banner 728*90

ஜாதக கட்டத்தில் உள்ள 12 பாவக வீட்டின் ஆதிபத்தியங்கள்

12 பாவக வீட்டின் ஆதிபத்தியங்கள்
12 பாவக ஆதிபத்தியங்கள்

    பாவக வீட்டின் ஆதிபதியங்கள்

    ராசி கட்டத்தில் மொத்தம் 12 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டின் ஆதிபத்தியங்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம். ஓவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி இருக்கிறார்கள்.

    அந்த 12 ராசியில் ஏதேனும் ஒரு ராசி, லக்னத்தில் தான் நாம் பிறந்து இருப்போம்.

    உங்கள் ஜாதக கட்டத்தில் "ல" என்று குறிப்பிட பட்டிருக்கும் இடம் தான் லக்னம். அதே போல சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறதோ அதுதான் உங்கள் ராசி.

    ஜாதகப் படி லக்னம் என்று குறிப்பிடப் பட்டிருக்கும் இடம் தான் உங்கள் முதல் வீடு. உங்கள் வாழ்க்கையை பற்றி அறிய உங்கள் லக்னம் இருக்கும் வீட்டில் இருந்து எந்த கிரகம் எங்கு இருக்கு என்பதை கணக்கிட வேண்டும்.

    கோச்சார பலன்களை பற்றி அறிய சந்திரன் இருக்கும் உங்கள் ராசியை வைத்து கணக்கிட வேண்டும். கோச்சாரம் என்பது தற்போது எந்த கிரகம் எங்கு இருக்கிறது என்பதை வைத்து பலன் கூறுவது ஆகும்.

    ஜாதக பலன்களையும் கோச்சார பலன்களையும் இணைத்து தான் ஜோதிடர்கள் பலன் கூறுவார்கள். 

    நாம் லக்னத்தில் இருந்து Clock wise direction-இல் 1ம் வீடு, 2ம் வீடு என்று 12 வீடு வரை எண்ணி வரும்போது அந்த வீட்டுக்குறிய ஆதிபத்தியம் என்ன என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆதிபத்தியம் என்பது ஒவ்வொரு வீடும் ஜாதகர் வாழ்க்கையின் ஒவ்வொரு செயல், பணம், குணம், புகழ், வாழ்க்கை நிகழ்வுகள், உறவுகள், உடல் உறுப்புகள் என நம் வாழ்க்கையின் அனைத்து அங்கங்களையும் குறிக்கும்.

    அதில் எந்த வீடு எந்த ஆதிபத்தியத்தை குறிக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
    12 பாவக வீட்டின் ஆதிபத்தியங்கள்
    12 பாவக வீட்டின் ஆதிபத்தியங்கள்


    ஒரு கிரகம் ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீட்டின் ஆதிபத்தியம் என்ன என்பதையும் அந்த கிரகத்தின் காரகத்துவம் என்ன என்பதையும் கவனிக்க வேண்டும்.

    காரகத்துவம் என்பது ஒவ்வொரு கிரகமும் அதன் பொதுவான குணங்கள் மற்றும் அதன் பலன்களை காட்டுவதாகும்.

    கிரகங்கள் ஆட்சி உச்சமாக இருந்து தவறான வீட்டில் அமர்ந்தால் அந்த கிரகத்தின் காரகத்துவ பலன் நன்றாக அமையும். ஆனால் அந்த வீட்டின் ஆதிபத்திய பலன் கெடுதலாக அமையும்.

    தவறான வீடு என்பது 6,8,12 என்ற மறைவு ஸ்தானங்கள் ஆகும். இது லக்னத்தில் இருந்து மறையும் இடங்கள் ஆகும். அதனால் கெடு பலன்களை தரக் கூடிய வீடுகள் ஆகும். 

    ஒன்பது கிரகத்தின் காரகத்துவம் என்ன என்பதை அடுத்த பதிவில் காணலாம். இந்த பதிவில் ஒவ்வொரு வீட்டின் ஆதிபத்தியங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

    ஒவ்வொரு வீட்டுக்கும் ஆயிர கணக்கான ஆதிபத்தியங்கள் இருந்தாலும் சில முக்கியமான ஆதிபத்தியங்கள் மட்டும் நாம் காணலாம்.

    1ம்(லக்னம்) வீட்டின் ஆதிபத்தியங்கள்

    ஜாதக கட்டத்தில் "ல" என்று குறிப்பிடப் பட்டிருக்கும் வீடு தான் முதல் வீடு லக்னம். அந்த முதல் வீடு ஜாதகரை குறிக்கும். அதாவது லக்னம் என்பது நாம் தான்.

    அந்த முதல் வீடு தான் உங்கள் குணங்கள், நீங்கள் எப்படி பட்டவர் என்பதை குறிக்கும். இதன் மூலம் ஜாதகரை பற்றி அறியலாம்.

    லக்னத்தில் அமரும் கிரகங்களின் பொதுவான குணங்களை தான் நீங்களும் பெற்று இருப்பீர்கள்.

    அதுமட்டும் இல்லாமல் உங்கள் ராசியும் நட்சத்திரமும் உங்கள் குணங்களை எடுத்துரைக்கும். லக்னம் என்பது உயிர் என்று எடுத்துக் கொண்டால் ராசி என்பது உடல் ஆகும்.

    2ம் வீட்டின் ஆதிபத்தியங்கள்

    ஜாதக கட்டத்தில் லக்னத்தில் இருந்து எண்ணி பார்த்தால் 2ம் இடமாக அதாவது லக்னத்திற்கு பக்கத்தில் உள்ள அடுத்த வீடு தான் 2ம் வீடு. இந்த 2ம் வீடு தனம், குடும்பம், வாக்கு ஸ்தானம் என்று அழைக்கப் படுகிறது.

    இதன் ஆதிபத்தியம் என்ன என்று பார்த்தால் பணம், குடும்பம், வாக்கு, லாபம், உலக பந்தம், விலை மதிப்பற்ற பொருள்களை அடைதல், நகை ஆபரணங்கள், பத்திரம், அடமானம், போலி நகை, சேர் மார்க்கெட், பேங்க் பேலன்ஸ், எண்ணங்களை வெளிப்படுத்துதல், ஆரம்ப கல்வி, ஞாபக சக்தி, கற்பனை சக்தி, தாராள குணம் (அ) கஞ்ச தனம், நெருங்கிய மனிதர்கள், உண்மை/பொய், தந்தையின் வியாதிகள், மற்றவருக்கு உதவுதல், நண்பர்கள் மூலம் ஆதாயம் ஆகியவைகளை குறிக்கும்.

    இந்த 2ம் வீடு சுப கிரகம் அமர்ந்து வலுத்து இருந்தால் இந்த ஆதிபத்தியங்கள் நல்ல விதமாகவும், 2ம் வீடு கெட்டு போய் இருந்தால் இந்த நல்ல ஆதிபத்தியங்களுக்கு எதிரான தீய பலன்கள் நடக்கும்.

    உடல் உறுப்புகள்

    நாக்கு, பல், வலது கண், கன்னம்.

    உறவுகள்

    தாய் மாமா, பெரியம்மா

    3ம் வீட்டின் ஆதிபத்தியங்கள்

    மூன்றாம் வீடு முயற்சி, தைரிய வீரிய ஸ்தானம் என்று அழைக்கப் படுகிறது.

    மூன்றாம் வீட்டை வைத்து ஜாதகரின் முயற்சி மற்றும் வீரத்தை பற்றி அறியலாம். இந்த ஸ்தானம் இளைய சகோதரரை குறிக்கும்.

    இந்த வீடு குழப்பமான மனம், பொழுது போக்கு, அம்மாவின் செலவு, எழுத்து, கடிதம் வருதல், கம்யூனிகேஷன், மீடியா, நன்றாக சாப்பிடுதல், வீண் அலைச்சல், திறமைகள், பாரம்பரியம், ஆண்மை, வேலை ஆட்கள், இடம் பெயர்தல், வதந்திகள், குறுகிய தூர பயணம், நெருங்கிய உறவுகள் ஆகிய ஆதிபத்தியங்களை பெறும்.

    3ம் வீடு வலுத்து இருந்தால் இந்த ஆதிப்பத்தியங்கள் நல்ல விதமாக அமையும். இல்லையேல் இந்த ஆதிபத்தியங்கள் மூலமாக தீய பலன்கள் நடக்கும்.

    உடல் உறுப்புகள்

    காதுகள், கை, நரம்பு மண்டலம், தோள், கழுத்து.

    உறவுகள்

    முதல் தம்பி, தங்கை, மாமனார்

    4ம் வீடு ஆதிபத்தியம்

    இது தாயார் ஸ்தானம் என்று அழைக்கப் படுகின்றது. தாய், வீடு, வாகனம், நிலம், சுகம், சொத்து இவைகளை குறிக்கும்.

    இந்த வீட்டின் மூலம் அம்மாவின் இருப்பிடம், குடும்ப சூழல், பரம்பரை சொத்து மதிப்பு, ரகசிய வாழ்க்கை, அபத்தமான குற்றச்சாட்டுகள், சந்தோசமான வாழ்க்கை, மேல்நிலை கல்வி, தாய் வழி உறவுகள், சேமிப்பு, அப்பாவின் ஆயுள், புதையல், சாதியை அறிதல், ஒழுக்கம், தூரத்து உறவினர் ஆகியவைகளை பற்றி அறியலாம்.

    உறவுகள்

    தாய்

    5ம் வீடு ஆதிபத்தியம்

    இது பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம் என்று அழைக்கப் படுகிறது. 

    ஐந்தாம் இடம் நமது மனம், பூர்வ புண்ணியம், பாவ புண்ணியங்கள், நமது குழந்தை பிறப்பு, உற்சாகம், கலைத் திறன், உல்லாசம், காதல், சிற்றின்பம், ஜாலியாக பொழுது போக்குதல், நண்பர்களின் அதிர்ஷ்டம், விளையாட்டு கல்வி, கடவுள் நம்பிக்கை, நீதி மன்றம், மந்திர வார்த்தைகள், கற்பித்தல், திருப்தி நிலை, வரும்முன் அறியும் சக்தி, மனைவி வழி சொத்துக்கள், உறுதியான எண்ணம், கற்பனை வளம், இஷ்ட தெய்வம், முதுநிலை கல்வி, பெண்கள் கர்ப்பம் தரித்தல்/கருச்சிதைவு ஆகிய ஆதிப்பத்தியங்களை குறிக்கும்.

    இந்த இடம் வலுத்து இருந்தால் இந்த ஆதிபத்தியம் வழியாக நல்ல பலன்களையும் கெட்டு இருந்தால் தீய பலன்களும் நடக்கும்.

    உடல் உறுப்புகள்

    மேல் வயிறு.

    உறவுகள்

    முதல் குழந்தை, சகோதரியின் கணவன், சகோதரரின் மனைவி, இரண்டாம் தம்பி

    6ம் வீட்டின் ஆதிபத்தியங்கள்

    இந்த வீடு நோய், எதிரிகள் ஸ்தானம் என்று குறிப்பிடப் படுகிறது. 6,8,12ம் இடங்கள் தீய பலன்கள் அதிகமாக இருக்கும்.

    6ம் வீட்டின் மூலம் நோய், எதிரி, கடன், வம்பு, வழக்கு என்று நமக்கு தேவையில்லாத விசயங்களை ஏற்படுத்தும்.

    ஆறாம் வீடு ஆரோக்கியம் குறைபாடு, மன நோய், தாய் மாமன், உடலில் ஏற்படும் வீக்கம், பகை, கடன், வீண் பழி, எதிரியின் சந்தோசம், காயம், வலி, சோர்வு, பயம், நேரத்திற்கு சாப்பிடாத நிலை, பங்காளி தொல்லை, கண்டம், சேவை செய்தல், ஆபத்து, சகோதர சகோதரிகளிடம் கருத்து வேறுபாடு, வளர்ப்பு பிராணிகள், சிறுநீரக கோளாறு, ஜீரண சக்தி, நம் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள், விரோதங்கள், தடங்கல்கள், வெற்றி, கண் பிரச்சினை, சந்தேகம், பெண்களால் கலகம், அப்பாவின் தொழில், ஞாபக மறதி, பண நஷ்டம், சூதாட்டம் ஆகியவைகளை குறிக்கும்.

    6ம் வீட்டில் பாவ கிரகங்கள் அமர்ந்து கெட்டு இருந்தால் தான் நல்லது. அப்போது இந்த ஆதிபத்தியங்கள் வராமல் மாறி நல்ல பலன்கள் நடக்கும்.

    உறவுகள்

    மனைவி தாய் வழி தாத்தா, தாயின் தம்பி/தங்கை, தாய் மாமன்.

    7ம் வீடு ஆதிபத்தியம்

    ஏழாம் வீடு திருமணம், கணவன் மனைவி உறவு, கூட்டாளி ஸ்தானம் என்று குறிப்பிடப் படுகிறது.

    7ம் வீட்டின் மூலம் சட்டப்படி மணமுடித்த மனைவி, நண்பர்கள், அக்ரீமெண்ட்டில் சைன் போடுதல், பார்ட்னர்ஷிப் தொழில், சமூக தொடர்பு, சரளமாக பழகுதல், அம்மாவின் சொத்துக்கள், பிசிகல் ரிலேசன்ஷிப், திருட்டு பொருட்கள் திரும்ப கிடைத்தல், வேலை ஆட்களின் பணம், சுவையான உணவுகள், தத்து குழந்தைகள், துணி மணி வாங்குதல், கணவனின் கற்பு நிலை, நிர்வாக திறமை, கணவன்/மனைவியின் முழு தகவல், விந்தணுக்கள், வாக்கு வாதம் போன்றவைகளை அறியலாம்.

    இந்த வீடு வலுத்து இருந்தால் இதன் நல்ல பலன்கள் அமையும். கெட்டு இருந்தால் எதிலும் நல்ல பார்ட்னர் அமையாமல், இந்த ஆதிபத்தியங்கள் அமையாமல் கஷ்ட படுவர்.

    உறவுகள்

    மனைவி/கணவன், தாய் வழி பாட்டி, இரண்டாவது குழந்தை, மூன்றாம் தம்பி, தந்தை வழி பெரியப்பா

    8ம் வீடு ஆதிபத்தியம்

    இந்த வீடு ஆயுள், துஸ் ஸ்தானம் என்று அழைக்கப் படுகிறது.

    8ம் வீட்டின் மூலம் ஆயுள் காலம், மரணத்தின் தன்மை, செலவுகள், விபத்து, தேவையில்லாத வீண் பழி, இன்சூரன்ஸ் பணம், வரதட்சணை, எதிர்பாராத அதிர்ஷ்டம், அறுவை சிகிச்சை, லஞ்சம் வாங்குதல், அரசு தண்டனை, அடி படுதல், ஆராய்ச்சி செய்தல், வெளிநாட்டு பயணம், அவமானம், தற்கொலை, பங்கு சந்தை லாபம், சதி செய்தல், கொலை செய்தல், பில்லி சூனியம், பணத்தை இழத்தல், வீண் அலைச்சல், மனைவி வீட்டின் சொத்து போன்ற ஆதிபத்தியங்களை பெறலாம். இந்த வீடு வலுவாக இருந்தால் கெட்ட விசயங்கள் நிறைய நடக்கும்.

    அதே நேரத்தில் தீர்க்காயுள் இருக்கும். இந்த வீட்டில் சில நல்ல விசயங்களும் பல கெட்ட விசயங்களும் இருக்கும்.

    உறவுகள்

    தாய் வழி முப்பாட்டன், தாய் வழி பெரியப்பா, தாயின் அக்கா கணவர், தாய் மாமாவின் மனைவி

    9ம் வீடு ஆதிபத்தியம்

    இந்த வீடு பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப் படுகிறது. இதை தர்ம ஸ்தானம் என்றும் அழைப்பர்.

    9ம் வீடு நமக்கு கிடைக்கும் பாக்கியங்கள், அதிர்ஷ்டம், தந்தை, தெய்வ நம்பிக்கை, மதப் பற்று, ஆராய்ச்சி, நமது வம்சம், குளம், ஏரி, வழிபாடு தளங்கள், சட்ட நுணுக்கங்கள், தொலை தூர பயணம், மருந்து பொருட்கள், தர்ம சிந்தனைகள், தூய்மை, சத்தான உணவுகள், வேத சடங்குகள், பணப் புழக்கம், குரு பக்தி மற்றும் ஆசிர்வாதம், அரசு ஆதரவு, உயர்ந்த பதவி, தானம் ஆகியவைகளை குறிக்கும்.

    5ம் பாவம் போல 9ம் பாவமும் புத்திர பாக்கியத்தை குறிக்கும். 9ம் இடம் நல்ல நிலையில் இருந்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    உறவுகள்

    தந்தை, பேரன்/பேத்தி, மூன்றாம் குழந்தை, தங்கை கணவர், தம்பி மனைவி.

    10ம் வீடு ஆதிபத்தியம்

    இந்த வீடு தொழில் ஸ்தானம், ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம் என்று குறிப்பிடப் படுகிறது.

    நமது தொழில், வியாபாரம், நமது கர்மா, அந்தஸ்து, கௌரவம், வெளியுலக புகழ், நேர்மையான வெற்றி, அதிகாரம், பதவி உயர்வு, அரசு மரியாதை, விவசாயம், மருத்துவம், மந்திரம் போதித்தல், கற்கும் திறன், செல்வ செழிப்பு, முன்னேற்றம், அரசு பணி, ஆன்மீக ஈடுபாடு, எதன் மூலம் ஜீவனம் செய்கிறோம் போன்றவைகளை இந்த 10ம் வீடு குறிக்கும். 

    உறவுகள்

    மாமியார்

    11ம் வீடு ஆதிபத்தியம்

    இந்த வீட்டை லாப ஸ்தானம், மூத்த சகோதரர் ஸ்தானம் என்றும் குறிப்பிடலாம்.

    இந்த வீட்டின் மூலம் நண்பர்கள், எதிர் பார்ப்புகள், சப்போர்ட் செய்பவர்கள், ஆசைகள் நிறைவேறுதல், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுதல், வெளிநாட்டு வியாபாரம், வருமானம், பஞ்சாயத்து, நோயில் இருந்து குணமடைதல், மூத்த சகோதர சகோதரிகள், கடவுள் நம்பிக்கை, நல்ல செய்தி கிடைத்தல், அரசாங்க கடன், தீய விருப்பம், கூர்மையான அறிவு, மற்றவர்களை நம்புதல், அம்மாவின் ஆயுள், பெரிய மனிதர்களின் நட்புகள் போன்றவை பற்றி அறியலாம். இந்த வீடு வலுவாக இருக்க வேண்டும்.

    உடல் உறுப்புகள்

    இடது காது.

    உறவுகள்

    அண்ணன், மருமகன்/மருமகள், இரண்டாம் தாரம், சித்தப்பா.

    12ம் வீடு ஆதிபத்தியம்

    12ம் வீடு விரைய ஸ்தானம், மோட்ச ஸ்தானம் என்றும் அழைப்பர். இதை அயன சயன சுகத்தை குறிக்கும்.

    இந்த வீட்டின் மூலம் தாம்பத்திய சுகம், தூக்கத்தால் கிடைக்கும் நன்மைகள், செலவுகள், தொல்லைகள், நஷ்டங்கள், போதைக்கு அடிமை ஆகுதல், முதலீடு பணம், தனிமை, குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழ்தல், வெளிநாட்டு பயணம், தடை, வறுமை, சிறை வாசம், ரகசிய எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மை, எதிரிகளால் பயம், பயந்த சுபாவம், கேவலமான ரகசிய வாழ்க்கை, மன நோய் மருத்துவமனை, கற்பழிப்பு, விஷம் சாப்பிடுதல், தற்கொலை, வெளிநாட்டு குடியுரிமை, மன வருத்தம், பொதுமக்களின் பகை, மனைவியின் ஆரோக்கிய குறைபாடு, இடம் மாற்றம் ஆகியவைகளை அறியலாம்.

    12ம் வீட்டில் நிறைய தீய பலன்கள் இருப்பதால் இந்த வீடு கெட்டு இருந்தால் நன்மை அளிக்கும். இது வலுவாக இருக்க கூடாது.

    உறவுகள்

    தாய் வழி பாட்டன், தந்தை வழி பாட்டி


    பொறுப்புத் துறப்பு:
    இந்த ஜோதிட கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அல்லது கணிப்புகளின் நம்பகத் தன்மைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இங்கே உள்ள தகவல்கள் அனைத்தும் பல தரப் பட்ட ஊடகங்கள்/சொற்பொழிவுகள்/ஜோதிடர்கள்/செய்திகள் மற்றும் நாங்கள் கற்று தெரிந்த சில ஜோதிட அறிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து இங்கே வழங்கப் பட்டுள்ளன. எங்களின் நோக்கம் ஜோதிட தகவல்களை வழங்குவது மட்டும் தான். எனவே பயனாளர்கள் இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி கொள்வது முழுக்க முழுக்க பயனாளர்களின் பொறுப்பாகும்.

    Post a Comment

    0 Comments