தை பொறுத்து பலன்கள் அமையும்.
குருவும் ராகுவும் சேர்ந்தால் ராகு தசை வரும்போது வாழ்க்கையில் உயர் நிலைக்கு போக வைக்கும். குருவும் சனியும் நல்ல இடத்தில் சேர்ந்தால் நல்ல ஆன்மீகவாதியாக இருப்பார்கள்.
குரு பாதகாதிபதியாக வரும் சில லக்னங்களுக்கு இந்த சேர்க்கை நல்ல பலன் அளிக்கும். ஏனெனில் குரு பாவ கிரகங்களுடன் சேர்வதால் குரு கெட்ட பலன்களை தர முடியாமல் நல்ல பலன்களை தரும்.
கிரக மாலிகா யோகம்
![]() |
கிரக மாலிகா யோகம் |
கிரக மாலிகா யோகமும் பலன்களும் பற்றி பார்ப்போம். கிரக மாலிகா யோகம் என்பது லக்னத்தில் இருந்து தொடர்ந்து 5 அல்லது 6 வீடுகளில் இடைவிடாது கிரகங்கள் இருப்பது ஆகும்.
அதாவது 1,2,3,4,5,6 வீடுகளில் தொடர்ந்து ஏதேனும் கிரகங்கள் இருக்க வேண்டும். இல்லையேல் லக்னத்தில் இருந்து 4,5,6,7,8 ஆகிய இடங்களில் இடைவிடாது இருப்பது ஆகும்.
எந்த இடத்தில் இருந்தும் ஆரம்பித்து தொடர்ந்து 5,6 இடங்களில் கிரகம் இருக்க வேண்டும். இதை சிங்காதன யோகம் என்றும் கூறலாம்.
கிரக மாலிகா யோகம் அமைய பெற்றவர்கள் வாழ்க்கையில் சகல விசயங்களும் கிடைக்கும். இது பல்வேறு முன்னேற்றங்களையும் தரக் கூடியது.
பஞ்சமகா புருஷ யோகம்
சூரியன், சந்திரன், ராகு, கேது ஆகிய கிரகங்களை தவிர்த்து மற்ற செவ்வாய், குரு, புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் உச்சம்/ஆட்சி பெற்று கேந்திர ஸ்தானங்களில் இருந்து, அந்த தசா புத்தி நடப்பில் வந்தால் அந்த ஜாதகம் தொழில், வியாபாரம், வேலையில் பேரும் புகழும் பெற்று நல்ல நிலையை அடைவார்.
பஞ்சமகா புருஷ யோகத்தில் 5 வகையான யோகம் உள்ளது. அவை பின்வருமாறு.
1. ருசக யோகம்
மகர வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்று நல்ல பெயர், புகழ், ஆயுள், பதவி ஆகியன கிடைக்கும்.
2. மாளவியா யோகம்
மீனம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்று அழகான தோற்றம், பெயர், புகழ், வாகனங்கள், அடுக்கு மாடி வீடு, பங்கு சந்தையில் சம்பாதிக்கும் திறமை ஆகியன கிடைக்கும்.
3. பத்ர யோகம்
கன்னி வீட்டில் புதன் உச்சம் பெற்று நல்ல பேச்சு திறமை, கணிதத்தில் புலமை, நல்ல வருமானம், கம்பீரமான தோற்றம் ஆகியன இருக்கும்.
4. ஹம்ச யோகம்
கடக வீட்டில் குரு உச்சம் பெற்று ஒழுக்கம், கம்பீரம், உயர்ந்த அந்தஸ்து, கௌரவம், உன்னத வாழ்வு கிடைக்கும்.
5. சச யோகம்
துலாம் வீட்டில் சனி உச்சம் பெற்று நீண்ட ஆயுள், நல்ல உழைப்பு, நேர்மை, மக்கள் தலைவர் நிலை, தொழிலால் மேன்மை ஆகியன கிடைக்கும்.
பானு பார்க்கவ யோகம்
சூரியனும் சுக்கிரனும் இணைவது இந்த யோகம் ஆகும். இந்த இணைவு நல்ல இடங்களில் இருந்தாலோ அல்லது குருவின் பார்வை இந்த சேர்க்கையின் மீது விழுந்தாலோ செல்வ செழிப்பான வாழ்க்கையையும் பெரிய மனிதர்களின் தொடர்பையும் கொடுக்கும்.
கெட்ட ஸ்தானங்களில் இருந்தால் தகாத நடத்தையும், கலகம் செய்யும் குணமும் வந்து விடும். பிறரை எளிதாக ஏமாற்றி விடுவார்கள்.
பிறர் செய்த நன்மையை மறந்து விடுவார்கள். பெண்களாக இருந்தால் கணவன் வீட்டாருக்கு பிடிக்காத நிலை உருவாகும்.
புதாத்திய யோகம்
சூரியனும் புதனும் இணைவது புதாத்திய யோகம் ஆகும். பொதுவாக புதன் சூரியன் பக்கத்திலேயே இருக்கும் கிரகம்.
முன் பின் ஒரு ராசியை கடந்து இருக்க மாட்டார். எனவே இந்த இணைவு நிறைய பேருக்கு இருக்கும். சூரியனும் புதனும் இணைவது நிபுணர் போன்ற திறமையை தரும்.
இவர்கள் புத்திசாலியாகவும், எதையும் எளிதில் புரிந்து கொள்வார்கள். புதிய சிந்தனை, எதையும் ஆராய்ந்து செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார்.
மதன கோபால யோகம்
இந்த யோகம் புதனும் சுக்கிரனும் இணைந்து செயல்படுவது ஆகும். இவர்கள் இணைந்து எங்கு இருந்தாலும் லக்ஷ்மி அருள் கிடைக்கும்.
இவர்கள் நல்ல கலை நயம் மிக்கவராக இருப்பார்கள். கலை துறையில் சாதிக்கும் அமைப்பு இருக்கும்.
எதிர் பாலினத்தவர் மீதும் காதல் மீதும் நாட்டம் கொண்டவராக இருப்பார். வாழ்க்கை துணை மீது அதிக அன்பு வைத்திருப்பார்.
2,11ம் இடங்களில் இருந்தால் நல்ல தன லாபம் கிடைக்கும். கேந்திரத்தில் நின்றால் நல்ல பதவி கிடைக்கும்.
குபேர யோகமும் பலன்களும்
லக்னத்தின் 2ம் வீட்டு அதிபதி 9ம் வீட்டில் இருக்க, 9 அல்லது 11ம் வீட்டு அதிபதி 2ம் வீட்டில் இருந்தாலோ அல்லது பார்த்தாலோ இந்த யோகம் உண்டாகிறது.
குபேர யோகம் உள்ளவர்கள் கோடி கோடியாய் சம்பாதித்து குபேரன் போல வாழ்வார்கள்.
வசீகர யோகம்
குரு இருக்கும் இடத்தில் இருந்து திரிகோணத்தில் (1,5,9ம் இடம்) சந்திரன் இருந்தால், அல்லது 7ம் இடத்தில் இருந்தால் இந்த வசீகர யோகம் உண்டாகிறது.
குரு சந்திர யோகம் இருந்தாலும் இந்த யோகம் வேலை செய்யும். அனைவரையும் தன்பால் கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டவர்கள் இந்த யோகத்தில் பிறந்தவர்கள்.
கருப்பாக இருந்தாலும் சந்திரனின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டவராக இருப்பார். ஏனெனில் சந்திரன் என்பவர் அந்த அளவுக்கு அழகானவர் என்று கூறப் படுகிறது.
சுப மற்றும் பாபக் கர்த்தாரி யோகம்
லக்னத்திற்கு முன்னும் பின்னும் சுப கிரகங்கள் இருக்க, அதாவது 2,12ம் இடத்தில் சுப கிரகங்கள் இருந்தால் அது சுபக் கர்த்தாரி யோகம் ஆகும். அப்போது ஜாதகர் ராஜ வாழ்க்கை உடையவராக இருப்பார்.
லக்னத்திற்கு முன்னும் பின்னும் அதாவது 2,12ம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தால் அது பாபக் கர்த்தாரி யோகம் ஆகும்.
அப்போது ஜாதகரின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும். இது லக்னத்திற்கு மட்டும் அல்ல, மற்ற பாவத்திற்கும் பொருந்தும். இது ஒரு அவயோகம் ஆகும்.
பாரிஜாத யோகம்
லக்னாதிபதி எந்த வீட்டில் இருக்காரோ அந்த வீட்டின் அதிபதி கேந்திரம் அல்லது திரிகோணத்தில் ஆட்சி/உச்சம் பெற்று இருந்தால் அது பாரிஜாத யோகம் ஆகும்.
பாரிஜாத யோகம் உடையவர் தாராள மனப்பான்மை, வாகன யோகம், அரசாங்க விருதுகள் வாங்கும் நிலை, சாஸ்திரங்களை மதிப்பவராக இருப்பார். வாழ்க்கையின் பிற்பகுதி நிறைய சுப பலன்களை அனுபவிப்பார்.
அனபா யோகம்
சனிக்கும் சுக்கிரனுக்கும் இடையில் சந்திரன் இருந்தால் அனபா யோகம் ஆகும். இந்த அமைப்பு இருந்தால் ஆரோக்கியம், வசதி, மதிப்பு, அதிகாரம், கௌரவம் இவை சேரும்.
பிரம்ம யோகம்
குரு 9ம் அதிபதிக்கு கேந்திரத்தில் இருக்க வேண்டும். சுக்கிரன் 11ம் அதிபதிக்கு கேந்திரத்தில் இருக்க வேண்டும்.
புதன் லக்னாதிபதி அல்லது 10ம் அதிபதிக்கு கேந்திரத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பிரம்ம யோகம். இந்த யோகத்தில் அடுத்தவருக்கு உதவும் எண்ணம் உண்டாகும். நல்ல ஆரோக்கியம், புகழ், மதிப்பு உருவாகும்.
கால சர்ப்ப தோஷம்
![]() |
கால சர்ப்ப தோஷம் |
லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து மற்ற அனைத்து கிரகங்களும் அடுத்த 7 வீடுகளுக்குள் அமைந்து விட்டால் கால சர்ப்ப தோஷம் ஆகும்.
அதாவது லக்னத்தில் ராகு, 7இல் கேது மற்ற கிரகங்கள் அனைத்தும் 2,3,4,5,6 இடங்களில் இருக்கும். ஒரு பக்கம் மட்டுமே அனைத்து கிரகங்களும் இருக்கும்.
கால சர்ப தோஷம் இருந்தால் என்ன தான் திறமை இருந்தாலும் முன்னேற கஷ்ட படுவார்கள். ஒரு முடிவை எடுக்க மாற்றி மாற்றி யோசிப்பார். அவசரமாக சில முடிவுகளை எடுத்து வேதனை அடையும் நிலையும் வரும்.
சந்நியாசி யோகமும் பலன்களும்
சந்நியாசி யோகம் என்பது துறவுற வாழ்க்கை போக வைக்கும் அமைப்பு. இது 10ம் அதிபதியுடன் 2க்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றாக இணைந்து 2,4,7,8,10,12ம் இடங்களில் நிற்கும் போது உண்டாகிறது.
புனர்பூ தோஷம்
சந்திரனும் சனியும் சேர்ந்து இருப்பது அல்லது சந்திரனும் சனியும் தொடர்பு கொண்டு இருப்பது புனர்பூ தோஷம் ஆகும்.
இந்த தோஷத்தால் மனம் ஒரு நிலையில் இருக்காது. சந்திரன் என்பது மனம். சனியுடம் சேர்ந்து கெட்டு போய் மன உளைச்சல் உருவாகும்.
திடமான மனம் இருக்காது. சனியின் பார்வை 3,7,10ம் பார்வையாய் சனியை பார்த்தாலும் இது நடக்கும்.
கிரகண தோஷம்
![]() |
கிரகண தோஷம் - கிரக நிலை |
சூரியனும் சந்திரனும் ராகு கேதுவுடன் இணைந்தால் அது கிரகண தோஷம். அதாவது சூரியன் ராகுவுடன் சேர்க்கை, அதற்கு நேர் எதிராக சந்திரன் கேதுவுடன் சேர்க்கை பெற்று இருப்பது ஆகும்.
சூரியன் சந்திரன் இருவரும் ராகு கேது அச்சில் சிக்கி கொள்ளும் போது சூரியன் சந்திரனின் தன்மை நமக்கு கிடைக்காமல் போகும். சந்திரன் கெட்டு போனால் மனநிலை பாதிக்க பட வாய்ப்பு உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்த ஜோதிட கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அல்லது கணிப்புகளின் நம்பகத் தன்மைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இங்கே உள்ள தகவல்கள் அனைத்தும் பல தரப் பட்ட ஊடகங்கள்/சொற்பொழிவுகள்/ஜோதிடர்கள்/செய்திகள் மற்றும் நாங்கள் கற்று தெரிந்த சில ஜோதிட அறிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து இங்கே வழங்கப் பட்டுள்ளன. எங்களின் நோக்கம் ஜோதிட தகவல்களை வழங்குவது மட்டும் தான். எனவே பயனாளர்கள் இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி கொள்வது முழுக்க முழுக்க பயனாளர்களின் பொறுப்பாகும்.
0 Comments