banner 728*90

மேஷம் லக்னத்திற்கு புதன் தசை எப்படிப் பட்ட பலனை தரும்

நீங்கள் மேஷ லக்னமாக இருந்தால் புதன் 3,6ம் அதிபதியாக வருகிறார். மேஷ லக்னத்திற்கு புதன் தசை என்ன மாதிரியான பலன் தரும் என்று பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு புதன் தசை எப்படி இருக்கும்
மேஷ லக்னத்திற்கு புதன் தசை


    மேஷ லக்னத்திற்கு புதன் தசை

    லக்னாதிபதி செவ்வாய்க்கு புதன் பகை என்பதால் நிறைய தீமைகள் செய்ய வாய்ப்புள்ளது.


    6,8,12ம் அதிபதிகள் என்றாலே கொஞ்சம் கவனமாக தான் இருக்க வேண்டும். அவர்கள் தான் நமக்கு தீங்கு விளைவிக்க கூடியவர்கள்.


    புதனும் ஒரு மூன்றாம் நிலை இயற்கை சுப கிரகம் என்றாலும் பாவ கிரகத்துடன் சேர்ந்தால் புதனும் பாவத் தன்மை பெற்று விடும்.


    எனவே அதன் 6ம் இடத்தின் ஆதிபத்திய கெடுதல்களை கண்டிப்பாக செய்வார்.


    புதன் என்பவர் அறிவு, புத்திக்கு காரகன் என்பதால் புதன் வலுத்து இருந்தால் போதும் எப்படியும் நாம் பிழைத்து கொள்ளலாம்.


    இவர் சூரியனின் மிக நெருங்கிய நண்பர், எப்பொழுதும் சூரியனின் அருகாமையில் இருக்க கூடியவர். அதே நேரத்தில் புதனுக்கு சந்திரனை சுத்தமாக பிடிக்காது.


    ஜாதக கட்டத்தில் சூரியனை விட்டு 2 கட்டங்கள் தள்ளி புதன், சுக்கிரன் இருப்பதில்லை. சூரியனுக்கு முன் பின் மட்டுமே இருக்க கூடிய ஒரு கிரகம்.


    புதன் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நுனி புள் மேய்வது போல அனைத்தையும் ஓரளவு தெரிந்து கொள்ள வைக்கும் கிரகம்.


    புதன் சூரியனுடன் 13 பாகைக்குள் இணைந்து இருந்தால் அஸ்தங்கம் ஆகும் என்றாலும் அதனால் எந்த குறையும் வர போவதில்லை.


    எந்த ஒரு கிரகமும் சூரியனுடன் ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் இணையும் போது அந்த கிரகம் அஸ்தங்கம் ஆகி அதன் பலன் குறைபடும். ஆனால் புதனுக்கு அப்படி கிடையாது.


    புதன் என்பவர் சனி, சுக்கிரன், ராகு ஆகியவர்கள் நண்பர்கள். சூரியன் நெருங்கிய நண்பர். சந்திரன், செவ்வாய், குரு போன்றோர் எதிர் அணி கிரகங்கள்.


    தனித்த புதன், குரு சுக்கிரன் வளர்பிறை சந்திரன் கூட சேர்க்கை பெற்றால் சுபராக இருப்பார். பாவ கிரகங்கள் சேர்க்கை பெற்றால் பாவராக செயல்படுவார்.


    சரி இப்பொழுது புதன் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க மேஷ லக்னத்திற்கு புதன் தசை என்ன மாதிரியான பலன்களை தரும் என்பதை பார்க்கலாம்.

    12 வீடுகளிலும் புதன் இருக்க மேஷ லக்னத்திற்கு புதன் தசை எப்படி இருக்கும்
    12 வீடுகளிலும் புதன் இருக்க மேஷ லக்னத்திற்கு புதன் தசை

    மேஷ லக்னத்திற்கு புதன் தசை (லக்னத்தில் புதன்)

    மேஷ லக்னத்திற்கு லக்னத்தில் புதன் இருந்தால் தனக்கு பிடிக்காத செவ்வாய் வீட்டில் இருக்கிறார்.


    இருந்தாலும் அவர் அந்த இடத்தில் திக் பலம் பெறுகிறார்.


    தனது 6ம் வீட்டில் இருந்து எண்ணி வந்தால் லக்னம் என்ற எட்டாம் இடத்தில் மறைகிறார் என்பதால் தனது 6ம் வீட்டின் ஆதிபத்தியங்களான நோய், எதிரி, கடன் போன்ற அமைப்புகளை தராது.


    எனவே லக்னத்தில் புதன் இருப்பது நல்ல பலன்களை தரும். அவர் அந்த லக்னத்தில் பாவரோடு சேர்ந்து பாவத்துவமாக இருக்கிறாரா இல்லை சுபத்துவமாக இருக்கிறாரா என்பதை பொறுத்து பலன் அமையும்.


    அதுவே தனித்து புதன் இருந்தால் மிகுந்த நல்ல பலன்களை தரும். நல்ல புத்திசாலியாக இருப்பான். புதனின் காரகத்துவம் கிடைக்கும்.


    மேஷ லக்னத்திற்கு புதன் தசை (2ல் புதன்)

    இது சுக்கிரனின் ரிஷப வீடு. இது சுபருடைய வீடு என்பதால் இங்கு இருக்கலாம்.


    ஆனால் 6ம் வீட்டிற்கு திரிகோணத்தில் (9இல்) இருக்கிறார் என்பதால் கடன் போன்ற அமைப்புகளை தரும்.


    6ம் அதிபதி 2ம் வீடாகிய தன ஸ்தானத்தில் அமரும்போது கடனால் வாழ கூடிய தன்மை வரும்.


    இருந்தாலும் புதனுக்கு பிடித்த நண்பனின் வீடு என்பதால் சில நல்ல பலன்களையும் தரும்.


    2ம் வீட்டில் இருக்கும் புதன் சுபத்துவம் பெற்றால் அந்த கடனின் மூலம் வளர்ச்சி அடைவார். புதன் பாவத்துவம் அடைந்தால் கடனின் மூலம் அவரின் சொத்து அழியும்.


    எனவே புதன் அங்கு இருப்பது நல்லது என்றாலும் புதனின் சுப பாவத்துவ அமைப்பை பொறுத்து பலன் மாறுபடும்.


    மேஷ லக்னத்திற்கு புதன் தசை (3ல் புதன்)

    மேஷ லக்னத்திற்கு 3ம் வீடு புதனின் சொந்த வீடான மிதுன வீடு. இங்கு புதன் ஆட்சி அடைகிறார்.


    தீமை செய்யும் கிரகங்கள் 3,6,10,11இல் மறைந்து நட்பு நிலைமையில் இருந்தால் நல்ல பலன்களை தரும்.


    இங்கே புதன் ஆட்சி பெற்று இருந்தாலும் புதனின் காரகத்துவமான மனிதனுக்கு தேவை உள்ள அறிவு சார்ந்த விசயங்களை கொடுப்பார்.


    இங்கு 3ம் இடத்தில் தனித்த புதன் அல்லது சுபத்துவம் பெற்ற புதன் தைரியம், வீரியத்தை கொடுப்பார்.


    எனவே 3ம் வீட்டில் புதன் இருப்பது நல்ல சாதகமான பலன்களை தான் தரும்.


    மேஷ லக்னத்திற்கு புதன் தசை (4ல் புதன்)

    மேஷ லக்னத்திற்கு 4ம் வீடு சந்திரனின் கடக வீடு. புதனுக்கு பிடிக்காத கிரகத்தின் வீடு.


    இருந்தாலும் சந்திரன் நல்ல நிலையில் சுபத்துவம் அடைந்து இருந்தால் புதன் நல்ல பலன்களை தரும். பெரிய கெடுதல்கள் நடக்காது.


    அதுவே புதன் சந்திரன் பரிவர்த்தனை பெற்றால் நல்ல மேன்மையான பலன்கள் நடக்கும். இங்கே புதனின் சுபத்துவம் பாவத்துவத்தை வைத்து பலன் எடுக்க வேண்டும்.


    5ம் வீட்டில் புதன்

    மேஷ லக்னத்திற்கு 5ம் வீடு சூரியனின் சிம்ம வீடு. புதனுக்கு மிகவும் பிடித்த நண்பனின் வீடு.


    ஆனால் இங்கே புதன் பாவரின் சேர்க்கை இல்லாமல் இருப்பது நல்லது.


    திரிகோண ஸ்தானமான 5இல் சுபர் இருந்தால் நல்லது கேந்திரங்களில் பாவர்கள் இருந்தால் நல்லது என்ற அடிப்படையில் இங்கே புதன் தனித்து அல்லது சுபர் சேர்க்கை பெற்று இருந்தால் நல்ல பலன்களை தருவார்.


    6ம் வீட்டில் புதன்

    மேஷ லக்னத்திற்கு 6ம் வீடு என்பது புதன் உச்சம் ஆக கூடிய கன்னி வீடு. 6ம் அதிபதி 6ம் இடத்திலேயே இருப்பது நல்ல பலன்களை தராது.


    6ம் இடத்தின் ஆதிபத்திய கெடுதல்கள் கண்டிப்பாக நடக்கும். அதே நேரத்தில் புதனின் காரகத்துவம் அதிகமாக கிடைக்கும். அளவுக்கு மீறிய புத்திசாலியாக இருப்பான்.


    புதன் 6இல் பாவத்துவம் அடைந்தால் நோய், எதிரி, கடனால் மிகுந்த தீய பலன்களை கொடுப்பார்.


    எனவே 6,8ம் அதிபதிகள் உச்சம் பெறுவது நல்லது என எடுத்து கொள்ள கூடாது, அதன் ஆதிபத்திய வழியில் தான் பலன்கள் அமையும்.


    ஆக 6ம் இடத்தில் புதன் உச்சமாக இருந்தால் புதனின் காரகத்துவ நன்மைகளும் 6ம் இடத்தின் ஆதிபத்திய கெடுதல்களும் கண்டிப்பாக நடக்கும்.


    லக்னாதிபதியை விட 6ம் அதிபதி வலுத்து இருக்க கூடாது. இதே வீட்டில் உச்ச புதனுடன் சுக்கிரன் நீசம் ஆகி இருந்தால் அல்லது சுபத்துவம் பெற்றால் கடன் மூலம் வளர்ச்சி அடைய வைப்பார்.


    7ம் வீட்டில் புதன்

    மேஷ லக்னத்திற்கு 7ம் வீடு என்பது சுக்கிரனின் துலாம் வீடு. இது புதனின் நண்பனின் வீடு.


    இங்கு தனித்து புதன் இருந்தால் லக்னத்தை சுபர் பார்ப்பதால் ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்கும். புத்திசாலி தன்மைகள் கிடைக்கும்.


    இருந்தாலும் 6ம் அதிபதி 7இல் இருப்பது நல்லதல்ல. இருந்தாலும் சுபத்துவம் அடையும் பெரிய தீமைகள் நடந்து விடாது.


    புதன் என்பவர் தாய் மாமனை குறிப்பதால் புதன் 7இல் இருக்கும்போது தாய் மாமன் மகளை திருமணம் செய்யும் அமைப்பு வரலாம். ஆனால் புதன் பாவத்துவம் அடையாமல் இருக்க வேண்டும்.


    8ம் வீட்டில் புதன்

    மேஷ லக்னத்திற்கு 8ம் வீடு செவ்வாயின் இன்னொரு வீடான விருச்சிக வீடு. புதனின் பகைவரின் வீடு. புதன் இங்கு இருக்கவே கூடாது.


    6ம் அதிபதி 8இல் இருப்பது நல்லதல்ல. 6,8 தொடர்பு வந்தாலே அங்கு தீய பலன்கள் வந்து விடும்.


    இங்கு புதன் பாவத்துவம் அடைந்தால் பெரிய தவறுகள் நடக்கும். 6ம் ஆதிபத்திய தீமைகளை கண்டிப்பாக செய்யும்.


    சுபத்துவம் அடைந்தால் அந்த தீய பலன்கள் குறையலாம். ஆனால் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது.


    9ம் வீட்டில் புதன்

    இது குருவின் தனுசு வீடு. இது சுபரின் வீடு என்றாலும் இங்கு புதன் இருப்பது அந்த அளவுக்கு நன்மையை கொடுப்பதில்லை.


    இங்கு புதன் இருப்பது பரவாயில்லை என்று கூறலாம். ஆனால் இங்கு புதன் சனி, ராகு போன்ற கிரகங்களோடு சேர்ந்து விட கூடாது.


    10ம் வீட்டில் புதன்

    மேஷ லக்னத்திற்கு 10ம் வீடு சனியின் மகர வீடு. இது புதனுக்கு பிடித்த நண்பரின் சர வீடு என்பதால் ஓரளவு நல்ல பலன்களை தரும்.


    6ம் இடத்து பலன்கள் நடந்தாலும் அதை தாங்கி கொள்ளும் தன்மையும் இருக்கும்.


    இந்த இடத்தில் புதன் இருந்தால் சந்திரன், சூரியன், செவ்வாய் கிரகங்களின் சாரத்தில் தான் இருக்க வேண்டும் என்பதால் அந்த அளவுக்கு தீமைகளை செய்ய இயலாது.


    6ம் இடத்தின் பலன்கள் வாயிலாக நல்ல பலன்களை தரும்.


    11ம் வீட்டில் புதன்

    மேஷ லக்னத்திற்கு 11ம் வீடு சனியின் கும்ப வீடு. இங்கே 6ம் அதிபதி புதன் 6க்கு 6இல் மறைவதால் மிகுந்த யோகத்தை அள்ளி கொடுக்கும்.


    இந்த இடத்தில் தான் புதன் முழு நன்மையை கொடுப்பார். இந்த இடத்தில் புதன் இருக்கும்போது கடன் வாங்காத நிலை ஏற்படும்.


    அப்படி கடன் வாங்கினாலும் கடன் கொடுத்தவன் காணாமல் போய் விடுவான். கடன் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது.


    கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் நல்ல தன வரவு இருக்கும். இதே இடத்தில் சனி, ராகுவோடு மட்டும் இணைந்து விட கூடாது. 6ம் இடத்தின் தீய பலன்களை தந்து விடுவார்.


    12ம் வீட்டில் புதன்

    இது குருவின் மீனம் வீடு. இங்கு புதன் இருந்தால் நீசம் அடைந்து விடும். 6ம் அதிபதி நீசம் அடைந்தாலும் தவறு நீசபங்கம் அடைந்தாலும் தவறு.


    ஒரு கிரகம் நீசபங்கம் அடைவது யோகம் என்று சொல்வார்கள். ஆனால் இங்கே புதன் 6ம் அதிபதி ஆகி நீச பங்கம் அடைய கூடாது.


    அதுமட்டுமின்றி 12ம் இடத்தில் நின்று தனது 6ம் வீட்டை பார்ப்பார். எனவே கண்டிப்பாக 6ம் இடத்து தீய பலன்களை தருவார்.


    அளவுக்கு மீறிய கடன்களை கொடுத்து அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடுவார்.


    ஒருவேளை அந்த மீனம் வீட்டில் உள்ள தனது சொந்த ரேவதி நட்சத்திரத்தில் அந்த புதன் அமர்ந்து விட்டால் தீமைக்கு மேல் தீமையை செய்து சுத்தமாக கெடுத்து விடுவார்.


    ஒருவேளை குருவுடன் சேர்க்கை, வலிமை மிகுந்த குருவின் பார்வை ஓரளவு இந்த தீய பலன்களை குறைக்கும்.


    பொறுப்புத் துறப்பு:

    இந்த ஜோதிட கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அல்லது கணிப்புகளின் நம்பகத் தன்மைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இங்கே உள்ள தகவல்கள் அனைத்தும் பல தரப் பட்ட ஊடகங்கள்/சொற்பொழிவுகள்/ஜோதிடர்கள்/செய்திகள் மற்றும் நாங்கள் கற்று தெரிந்த சில ஜோதிட அறிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து இங்கே வழங்கப் பட்டுள்ளன. எங்களின் நோக்கம் ஜோதிட தகவல்களை வழங்குவது மட்டும் தான். எனவே பயனாளர்கள் இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி கொள்வது முழுக்க முழுக்க பயனாளர்களின் பொறுப்பாகும்.

    Post a Comment

    0 Comments