banner 728*90

12 ராசி லக்னத்தின் குணநலன்கள் மற்றும் தன்மைகள்

ஒவ்வொரு லக்னத்திலும் பிறந்தவர்கள் எந்த மாதிரியான தன்மைகள் பெற்று இருப்பார்கள் என்றும் அவர்கள் லக்னத்தின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதையும் விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

இதன் மூலம் உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களின் குணங்கள் தன்மைகளை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
லக்னத்தின் குணநலன்கள் மற்றும் தன்மைகள்
லக்னத்தின் குணநலன்கள் & தன்மைகள்

    மேஷம் லக்னத்தின் குணநலன்கள்

    மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதிசயம் என்று பார்த்தால் இவர்கள் கலை ரசிகர்களாக இருப்பார்கள்.


    இவர்கள் வினோத பிரியர்கள், அதாவது எதிலும் வித்தியாசமாக எதிர்பார்க்க கூடிய வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடிய நபராக தான் இருப்பார்கள்.


    இந்த ராசியில் பிறந்தவர்கள் எதிலும் பொது அறிவு மிக்கவராக இருப்பார்கள். மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகளை கண்ணை மூடிக்கொண்டு அப்படியே ஏற்று கொள்ளும் தன்மை இருக்காது.


    தனக்கு தோன்றுவது போல தான் மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள். இவர்கள் வாக்கு வாதம் என்று வந்து விட்டால் அதில் இருந்து பின்னோக்கி செல்ல மாட்டார்கள்.


    இவர்கள் ரகசியமான சில விசயங்களை சட்டென்று பொது வெளியில் பேசி விடுவார்கள். சொல்ல கூச்சப்படும் விசயங்களை வெட்க படாமல் பேசி விடுவார்கள்.


    நல்ல தைரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். எதற்கும் அஞ்ச மாட்டார்கள். இவர்களின் பேச்சு திறமை நன்றாக இருக்கும். அடுத்தவர்களுக்கு எளிதில் புரியும் படி எதையும் எடுத்துச் சொல்லுவார்கள்.


    எதிராளியை தோற்கடித்து இவர்கள் சொல்லும் கருத்துக்களை அங்கே நிலை நிறுத்துவார்கள். இவர்களிடம் யாரும் பேச்சு கொடுத்து ஜெயிக்க முடியாது.


    மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியில் ஒன்று பேசுவது இருக்காது. மனதில் தோன்றுவதை பேசுபவராக இருப்பார்கள்.


    இவர்கள் மீது யாராவது அதிக அன்பு, பாசம் வைத்து விட்டால் அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் பண்பு மிக்கவர்கள்.


    கௌரவம் அந்தஸ்து போன்ற விசயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த கௌரவம் போகும் படி எந்த செயலும் செய்ய மாட்டார்கள்.


    இவர்களிடம் ஒப்படைத்த எந்த ஒரு வேலையையும் எந்த ஒரு சிக்கல், தடைகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி அதை முடித்து காட்டுபவர்களாக இருப்பார்கள்.


    தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகளால் இவர்களுக்கு உதவி செய்தவர்கள் கூட இவர்களை விலக்கி வைக்கும் நிலையை இவர்கள் ஏற்படுத்தி கொள்வார்கள்.


    செவ்வாயின் முரட்டு குணம் இருக்கும். தலைமை பண்பு இருக்கும். பிடிவாத குணம் இவர்களிடத்தில் இருக்கும். எதையும் போராடி பெறும் குணம் இருக்கும்.


    எதற்கும் முயற்சி செய்ய தயங்க மாட்டார்கள். எதையும் எளிதில் புரிந்து கொள்வார்கள். விவேகம், அறிவு, தன்னம்பிக்கை கொண்டவர்கள். மற்றவர்களின் திறமையை குறைத்து மதிப்பிடுவார்கள்.


    ரிஷபம் லக்னத்தின் குணநலன்கள்

    ரிஷப லக்னத்தின் குணநலன்கள் பற்றி பார்க்கலாம். இந்த லக்னத்தின் அதிபதி சுக்கிரன். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மிகவும் அழகாகவும் நடுத்தர உயரம் கொண்டவராக இருப்பார்கள்.


    மனைவி குழந்தைகளுக்கு பிடித்த நபராக இருப்பார். காதல் விசயங்களில் ஈடுபாட்டுடன் இருப்பார்.


    மற்றவர்களுடன் பழகும் போது தனக்கென்று தனித்தன்மை வாய்ந்த ஒருவராக இருப்பார். கலைத்துறை, இசை, நடனம், நடிப்பு, ஓவியம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பார்.


    அடுத்தவர்களை அனுசரித்து செல்லும் நபராக இருப்பார். மனோ திடம் இவர்களிடம் குறைவாக இருக்கும். பிரச்சினைகளை கண்டு பயம் கொள்பவர்கள்.


    வாகனத்தின் மீது பிரியம் கொண்டவர்கள். அலைந்து திரிவதில் விருப்பம் இருக்கும்.


    ஆன்மீகத்தில் நல்ல ஈடுபாடு இருக்கும். நண்பர்கள் குறைவாக இருக்கும். பெண்களை எதிரிகளாக கொண்டவர்கள்.


    கடின உழைப்பாளியாக இருப்பார் ஆனால் உழைப்பு ஏற்ற ஊதியம் இருக்காது. சம்பாதித்த பணத்தை சேர்த்து வைக்க தெரியாது.


    அனைவரையும் எளிதில் நம்பி அதன் மூலம் பிரச்சினைகள் உருவாகும். புத்தி சாமர்த்தியம் நல்ல நியாபக சக்தி உள்ளவர்கள். இவர்களின் மனதை புரிந்து கொள்வது அவ்வுளவு எளிதல்ல.


    இவர்கள் கலை துறையில் ஈடுபட்டு வெற்றி காண்பார்கள். சொந்தக் காரர்களிடம் இருந்து பிரிந்து வாழ நேரிடலாம். இவர்கள் வாக்குவாதம் செய்வதில் வல்லவர்கள்.


    தன்னை எப்பொழுதும் பணக்கார தோற்றத்தில் இருக்க நினைப்பவர்கள். இவர்களுக்கு எதிரிகள் தொல்லை இருக்காது. பழிக்கு பழி வாங்கும் குணம் இருக்கும்.


    அடுத்தவரின் பொருளுக்கு ஆசை பட மாட்டார்கள். விடா முயற்சியும் கடின உழைப்பும் மிக்கவர்கள். அதிகமாக காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.


    மிதுனம் லக்னத்தின் குணநலன்கள்

    மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த லக்ன காரர்கள் சாதாரண உயரம், நல்ல தோற்றம், அழகு, நல்ல இளமை கொண்டவராக இருப்பார்கள்.


    நகைச்சுவை குணம் அதிகமாக இருக்கும். நல்ல புத்திசாலியாக இருப்பார்கள். நல்ல செல்வத்துடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்.


    பாடல், கவிதை எழுதுபவராக இருப்பார்கள். நல்ல சாதூர்யமாக கேலி கிண்டலும் பேசுபவர்கள். வியாபார திறமை நன்றாக இருக்கும்.


    உழைப்பு மற்றும் பேச்சு திறமை மூலம் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். எழுத்து, ஜோதிடம், கணக்கு, நகைச்சுவை நடிப்பு போன்றவற்றில் ஆர்வம் இருக்கும்.


    ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களிடம் நெருங்க மாட்டார்கள். ஒரு கல்லில் இரண்டு காய் விழ வேண்டும் என்று நினைப்பவர்கள்.


    சோம்பலாக இருக்க மாட்டார்கள். எப்பொழுதும் சுறு சுறுப்பாக ஏதேனும் ஒரு வேலை செய்து கொண்டே இருக்க கூடியவர்கள்.


    கோபம் வந்தாலும் அதை மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டு பேசுவார்கள். அடுத்தவர்களை எளிதில் நம்பாமல் சந்தேக தன்மையும் பயந்த சுபாவமும் கொண்டவர்கள்.


    எதிலும் துணிந்து ஈடுபட மாட்டார்கள். வெளி தோற்றத்தில் வெகுளியாக காணப் பட்டாலும் எதையும் சிரித்து பேசியே சாதித்து கொள்ளும் திறமை கொண்டவர்கள்.


    அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்களுக்கு தனிமை பிடிக்காது. ஊர் சுற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள்.


    கடகம் லக்னம் அல்லது ராசியின் குணநலன்கள்

    கடக லக்னத்தின் குணநலன்கள் பற்றி பார்க்கலாம். இந்த ராசியின் அதிபதி சந்திரன். கடக லக்னத்தில் பிறந்தவர்கள் நடுத்தர உயரமும் வட்ட முகமும் கொண்டவர்கள். சிவந்த நிறம் கொண்டவர்கள். வசீகர தன்மை இருக்கும்.


    அனைவரையும் எளிதில் கவர கூடியவர்கள். நல்ல தைரியம் மிக்கவராக இருப்பார்கள். ஊர் சுற்றுவதில் பிரியம் உள்ளவர்கள். குடும்ப பாசம் கொண்டவராக இருப்பார்கள்.


    குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டுபவர்கள். இவர்கள் எளிதில் உணர்ச்சி வச படுவார்கள். நன்றாக பேச கூடியவர்கள்.


    வித்தியாசமாக கனவு காணும் குணம் இருக்கும். கூட்டத்தை கண்டு அஞ்சுவார்கள். தாயாரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.


    ஆன்மீக ஈடுபாடு இருக்கும். கூட்டு தொழில் ஏமாற்றத்தை தரும். நண்பர்கள் ஆதாயம் இருக்காது. சொந்தங்கள் மூலம் எந்த பயனும் இருக்காது.


    சுறு சுறுப்பாக இருப்பார்கள். அதிக கேள்விகளை கேட்டுக் கொண்டே இருப்பார்கள். தனது காரியத்தை சாதித்து கொள்வதில் வல்லவர்கள்.


    இசை ஞானம் அதிகமாக இருக்கும். நண்பர்கள், சகோதரர்களுக்கு நல்ல உதவிகள் செய்வார்கள். பணம் இவர்கள் கையில் நிற்காது.


    இவர்கள் தாய்மை உள்ளம் கொண்டவராக இருப்பார்கள். யார் என்ன தவறு செய்தாலும் மன்னிக்கும் தன்மை கொண்டவர்கள். இவர்களுக்கு அன்பு தான் முதன்மையானது.


    அன்புக்காக எதையும் செய்ய கூடியவர்கள். இவர்களுக்கு சமூகத்தின் மீது நல்ல அக்கறை இருக்கும். ஒரு காரியம் செய்தால் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைக்க கூடியவர்கள்.


    சமூகத்துடன் ஒன்றி வாழ்வார்கள். நன்றாக சமையல் செய்யும் நபராக இருப்பார்கள். இவர்களின் பலம் பலவீனம் இரண்டும் அன்பு தான். அதனால் அன்பு காட்டுபவரை கண் மூடி தனமாக நம்பி விடுவார்கள்.


    சிம்மம் லக்னம் அல்லது ராசி

    சிம்ம லக்னத்தின் குணநலன்கள் பற்றி பார்க்கலாம். இந்த ராசியின் அதிபதி சூரியன். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல உயரமும் கம்பீரமான நடையும் தோற்றமும் கொண்டவர்கள்.


    தன் இஷ்ட படி தான் நடப்பார்கள். இவர்கள் எப்பவுமே ஒரு புகழோடு இருக்க வேண்டும் என விரும்புவார்கள். மதிப்பு மரியாதை முக்கியம் என நினைப்பவர்கள்.


    மதிப்பு மரியாதை குறைந்தால் அந்த இடத்தில் அவர்கள் இருக்க மாட்டார்கள். எப்பவும் தலை குனிய கூடாது என்று நினைப்பவர்கள்.


    சூரியன் ஒரு தலைமை கிரகம், ராஜ கிரகம். எனவே இவர்கள் எப்பவும் ராஜாவை போல வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்க மாட்டார்கள்.


    ஆனால் மற்றவர்கள் மீது அன்பு பாசம் வைப்பார்கள், உதவிகள் செய்வார்கள். இவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு இவரும் உறுதுணையாக இருப்பார்.


    இவர்களை அதிகாரம் செய்பவர்களை துவம்சம் செய்து விடுவார்கள். இது நெருப்பு ராசி என்பதால் கோவம் அதிகமாக வரும்.


    இவர்கள் பெரும்பாலும் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதில் தீர்க்கமாக இருப்பார்கள். தன்னுடைய கடமைகளை செய்வதில் கருத்தாக இருப்பார்கள்.


    இவர்களுக்கு ஏற்ற படி தான் இவர்களின் வீடு, வேலை செய்யும் இடம் எல்லாம் இருக்கும். ஏனெனில் இவர்களுக்கு எதிரான இடங்களில் இவர்கள் இருக்க மாட்டார்கள்.


    பெரும்பாலும் அரசு சார்ந்த வேலையில் இருக்க வாய்ப்புண்டு அல்லது சுய தொழில் செய்வார்கள். அதே போல இவர்கள் உறவினர்களிடம் ரொம்ப பழக்க வழக்கம் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.


    உறவினர்கள் அல்லாதவர்களிடம் தான் நல்ல பழக்க வழக்கம் இருக்கும். இவர்கள் தனக்கு எப்பவும் முன்னுரிமை வேண்டும் என்று நினைப்பவர்கள்.


    முன்னுரிமை இல்லாத இடத்தில் இவர்கள் இருக்க மாட்டார்கள். இவர்களுக்கு மேடை பேச்சு நன்றாக வரும். இவர்களின் பேச்சு தெளிவாக இருக்கும்.


    நீதி நியாயத்திற்கு போராடும் குணம் கொண்டவர்கள். இவரை ஏமாற்றுவது கடினம். உஷ்ண உடல் கொண்டவர்கள். ஒரு செயலை செய்ய பிறரை எதிர்ப் பார்க்க மாட்டார்கள்.


    சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். யாருக்கும் அடி பணிய மாட்டார்கள். திட்டங்களை தீட்டி செயல் படுத்துவதில் வல்லவர்கள்.


    சாமர்த்தியம் அதிகமாக இருக்கும். இவர்களின் மனோ திடம் பலமாக இருக்கும். பயனில்லாத நண்பர்கள் தான் இருப்பார்கள்.


    இவர்களுக்கு கெடுதல் செய்தவர்களை மன்னிக்க மாட்டார்கள். துணிகரமான செயலை பதறாமல் செய்து முடிப்பார்கள்.


    கன்னி லக்னம் அல்லது ராசி

    கன்னி லக்னத்தின் அதிபதி புதன். இந்த லக்னத்தின் குணநலன்கள் என்று பார்த்தால் இவர்கள் நடுத்தர உயரம் கொண்டவர்கள். எப்பவும் சுறு சுறுப்பாக இருப்பவர்கள்.


    உலக விசயங்கள் அனைத்திலும் ஆசை இருக்கும். மற்றவரிடம் பேசியே காரியத்தை சாதித்து கொள்பவர்கள். பேராசை பட மாட்டார்கள்.


    தனக்கு என்ன கிடைக்குமோ அதை வைத்துக் கொண்டு திருப்தி அடைபவர்கள். நேரத்தை வீணாக்க மாட்டார்கள். மற்றவரின் உதவியை விரும்ப மாட்டார்கள்.


    பிரச்சினைகளை பொறுமையாக இருந்து சமாளிக்க கூடியவர்கள். சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கொள்பவர்கள். திட்டமிட்டு செயல் படுவதில் சாமர்த்திய சாலிகள்.


    சாஸ்திர ஞானம் இருக்கும், ஆனால் அவற்றை பின்பற்ற மாட்டார்கள். இவர்களுக்கு எதிரிகள் குறைவாக இருக்கும். மண வாழ்க்கை சிறப்பாக அமையாது.


    இவர்கள் நல்ல ஒரு வேலைக் காரர்கள். முதலாளியை திருப்தி படுத்தும் தன்மை இருக்கும். எதிலும் திட்டமிட்டு உழைப்பார்கள். எந்த ஒரு பொறுப்பையும் ஏற்று கொள்வார்கள்.


    இவர்கள் தாமத திருமணம் செய்வது நல்லதல்ல. என்றும் இளமையாக காண படுவார். கலைத்துறை நாட்டம் இருக்கும். இவர்களின் பலவீனம் என்று பார்த்தால் யாவருக்கும் உதவி செய்தல், புகழ்ச்சிக்கு மயங்கும் தன்மை கொண்டவர்கள்.


    இவர்களுக்கு மனதில் ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கும். எல்லோருக்கும் பிடித்த மாதிரி பேசுவார்கள். நகைச்சுவையாக பேசுவார்கள்.


    உறவினர்களிடத்தில் இவர்களுக்கு நல்ல பெயர் இருக்காது. அடுத்தவர்களுக்கு நல்ல ஆலோசனை செய்து அவர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றி இவர்களின் வாழ்க்கையை கோட்டை விடுவார்கள்.


    துலாம் லக்னம் அல்லது ராசி

    துலாம் லக்னத்தின் குணநலன்கள் பற்றி பார்ப்போம். இந்த லக்னத்தின் அதிபதி சுக்கிரன். நேர்கொண்ட பார்வை மிக்கவர்கள். எதிலும் பிடிவாதம் மிக்கவர்கள். கடவுள் பக்தி, தர்ம குணம் இருக்கும்.


    நாகரீகமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வியாபார துறையில் போக நினைப்பவர்கள். தனது பேச்சால் மற்றவர்களை ஈர்க்கும் தன்மை இருக்கும்.


    இரக்க குணம் கொண்டவராக இருப்பார்கள். மனதில் ஒரு பயம் கொண்டவராக இருப்பார்கள். எல்லாமே வேண்டும் என ஆசை பட கூடியவர்கள்.


    பணத்தை தண்ணீர் போல செலவு செய்பவர்கள். கடனாளி ஆக வாய்ப்பு உண்டு. பெரிய திட்டம் போட்டு பேச்சு பெரியதாக பேசுவார்கள், ஆனால் செய்கையில் ஒன்னும் இருக்காது.


    எதிரிகளை எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள். உறவினர்களை ஆதரிக்க கூடியவர்கள். தன்னை மற்றவர்கள் புகழ வேண்டும் என்று ஆசை படுவார்கள்.


    நன்றாக இனிக்க இனிக்க பேசுவார்கள். இவர்களுக்கு வயிறு கொஞ்சம் பெரிதாக இருக்கும். மற்றவருக்கு காரியத் தடை செய்வார்கள். கடன் கொடுத்தால் திரும்ப வராது.


    இவர்கள் சூது வஞ்சனை உள்ளவராக இருப்பார்கள், ஆனால் அது வெளியே தெரியாது. தன் சுய பலத்தால் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள்.


    இங்கு சனி உச்சம் என்பதால் மக்கள் தொடர்பு உள்ள தொழில் அல்லது வேளைகளில் இருப்பார்கள். சினிமா துறையில் நாட்டம் இருக்கும்.


    சுக்கிரன் ஆளுமை இருப்பதால், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சந்தோசமாக இருக்க விரும்புவார்கள்.


    மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க கூடியவர்கள். இவர்கள் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு நல்ல புகழ் உண்டாகும்.


    மற்றவர்களுக்கு என்ன தேவை என்று பார்த்துக் கொள்வார்கள். இவர்களுக்கு குரு நாதரே எதிரி போல ஆகி விடுவார்கள்.


    நல்ல நம்பிக்கைக்குறிய நபராக இருப்பார்கள். கூட்டு குடும்பம் போன்ற வாழ்வியல் தான் உருவாகும். தன் மனைவி அல்லது கணவனை பலவீன படுத்தும் நிலை உருவாகும்.


    இவர்கள் கவர்ச்சி மற்றும் அழகாக இருப்பார்கள். தன் தந்தையின் சாயலில் இருக்க கூடியவர்கள். இவர்களுக்கு துரோகம், ஒழுக்க கேடு, பொய்மை போன்ற குணங்கள் பிடிக்காது.


    சுக போக வாழ்க்கை, ஆடம்பரம் நிறைந்த வாழ்க்கை வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் குடும்ப வாழ்வை நல்ல படியாக நடத்துவார்கள்.


    ஒளிவு மறைவு இன்றி பேசுவதால் இவர்களுக்கு மறை முகமாக எதிரிகள் உருவாக வாய்ப்புள்ளது. இவர்கள் வீண் சண்டைக்கு போக மாட்டார்கள்.


    இவர்களிடத்தில் யாராவது சண்டைக்கு வந்தால் துவம்சம் செய்து விடுவார்கள். இவர்கள் ஆடைகள் விஷயத்தில் நல்ல கவர்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். 


    விருச்சிக லக்னம் அல்லது ராசி

    அதிபதி செவ்வாய். விருச்சிக லக்னத்தின் குணநலன்கள் என்று பார்த்தால் இவர்கள் நடுத்தர உயரம், இளமையாக இருப்பார்கள்.


    ஆனால் இவர்களுக்கு எந்த ஒரு விசயத்திலும் பொறுமை என்பதே இருக்காது. மிகவும் கோபக் காரர்கள். பேசினால் தேள் கொட்டுவது போல பேசுவார்கள்.


    சில நேரம் அமைதியாக நன்றாக பேசுவார்கள். ஆனால் இது தான் அவர்களின் குணம் என்று நினைத்து விட கூடாது. எதையும் யோசிக்காமல் கோபத்தில் பேசி விடுவார்கள்.


    தன் கணவன் அல்லது மனைவியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பார்கள். வாக்கு வாதம் செய்வதில் வல்லவர்கள். சுய கௌரவத்தை யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.


    எப்பவும் மற்றவர்களுக்கு யோசனை சொல்லி கொண்டே இருப்பார்கள். ஆனால் மற்றவர்கள் சொல்லும் யோசனையை இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.


    நண்பர்கள் நிறைய பேர் இருந்தாலும் அவர்களிடத்தில் நெருக்கம் என்பது இருக்காது. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேச கூடியவர்கள்.


    மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள். இவர்களை ஏமாற்றுவது கடினம். யாரையும் எளிதாக நம்பி விட மாட்டார்கள்.


    சந்தேக கண்ணுடன் தான் எல்லாரையும் பார்ப்பார்கள். எதையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். புதிதாக ஒருவரிடம் அவ்வுளவு எளிதாக பழகி விட மாட்டார்கள். ஆனால் நல்ல தைரிய சாலி, இரக்க குணம் இருக்கும்.


    ஆடம்பரமாக ஆடை உடுத்துவதில் ஆர்வம் இருக்கும். எந்த ஒரு கஷ்டத்தையும் தாங்கும் வலிமை கொண்டவர்கள்.


    சுயநலமாக இருப்பார்கள். மற்றவர்களின் ரகசியங்களை தெரிந்துக் கொள்ள ஆசை படுவார்கள். மற்றவர்களிடம் போட்டி பந்தயம் வைக்க பிடிக்கும்.


    மற்றவர்களை கேலி, கிண்டல் செய்ய பிடிக்கும். நல்லது கெட்டது இரண்டையும் கற்று கொள்வார்கள். இவர்கள் சொந்த தொழில் செய்வது சிறப்பை தராது.


    இவர்கள் கலகம் செய்வதில் கெட்டிக் காரர்கள். முன் கோவம் உண்டு. இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை குறை சொல்வதால் எதிரிகள் உண்டாக வாய்ப்பு உண்டு.


    நிறைய நண்பர்கள் உண்டு. மனைவியை நேசிப்பார்கள். ஆனால் மனைவியால் சில கஷ்டமும் நிகழும்.


    தனுசு லக்னம் அல்லது ராசி

    இந்த லக்னத்தின் குணநலன்கள் பற்றி பார்க்கலாம். அதிபதி குரு ஒரு தெய்வீக கிரகம் என்பதால் எந்த பிரச்சினை வந்தாலும் தெய்வமே உங்களுக்கு துணை நிற்கும். எடுத்த காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள்.


    எப்பொழுதும் முயற்சி செய்து கொண்டே இருந்தால் வெற்றி கிடைக்கும். தேவையில்லாமல் பேசுதல், உங்களது பேச்சால் மற்றவர்கள் மனநிலை புண்படுதல் போன்றவை உருவாகும்.


    நீங்கள் எவ்வுளவு உதவிகள் செய்தாலும் அவர்கள் உங்களுக்கு நன்றியாக விசுவாசமாக இருக்க மாட்டார்கள். மற்றவர்களுக்காக அதிகமாக உழைக்கும் சூழ்நிலை உருவாகும்.


    குருவின் வீட்டில் பிறந்துள்ளதால் எவ்வுளவு பிரச்சினை வந்தாலும் அதில் இருந்து மீண்டு உங்கள் எண்ணங்கள், விருப்பங்கள் நிறைவேறும்.


    இந்த லக்னத்தின் குணநலன்கள் நல்ல அறிவு, சுறு சுறுப்பாக இருப்பார்கள். போராடினால் எதுவும் கிடைக்கும் என எண்ணக் கூடியவர்கள்.


    தர்ம குணம், உதவும் மனப்பான்மை இவர்களிடத்தில் இருக்கும். அதே நேரத்தில் சிக்கனம் உள்ளவராக இருப்பார்கள். உறவினரிடத்தில் நல்ல உறவு வைத்து இருப்பார்கள்.


    மற்றவர்களை தன்னுடைய காரியத்திற்காக பயன்படுத்தி கொள்பவர்கள். அதே நேரத்தில் அந்த காரியம் நன்றாக நடக்க வில்லை என்றால் அவர்களை மட்டம் தட்ட ஆரம்பித்து விடுவார்கள்.


    உடல் உஷ்ணம் இருக்கும். எப்பவும் பெரிய நிலையில் இருக்க வேண்டும் என எண்ணுவார்கள். இவர்களுக்கு பொருளாதார தட்டுப் பாடு வந்தால் அதை எப்படியும் சமாளித்து விடுவார்கள்.


    குடும்பம் இவர்களுக்கு நன்றாக அமையும். இவர்கள் பேசியே காரியத்தை சாதித்து விடுவார்கள். அதே போல இவர்களிடத்திலும் மற்றவர்கள் பேசி சாதித்து கொள்வார்கள்.


    மகரம் லக்னம் அல்லது ராசி

    மகர லக்னத்தின் அதிபதி சனி. இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பல தரப் பட்ட சூழ்நிலையில் வாழ்பவராக இருப்பார்கள்.


    எல்லா வகையான கஷ்டத்தையும் இவர்கள் அனுபவித்து இருப்பார்கள். இவர்கள் வித விதமான ஆடைகள் அணிவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.


    தன்னம்பிக்கை உள்ளவராக இருப்பார்கள். முன்னேறுவதற்காக பல திட்டங்கள் போட்டு கடின உழைப்பை போட்டு வெற்றி காண்பவராக இருப்பார்கள்.


    இவர்கள் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் வெகுளியாய் பேசி விடுவார்கள்.


    வாசனை திரவியங்கள் இவர்களுக்கு பிடிக்கும். கலை நாட்டம் மிக்கவராக இருப்பார்கள். முன் கோவம், அவசர குடுக்கையாக இருப்பார்கள்.


    எந்த ஒரு வேலையும் அவசர அவசரமாக செய்வார்கள். மறதியும் ஏற்படும். நண்பர்களிடம் உதவிகள் எதிர்ப் பார்ப்பார்கள். அவர்களை கஷ்ட படுத்துவார்கள்.


    எப்பொழுதும் எதையாவது யோசித்துக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டவர்கள். மற்றவரிடம் கண்டிப்புடன் நடந்துக் கொள்வார்கள்.


    திருமண வாழ்க்கையில் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. பணம் சம்பாதித்து கொள்வதில் மற்றும் நல்ல குடும்பம் அமைத்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்கள்.


    ஆனால் அப்படி அமைத்துக் கொள்வதில் நிறைய சிக்கல் ஏற்படும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்கள். அப்படி அந்த சொல்லை காப்பாற்ற முடியாத சூழ்நிலை உருவாகும்.


    வேலை, தொழில் சரியாக அமையாத நிலை உருவாகும். குழந்தை பிறந்த பின்பு தான் நல்ல தொழில் வேலை அமைப்பு கிடைக்கும்.


    பழைய வண்டி வாகனம் பயன்படுத்தும் நிலை தான் உருவாகும். கடைசி காலத்தில் தான் வெற்றி கிடைக்கும். இவர்களுக்கு தந்தையின் உதவி கிடைக்காது அல்லது அந்த உதவியின் மூலம் பலன் கிடைக்காது.


    இவர்களுக்கு அரசு சம்மந்தப்பட்ட காரியங்கள், அரசு உதவிகள் எல்லாம் பிரச்சினைகளை தான் உருவாக்கும்.


    கும்பம் லக்னம் அல்லது ராசி

    கும்ப லக்னத்தின் அதிபதி சனி தான். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல உயரமும், மெலிந்த தேகமும், அழகும் கொண்டவர்களாக இருப்பார்கள். நாசுக்காக நடந்துக் கொள்ள கூடியவர்கள்.


    மதி நுட்பம் கொண்டவராக இருப்பார். மற்றவரிடம் வெகு விரைவில் நண்பர்களாக ஆகி விடுவார்கள். மனம் தூய்மையாக இருக்கும். சட்டென கோப பட கூடியவர்கள்.


    உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள். எல்லா விசயங்களையும் தெரிந்து வைத்து இருந்தாலும், மற்றவரின் முன்னிலையில் அதை பேச தயக்கம் காட்டுவார்கள்.


    சற்று பயந்த சுபாவம் கொண்டவராக இருப்பார்கள். தன் திறமையை பற்றி அறியாமல் இருப்பார்கள்.


    நல்ல கல்வி அறிவு இருக்கும். மற்றவர்களை ஒன்று திரட்டும் தன்மை இருக்காது. தன் மீது நம்பிக்கை வைத்தால் எதிரியை கூட காட்டி கொடுக்க மாட்டார்கள்.


    ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்றை நம்புவார்கள். நன்றாக பேசினாலும் செயல் திறன் குறைவாக இருக்கும். எதிரிகள் குறைவு.


    கணவன் அல்லது மனைவியுடன் கருத்து வேறுபாடு இருக்கும். புத்திர வழியில் ஏமாற்றம் இருக்கும். மன உறுதி அதிகம் இருக்கும்.


    சிலர் சுய நலமாகவும் மற்றவர் செய்த உதவியை மறப்பவராக இருப்பார்கள். நியாபக மறதி அதிகம் இருக்கும். பகலில் தூங்க இவர்களுக்கு பிடிக்கும். நியாயம் பேசுவதில் வல்லவர்கள்.


    வியாபார தந்திரம் தெரிந்தவராக இருப்பார்கள். இவர்கள் நிலையாக ஒரு இடத்தில் வாழ மாட்டார்கள். உழைத்துக் கொண்டே இருப்பவர்கள்.


    எப்பொழுதும் ஒரு பட படப்பாக இருப்பவர்கள். விவசாயம் மீது நாட்டம் இருக்கும். கனிவாக நடந்துக் கொள்வார்கள். கடமை உணர்ச்சி அதிகம் இருக்கும். தன்னை பற்றி பெருமை பேசுவார்கள்.


    மீனம் லக்னம் அல்லது ராசி

    அதிபதி குரு. இதில் பிறந்தவர்கள் அழகாகவும் நல்ல உயரமும், வசீகர தன்மையாக, தயாள குணம் கொண்டவராக இருப்பார்கள்.


    ஞானிகளாக, விசுவாசம் உடையவராக இருப்பார்கள். எளிதில் ஏமாறும் தன்மை கொண்டவராக சுகமாக வாழ ஆசை படுபவராக இருப்பார்கள்.


    முன் ஜாக்கிரதை உடையவராக இருப்பார்கள். ஏழ்மையான நிலையில் இருந்தாலும் மேல் நிலைக்கு வந்து விடுவார்கள்.


    இவர்களிடமிருந்து மற்றவர்கள் எந்த ஒரு ரகசியங்களையும் தெரிந்துக் கொள்ள முடியாது. பொறுமை சாலியாக இருப்பார்கள். மற்றவரின் பிரச்சனையை தீர்த்து வைப்பவர்கள்.


    தெய்வ அனுகிரகம் அதிகமாக இருக்கும் என்பதால் இவர்களை யாரும் பகைத்து கொள்ள கூடாது. இவர்கள் அமைதியாக இருப்பார்கள்.


    நடக்க போவதை முன் கூட்டியே அறியும் தன்மை மிக்கவர்கள். மற்றவர்கள் எதும் சொல்லி விட கூடாது என்று விழிப்புணர்வோடு செயல் படுவார்கள்.


    தன்னடக்கம், பெரியவர்களின் மீது மதிப்பு மரியாதை வைப்பவர்கள். தன் கல்வி, திறமை மீது அதிக நம்பிக்கை வைப்பவர்கள்.


    தைரியம் வீரியம் குறைவாக இருக்கும். ஆன்மீக ஈடுபாடு இருக்கும். மறை முகமான எதிரிகளை கொண்டவர்கள். உடன் பிறப்புகளால் ஆதாயம் கிடைக்கும்.


    நேர்மை, பரந்த மனப்பான்மை இருக்கும். எதையும் நிதானமாக யோசித்து செயல்பட கூடியவர்கள்.


    ஆழமான மனது உடையவர்கள். எல்லோரிடமும் சிரித்த முகத்தோடு பழக கூடியவர்கள்.


    இவர்கள் ஒருவரை பார்த்தால் அவரை சரியாக எடை போட்டு விடுவார்கள். இவரிடம் யார் எந்த ரகசியம் சொன்னாலும் அது கடைசி வரை வெளியில் போகாது.


    எல்லோரும் சமம் என்று நினைக்க கூடியவர்கள். குறுக்கு வழியில் போக மாட்டார்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்கும்.


    சண்டைக்கு போகும் மனப்பான்மை சுத்தமாக இருக்காது. பழகியவரை எளிதில் நம்பி ஏமாறி போகும் நபர்கள்.


    எப்பொழுதும் எதையாவது கற்பனை பண்ணி கொண்டு கற்பனை உலகில் வாழ கூடியவர்கள்.


    பெண்களின் தொடர்பு அதிகமாக கிடைக்கும். இவர்கள் பெரும்பாலும் பிறந்த ஊரில் வாழ மாட்டார்கள்.


    கற்பனை திறன் இருப்பதால் கலைத்துறை, ஜோதிடம், எழுத்து துறை போன்றவற்றில் நாட்டம் இருக்கும்.


    தாய்மை குணம் இருக்கும். அதனால் எல்லோரிடமும் அன்பு காட்டுதல், எளிதாக மன்னித்து விடுதல், அரவணைத்து நடந்து கொள்ளுதல் போன்ற அமைப்பு இருக்கும்.


    தேவையில்லாத விரயங்கள் இருந்து கொண்டே இருக்கும். திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை வசதியாக இருக்கும். சிலருக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையாது.


    பொறுப்புத் துறப்பு:

    இந்த ஜோதிட கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அல்லது கணிப்புகளின் நம்பகத் தன்மைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இங்கே உள்ள தகவல்கள் அனைத்தும் பல தரப் பட்ட ஊடகங்கள்/சொற்பொழிவுகள்/ஜோதிடர்கள்/செய்திகள் மற்றும் நாங்கள் கற்று தெரிந்த சில ஜோதிட அறிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து இங்கே வழங்கப் பட்டுள்ளன. எங்களின் நோக்கம் ஜோதிட தகவல்களை வழங்குவது மட்டும் தான். எனவே பயனாளர்கள் இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி கொள்வது முழுக்க முழுக்க பயனாளர்களின் பொறுப்பாகும்.

    Post a Comment

    0 Comments